/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
இந்த ஆண்டு 'டிரெக்கிங்' செல்வதற்கு 'பிளான்' தயார்!
/
இந்த ஆண்டு 'டிரெக்கிங்' செல்வதற்கு 'பிளான்' தயார்!
இந்த ஆண்டு 'டிரெக்கிங்' செல்வதற்கு 'பிளான்' தயார்!
இந்த ஆண்டு 'டிரெக்கிங்' செல்வதற்கு 'பிளான்' தயார்!
PUBLISHED ON : ஜன 17, 2025 12:00 AM

மறைந்த நடிகர் ஜெமினி கணேசனின் பேத்தியும், பிரபல மருத்துவர் கமலா செல்வராஜின் மகளும், மகப்பேறு மற்றும் குழந்தையின்மை சிகிச்சை மருத்துவருமான பிரியா செல்வராஜ்: அம்மா, அப்பா இருவருமே மருத்துவர்கள். நானும், அண்ணனும் மருத்துவம், மருத்துவமனை சார்ந்த சூழலிலேயே வளர்ந்ததால், இருவருமே டாக்டருக்கு தான் படித்தோம்.
அம்மா சொன்னதை கேட்டு நானும், அவரது துறையான மகப்பேறு மருத்துவத்தையே தேர்வு செய்தேன்.
ஆனாலும், 'பிட்னெஸ்' தான் என் உயிர்நாடி. 2003ல் இருந்து பிட்னெஸில் கவனம் செலுத்துகிறேன். 'ஜிம்' பயிற்சி, யோகா, 'கார்டியோ' பயிற்சிகள் என, வாரத்தில் ஆறு நாட்கள் எனக்கு ஒர்க் அவுட் செய்தே ஆக வேண்டும்; ஒரு நாள் மிஸ் ஆனால் கூட, உடம்பு என் பேச்சை கேட்காத மாதிரியே தோன்றும்.
நான் மூன்று குழந்தைகளுக்கு தாயான பின் தான், அழகி போட்டியில் பங்கேற்க வாய்ப்பு வந்தது. 2007ல், 'மிஸஸ் சென்னை' டைட்டில் ஜெயித்தேன்.தொடர்ந்து, 'மிஸஸ் சவுத் இந்தியா' போட்டியில் பங்கேற்று, 'பைனலிஸ்ட்' ஆனேன்.
கொரோனா சமயத்தில் அப்பாவை இழந்து விட்டோம். என்னிடம் சிகிச்சைக்கு வந்து நண்பர்களாக மாறிய இருவர் கொரோனாவில் இறந்து விட்டனர்.
இந்த மன அழுத்தத்தை போக்குவதற்காக, எங்கேயாவது செல்லலாம் என்று நானும், தோழியும் முடிவு செய்தோம்.
கொரோனா இரண்டாம் அலைக்கு பின், பயணத்துக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும், இந்தியா - நேபாளம் எல்லையில் இருக்கிற, 'சந்தக்பூ பலுாட்' என்ற மலைக்கு, 'டிரெக்கிங்' சென்றோம். முழுக்க முழுக்க இயற்கையுடன் இணைந்து பயணித்த அந்த வாய்ப்பு, என்னை புதுப்பிக்க உதவியாக இருந்தது.
மலையில் டிரெக்கிங் போகும்போது, ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும். கிட்டத்தட்ட, 60 கிலோ வெயிட்டை துாக்கிட்டு ஏறணும்.
கீழே விழுந்தால் கூட காயங்கள் ஏற்படாமல், மறுபடி பயணத்தை தொடரும் அளவுக்கு, 'பிட்'டா இருக்கணும். மலை இறங்கும்போது, 'ரிஸ்க்' அதிகம். இடுப்பு, கால் மூட்டு, கணுக்கால் திறன் நல்லா இருக்கணும். அதனால், டிரெக்கிங் செல்வதற்கு என, தனியாக பயிற்சி எடுக்கிறேன்.
சமீபத்தில், எவரெஸ்ட் பேஸ் கேம்புக்கு சென்று வந்தேன். பொதுவாக மலையேற்றம் பண்ணும்போது, 'டென்ட்டில்' தான் தங்க வேண்டி இருக்கும்.
ஆனால், இங்கு மலையேறும்போது, தங்கும் இடங்கள் சின்ன வீடுகள் மாதிரி இருக்கும்; அதில் தங்கிய அனுபவமும் மிகவும் வித்தியாசமாக இருந்தது.
இந்த ஆண்டு டிரெக்கிங் செல்வதற்கு, கடந்தாண்டே பிளான் செய்து விட்டேன். அதற்கேற்றபடி, என் வேலைகளை முன்கூட்டியே முடித்து விடுவேன்.