/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
மீதமுள்ள பணத்தை எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும்!
/
மீதமுள்ள பணத்தை எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும்!
PUBLISHED ON : டிச 24, 2024 12:00 AM

பழம்பெரும் நடிகரான சி.எல்.ஆனந்தனின் மகளும், தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையுமான, 'டிஸ்கோ' சாந்தி: அப்பா சினிமாவில் பிசியாக இருந்தார்; வசதியாக வாழ்ந்தோம். ஆனால், அதன்பின் ஒரு பெரிய வீழ்ச்சி; சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம்.
குடும்பத்தை காப்பாற்றுவதற்காக, ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே சினிமாவில் நுழைந்தேன்.
நான் வீட்டில் மூன்றாவது பெண். ஆனால், தலைப்பிள்ளை மாதிரி அனைத்து பொறுப்புகளையும் நான் எடுத்து செய்தேன்.
எனக்கு, 'டான்ஸ்' வரவே வராது. டான்ஸ் கிளாஸ் சென்று கற்றுக் கொண்டு தான் என்னை மெருகேற்றிக் கொண்டேன்.
நானும், தெலுங்கில் ஹீரோவாக இருந்த ஸ்ரீஹரியும் காதலிக்க ஆரம்பித்த இரண்டாவது ஆண்டில், ஒரு ஜோசியர், 'இந்த நேரத்தில் நீங்க திருமணம் செய்து கொள்ளவில்லை எனில், அதன்பின் உங்களுக்கு திருமணமே நடக்காது' என கூறியதால், 1992ல் திடீரென திருமணம் செய்து கொண்டோம். அதன்பின் அவரவர் கேரியரில் கவனம் செலுத்தினோம்.
பின், 1996ல் ஊரறிய மீண்டும் திருமணம் செய்து கொண்டோம். திருமணத்திற்கு பின் நடிக்க பல வாய்ப்புகள் வந்தும் மறுத்து விட்டேன். எங்களுக்கு இரு மகன்கள் பிறந்தனர்.
சினிமா படப்பிடிப்பிற்காக, 2013ல் மும்பைக்கு சென்ற கணவர் ஸ்ரீஹரி, திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அங்கேயே இறந்து விட்டார் என்ற தகவல் கிடைத்ததும் என் உலகம் இடிந்து, காலில் விழுந்த மாதிரி ஆயிடுச்சு.
அவருடைய இழப்பால் மன அழுத்தம் அதிகமாகி, தீவிர மது பழக்கத்திற்கு ஆளாகி விட்டேன்.கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் அப்படியே இருந்தேன். என் எடை 45 கிலோவாக குறைந்தது. நான்கு முறை மருத்துவமனையில், 'அட்மிட்' ஆனேன்.
'இப்படியே போனால் ரொம்ப நாள் தாங்காது' என, மருத்துவர்கள் கூறிவிட்டனர். என் மகன்கள் தான், 'நீயும் போயிட்டால் எங்களுக்கு வேறு யார் துணை?' என்று கண்ணீர் ததும்ப கூறினர்.
அப்போது மதுவை விட்டவள் தான்... இப்போது வரை தொடவில்லை. கணவரின் நினைவுகள் தான் எனக்கு ஆறுதல்.
நான் நடிக்கிற காலம் முதலே, வசதி குறைந்த மாணவர்களின் கல்விச் செலவுகள், எளிய மக்களின் மருத்துவச் செலவுகள் என முடிந்த போதெல்லாம் உதவி செய்து இருக்கிறேன். அதை இப்போது வரை தொடர்கிறேன்.
'நம் தேவைக்கு போக, மீதமுள்ள பணத்தை எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும்' என்பதை என் பிள்ளைகளுக்கும் தொடர்ந்து சொல்லிக் கொடுக்கிறேன். போகும்போது நாம் எதை கொண்டு போகப் போகிறோம்.