/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
பண்ணை முழுக்க சூரிய சக்தி மின்சாரம் தான்!
/
பண்ணை முழுக்க சூரிய சக்தி மின்சாரம் தான்!
PUBLISHED ON : ஏப் 25, 2024 12:00 AM

செங்கல்பட்டு மாவட்டம், வல்லிபுரம் கிராமத்தின் அருகில், ஜே.கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷன் அமைப்பின் கீழ் இயங்கி வரும், பாதசாலா உண்டு உறைவிட பள்ளியின் இயக்குனர் கவுதமா:
'எப்போதுமே தொலைவில் இருப்பதை பாருங்கள். அருகில் இருப்பது தானாகவே தெரியும்' என்று தத்துவ மேதை ஜே.கிருஷ்ணமூர்த்தி சொல்வார். இப்போதைக்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பதைவிட வருங்காலத்துக்கு எது சரிவருமோ அதை செய்ய வேண்டும். அப்படி தான் இந்த பள்ளியில் இயற்கை விவசாயம், நாட்டு மாடுகள் வளர்ப்பு, உலர் கழிப்பறை, சூரிய சக்தி மின்சாரம், சூழலுக்கு இசைவான கட்டடங்கள், மனப்பாடம் இல்லாத புரிந்து படிக்கும் முறை என்ற பலவிதமான விஷயங்களை செயல்படுத்தி வருகிறோம்.
ஆசிரியர், மாணவர் என்ற பாகுபாடில்லாமல் வட்ட மேஜையின் முன் தரையில் அமர்ந்து ஒருவருக்கொருவர் உரையாடுவதன் வாயிலாக பாடம் கற்கின்றனர்.
இப்பள்ளியில் தண்ணீர் இல்லாமல் செயல்படுத்தி வரும் உலர் கழிப்பறை, அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. பள்ளிக்கு தேவையான அரிசியின் ஒரு பகுதி இங்கேயே உற்பத்தி செய்யப்படுகிறது. சுற்றியிருக்கும் விவசாயிகளிடம் இருந்து செக்கு எண்ணெய், சிறுதானியங்கள், காய்கறிகள், பழங்கள் வாங்கி பயன்படுத்துகிறோம்.
மொத்தம் 100 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த இடத்தை சுற்றிலும் கிராமங்கள் இருப்பதால் அதிலிருந்து அந்நியப்பட்டு விடக் கூடாதென்று, அடுக்குமாடி கட்டடங்கள் கட்டாமல், சூழலுக்கு இசைவான மஹாராஷ்டிரா மாநிலம், வார்தா காந்தி ஆசிரமத்தில் உள்ள கட்டடங்கள் போல் பள்ளிக் கட்டடத்தை வடிவமைத்தோம்.
இந்த பண்ணை முழுக்கவே சோலார் மின்சாரம் தான். சமீபத்தில் தான் மின் இணைப்பு பெற்றோம்; இருந்தாலும் சோலார் மின்சாரத்தை தான் பிரதமானமாக பயன்படுத்தி வருகிறோம். இங்கே, 'ஏசி' கிடையாது. அதேபோல சமையலறை கழிவுகளை பயன்படுத்தி, பயோ காஸ் தயாரிக்கிறோம். சமையலறை கழிவுநீரை சுத்திகரித்து தோட்டங்களுக்கு விடுகிறோம்.
சிறியதே அழகானது என்ற முறையில், காணி நிலத்தில் என்ன விவசாயம் செய்யலாம், அதை லாபகரமாக செய்வதற்கான திட்ட அறிக்கையை மாணவர்கள் தயார் செய்தனர். அதை அருகிலுள்ள கிராம மக்களுக்கு வழங்கி, விவசாயத்தில் எப்படி லாபம் ஈட்டலாம் என்பதற்கு வழிகாட்டியிருக்கிறோம்.
இங்கிருக்கும் ஆசிரியர்களை தவிர்த்து மற்ற எல்லா பணியாளர்களும் சுற்றியிருக்கும் கிராமங்களை சேர்ந்தவர்கள் தான். 50க்கும் மேற்பட்டோர் இதனால் பலனடைந்து வருகின்றனர். இந்த பள்ளியையும், உலர் கழிப்பறை தொழில்நுட்பத்தையும், இங்கே நடைபெறும் விவசாயத்தையும் பார்க்க விரும்புவோர், முன் அனுமதி பெற்று வரலாம்.
தொடர்புக்கு: 72999 38913/17
மின்னஞ்சல் - office@pcfl-kfi.org
***

