/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
கர்ப்பிணியருக்கு இந்த சேவை கிடைக்க தமிழக அரசு உதவணும்!
/
கர்ப்பிணியருக்கு இந்த சேவை கிடைக்க தமிழக அரசு உதவணும்!
கர்ப்பிணியருக்கு இந்த சேவை கிடைக்க தமிழக அரசு உதவணும்!
கர்ப்பிணியருக்கு இந்த சேவை கிடைக்க தமிழக அரசு உதவணும்!
PUBLISHED ON : மே 25, 2025 12:00 AM

கர்ப்ப கால உயிரிழப்புகளை தடுக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில், 'ஒண்டர் மாம்' என்ற பெயரில் செயலி ஒன்றை உருவாக்கியுள்ள மருத்துவர் நர்மதா குப்புசாமி:
நாமக்கல் மாவட்டம், முத்துகாபட்டி கிராமம் தான் என் சொந்த ஊர். அப்பா தான் என்னை மருத்துவம் படிக்க வைத்தார். என் கண்ணெதிரில் நடந்த கர்ப்பிணி ஒருவரின் மரணம் தான், என்னை மகப்பேறு மருத்துவ துறையை தேர்ந்துஎடுக்க வைத்தது.
அமெரிக்காவில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், 38 ஆண்டுகள் பணியாற்றினேன்.
அங்கு, கர்ப்ப கால உயிரிழப்பு, பச்சிளங்குழந்தை உயிரிழக்க நேர்ந்தால், அதற்கான காரணங்களை ஆராய்வதற்கு என, ஒரு விசாரணை குழு இருக்கும். அவர்கள் அதன் காரணத்தை ஆராய்ந்து, அந்தந்த மாகாண அரசுக்கு அறிக்கை கொடுக்க வேண்டும்.
இறப்புக்கான காரணம், அதை தடுத்திருக்க முடியும் என்றால், அதற்கு என்ன செய்திருக்க வேண்டும் என்பதை குழு ஆராய்ந்து, அதற்கான வழிமுறைகளை மருத்துவர்களுக்கு கற்றுக் கொடுக்கும். அந்த விசாரணை குழுவில், 30 ஆண்டுகள் அங்கம் வகித்ததுடன், 20 ஆண்டுகள் தலைவராகவும் பணியாற்றி இருக்கிறேன்.
பணி ஓய்வுக்கு பின், கர்ப்ப கால உயிரிழப்புகளை தடுக்க உதவும் செயலிக்கான மென்பொருள் தயாரிப்பில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டேன்.
இந்த செயலியை கர்ப்பிணியர் தங்கள் ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். வீட்டில் ரத்த அழுத்தத்தை பரிசோதிக்கும் கருவியை உபயோகித்து, அதன் அளவை, செயலியில் பதிவிட வேண்டும்.
அதனுடன் தலைவலி, கண்ணில் பூச்சி பறக்கும் உணர்வு, கால் வீக்கம், வாந்தி வரும் உணர்வு, வயிற்று வலி உள்ளிட்ட என்னென்ன அறிகுறிகள் தென்படுகின்றன என்பதையும் செயலியில் பதிவிட வேண்டும்.
அது, அபாய அறிகுறியாக இருக்கும்பட்சத்தில், அந்த செயலியில் அலாரம் அடிக்கும்; கூடவே, 'உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுங்கள்' என்ற எச்சரிக்கை தகவலும் வரும்.
பச்சிளம் குழந்தைகளின் அபாய அறிகுறிகளை தாய்மார்கள் அறிந்து கொள்ளவும் செயலியையும் வடிவமைத்துள்ளோம். இந்த சேவை, நம் நாட்டில் உள்ள எளிய மக்களுக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும் என்பது தான் என் நோக்கம்.
இதை அரசுதான் செய்ய முடியும். எனவே, இப்போது தமிழக அரசை அணுகி இருக்கிறேன். இந்த செயலியை வடிவமைக்க, சில கோடிகள் செலவாகி விட்டன. என் சந்தோஷத்திற்காக, தன் ஓய்வு சேமிப்பிலிருந்து பொருளுதவி வழங்கியவர் என் கணவர் தான்.
