‘வாழ்க்கை போராட்டம் நம் எல்லையை நிர்ணயிக்க கூடாது!’
‘வாழ்க்கை போராட்டம் நம் எல்லையை நிர்ணயிக்க கூடாது!’
PUBLISHED ON : நவ 05, 2026 12:00 AM

பல்கலை பேராசிரியை, ஆராய்ச்சியாளர், முனைவர், தமிழகத்தின் முதல் பெண் பாரா துப்பாக்கி சுடுதல் வீராங்கனை என பல அடையாளங்களை கொண்டிருக்கும், சென்னையைச் சேர்ந்த எழிலரசி:
காஞ்சிபுரம் மாவட்டம், கோனேரிக்குப்பம் தான் என் சொந்த ஊர். சராசரி குழந்தைகள் போல ஆரோக்கியமாகத் தான் பிறந்தேன். 2 வயதில் போலியோ தாக்குதலுக்கு ஆளானேன். அதன்பின் தினசரி வாழ்க்கையே சவாலாகி விட்டது.
உடல் ரீதியான தடைகளைவிட, சமூகத்தின் வார்த்தைகள் தான் அதிக வலியை தந்தது. ஆனாலும், குடும்பத்தின் அன்பும், ஆதரவும் மன வலிமையை தந்தன. மன உறுதியுடன் கணிதத்தில் இளங்கலை, முதுகலை, எம்.பில்., மற்றும் முனைவர் பட்டம் பெற்றேன். தற்போது, சென்னை பல்கலைக்கழகத்தில் கணித துறையில் உதவி பேராசிரியையாக பணியாற்றுவதுடன், ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகிறேன்.
எஸ்.ஆர்.எம்., கல்லுாரியில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்றபோது, ‘மாற்றுத்திறனாளி பெண்கள் விளையாட்டில் ஈடுபட வேண்டும்’ என்று ஊக்கமளித்தனர். இதனால், பயிற்சியாளர் வழிகாட்டுதலில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியை தொடங்கினேன். நான்கு மாதங்களிலேயே மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றேன். 10 மீட்டர், ‘ஏர் பிஸ்டல்’ பிரிவில், மாநில மற்றும் தேசிய அளவில் தங்கம் வென்று சாதனை படைத்தேன்.
தமிழ்நாடு மாநில, ‘வீல் சேர்’ வாள்வீச்சு சாம்பியன் பட்டத்திற்கான போட்டியில் தங்கம் வென்றிருக்கிறேன். இந்தாண்டு ராஜஸ்தானில் நடந்த தேசிய ‘வீல் சேர்’ வாள்வீச்சு சாம்பியன் பட்டத்திற்கான போட்டியில், மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றேன்.
இந்த விளையாட்டு பயணத்தில் என் கணவரின் ஆதரவு முக்கியமானதாக இருந்துள்ளது. பயிற்சி, போட்டிகள், குடும்ப பொறுப்புகள் என, பலவற்றை சமநிலைப்படுத்த வேண்டிய சூழலில், கணவர் தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறார்.
விளையாட்டில் ஏற்படும் தோல்வியையும் ஒரு பாடமாகவே பார்க்கிறேன். தோல்வி என்பது நமக்கு கொடுக்கப்படும் ஒரு செய்தி. நம் நிலையை எப்படி சரிசெய்வது என்று தோல்வி தான் சொல்லி தருகிறது. விளையாட்டில் ஈடுபடுவோர் இதை எப்போதும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மன உறுதி இருந்தால், நம்மை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. சவால்களுக்கு பயந்து இலக்கை நோக்கி பயணிக்க அச்சப்பட வேண்டியதில்லை. வாழ்க்கையே போராட்டம் தான்; அது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதத்தில் இருக்கிறது. அந்த போராட்டம் நம் எல்லையை நிர்ணயிக்கக் கூடாது. தடைகளை உடைத்துச் செல்லுங்கள்!
