/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
தைரியமானவளா மாற்றியதே மாரத்தான் தான்!
/
தைரியமானவளா மாற்றியதே மாரத்தான் தான்!
PUBLISHED ON : ஜன 07, 2025 12:00 AM

சென்னை, போரூர் மதனந்தபுரத்தைச் சேர்ந்த, 39 வயதாகும் பல் மருத்துவர் லோகேஷ்வரி கார்த்திகேயன்: திருமணமாகி, குழந்தை பிறந்ததும் கொஞ்சம், 'வெயிட்' போட்டுட்டேன். அதை குறைக்க, 'ஜிம்' செல்ல நினைத்தேன்.
அப்போது, சென்னை மாரத்தான் அமைப்போட போரூர் பிரிவின் ஒருங்கிணைப் பாளரான என் நண்பர் தான், 'நீங்க ரன்னிங் பண்ணலாமே...' என்றார்.
சரி முயற்சி செய்து பார்ப்போம் என்று, 2016ல் ஓட ஆரம்பித்தேன். துவக்கத்தில் சில மீட்டர் தான் ஓட முடிந்தது. முதலில் 5 கி.மீ., மாரத்தானில் பங்கேற்றேன்.
அந்த துாரத்தை கூட நடந்து தான் நிறைவு செய்தேன். அதன்பின் தொடர் பயிற்சி வாயிலாக சிறிது சிறிதாக முன்னேறி, 2 ஆண்டுகளுக்கு முன், 'முழு மாரத்தான்' என்று சொல்லப்படும், 42 கி.மீ., போட்டியில் பங்கேற்று, அந்த துாரத்தை கடந்தேன்.
இதுவரை 100க்கும் அதிகமான மாரத்தான்களில் பங்கேற்றுள்ளேன். மேலும், 21 மற்றும் 42 கி.மீ., மாரத்தான் ஓடுவதற்கு, நிறைய பெண்களுக்கு இலவச பயிற்சியும் கொடுக்கிறேன்.
வாழ்நாளில் மறக்க முடியாத முதல் முழு மாரத்தான் போட்டிக்காக, டில்லி சென்றிருந்தேன்.
போட்டிக்கு முதல் நாள், 'நம்ம ஊர் சாப்பாடு தான் வேண்டும்' என்று கேட்டு, உப்புமா வாங்கி சாப்பிட்டதில், 'புட் பாய்சன்' ஆகி, காய்ச்சலும், வாந்தியும் என்னை படுத்தி எடுத்து விட்டது.
மறுநாள் காலை, போட்டிக்கு எதுவும் சாப்பிடாமல் பட்டினியாக சென்றேன். என் ஒட்டுமொத்த ஆற்றலையும் திரட்டி ஓட ஆரம்பித்தேன்.
நானே எதிர்பார்க்காத வகையில் உடம்பு, என் சொல் பேச்சை கேட்டது. 32 கி.மீ., தாண்டியபோது தவறி விழுந்து, கையில், கால் முட்டியில் காயம்.
அங்கு இருந்த காவலர்கள் என்னை துாக்கி விட்டு, குடிக்க தண்ணீர் கொடுத்து அனுப்பி வைத்தனர். அடுத்து, எனக்கு தெரிந்த ஒருத்தரிடம் பேசியபடியே மிச்சம் இருக்கிற, 10 கி.மீ., துாரத்தை முடித்தேன்.
ரன்னிங் பயிற்சி தான் கடினமான சூழ்நிலையையும் கையாளும் மன தைரியத்தை கொடுத்தது. அதிகாலை ரன்னிங் செல்லும் போது சிலர் தொந்தரவு செய்திருக்கின்றனர்; ஆரம்பத்தில் அதை பார்த்து பயப்படுவேன்.
இப்போது அதை எதிர்கொள்ற அளவுக்கு தைரியமானவளா மாற்றியதும் ரன்னிங் தான்.
போட்டியில் நம் முன் ஓடும் பலர், நமக்கு இன்ஸ்பிரேஷனாகவும்; கூடவே ஓடி வரும் சிலர், நமக்கு சப்போர்ட்டாகவும் இருப்பர். நமக்கு பின்னால் ஓடி வரும் பலருக்கு, நாம் முன்னுதாரணமா இருப்போம். இதுதான் மாரத்தானின் சுவாரஸ்யமே!