'உன்னுடைய இந்த கடும் முயற்சிக்கு கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்' என்று ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார். அவருடைய நம்பிக்கையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும்.
****************
அரிய காய்கறி விதைகளை பரவலாக்கம் செய்துள்ளேன்!
நாட்டு ரக காய்கறி விதைகளை கேட்பவர்களுக்கு, 12 ஆண்டுகளாக இலவசமாக கொடுத்து வரும், சென்னை மாதவரம் அருகில் உள்ள மாத்துாரைச் சேர்ந்த வானவன்:நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பக்கத்தில் உள்ள வானவன் மாதேவி தான் என் சொந்த ஊர். நாங்கள் விவசாய குடும்பம். அப்பா கடுமையான உழைப்பாளி. என்னையும் விவசாய வேலைகள் பார்க்கச் சொல்லி கட்டாயப்படுத்தினார்.
பிளஸ் 2 முடித்த பின், சொந்த ஊரில் இருந்தால் வயல் வேலைகளில் இருந்து தப்பிக்க முடியாது என்ற பயத்தில், சென்னை வந்து தனியார் நிறுவனமொன்றில் வேலைக்கு சேர்ந்தேன். என் பணி சூழலும், உணவு முறையும் சிறிதுகூட ஒத்து வரவில்லை.
இதனால், 35 வயதிலேயே நீரிழிவு வந்து விட்டது.
ஆனால், என் அப்பா 95 வயதாகியும் கூட, எந்த நோய் நொடியும் இல்லாமல் ஆரோக்கியமாக நடமாடியபடி இருந்தார். அப்போது தான், வாழ்க்கையில் நாம் எவ்வளவு பெரிய தவறான முடிவெடுத்து விட்டோம் என உணர ஆரம்பித்தேன்.
ஆனாலும், ஊரில் விவசாயம் செய்ய எனக்கு நிலம் கிடைக்கவில்லை. இதனால், எங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைத்து, காய்கறிகள் சாகுபடி செய்ய ஆரம்பித்தேன். அதில் இருந்து விதைகள் சேகரித்து, நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு கொடுத்தேன். நாளடைவில், அவர்கள் வாயிலாக பலர் என்னை தொடர்பு கொண்டு விதைகளை கேட்க ஆரம்பித்தனர்.
அந்தளவிற்கு என்னால் விதைகள் உற்பத்தி செய்ய முடியவில்லை. முசிறி யோகநாதன் என்பவரிடம் இருந்து விதைகளை விலைக்கு வாங்கி, ஆர்வம் உள்ளவர்களுக்கு இலவசமாக கொடுக்க ஆரம்பித்தேன். இதற்காக ஒரு மாதத்திற்கு, 5,000 ரூபாய் செலவு செய்கிறேன்.
நாட்டு ரக விதைகள் கேட்பவர்களுக்கு, பல வகையான காய்கறி விதைகளை, தனித்தனி பொட்டலத்தில், ஒரே தொகுப்பாக தபால் வாயிலாக அனுப்பு
கிறேன்.
வெண்டை, சிறகு அவரை, மூக்குத்தி அவரை, இலவம்பாடி முள்ளு கத்தரி, வெள்ளை கத்தரி உள்ளிட்ட இன்னும் பல அரிய வகை காய்கறி விதைகளை பரவலாக்கம் செய்திருக்கிறேன். நான்கு ஆண்டுகளுக்கு முன், 'அத்தி' என்ற அமைப்பை உருவாக்கி, அரிய வகை மூலிகைகளை பரவலாக்கம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் அமைப்பில், 35 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
அவர்களுக்கு சொந்தமான இடங்களில் மூலிகை செடிகள் மற்றும் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து, பரவலாக்கம் செய்து வருகிறோம்.நாட்டு விதைகள், இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த, 'உயிர்வேலி, ஒரக்குழி' என இரண்டு புத்தகங்கள் எழுதி இருக்கிறேன்.