PUBLISHED ON : அக் 31, 2026 12:00 AM

கடல் மாசுபாடு, கடல் உயிரினங்களை பாதுகாப்பது குறித்து, பள்ளி, கல்லுாரி மற்றும் சமூக அமைப்புகள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும், சென்னை காரப்பாக்கத்தைச் சேர்ந்த, 12 வயதான ஆராதனா:
என் அப்பா, சுவாசக் கருவி உதவியுடன் கடலுக்கு அடியில் மூழ்கி நீந்தும், ‘ஸ்கூபா டைவிங்’ பயிற்சியாளர். அதனால், சிறு வயதிலேயே எனக்கும் நீச்சல் சொல்லிக் கொடுத்து விட்டார். 8 வயதிலேயே, ஆழ்கடலில் மூழ்கும் பயிற்சிக்கான உரிமமும் வாங்கி விட்டேன்.
ஆழ்கடலில் நீந்த ஆரம்பிக்கும்போது, அழகான உலகத்தை பார்க்கப் போகிறேன் என்று நினைத்தேன். ஆனால் நான் பார்த்ததோ, குப்பைகள் தான். குப்பைகளுக்கு நடுவில் தான் மீன்கள் வாழ்கின்றன. அப்போது தான், கடல் துாய்மைக்கான தேவை புரிந்தது.
கடலை சுத்தம் செய்யும் வேலையையும் அப்பா செய்து வந்தார்; ‘நானும் வருகிறேன்’ என்றேன். கடலில் நீந்துவது வேறு; சுத்தம் செய்வது வேறு. சுத்தம் செய்ய சகிப்புத்தன்மை அவசியம். நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து சுத்தம் செய்து வருகிறேன். இதுவரை, 7,000 கிலோ குப்பைகளை கடலுக்குள் இருந்து எடுத்து வந்துள்ளேன். கடலுக்குள் செல்லும்போது, குப்பைகளை சேகரிக்கும் பைகளை எடுத்துச் செல்வேன்.
கடலோ, கரையோ நாம் மட்டும் சுத்தம் செய்தால் போதாது. குப்பை கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு கொடுக்க வேண்டும். அதனால், கடலுக்கடியில் நடனமாடுவது, கிரிக்கெட் விளையாடுவது என்று வித்தியாசமான முயற்சிகளையும் விழிப்புணர்வுக்கான ஒரு வழியாக பயன்படுத்தி வருகிறேன்.
கடந்த 2022ல் கோவளம் முதல் நீலாங்கரை வரை 19 கி.மீ., நீந்தியது, இலங்கையில் இருந்து இந்தியா வரை நீந்தியது என, என் ஒவ்வொரு முயற்சியும், கடலை பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தை மையப்படுத்தியே இருந்தன.
அவற்றை பார்த்து விட்டு இப்போது, 40 பேர் கடலையும், கடற்கரையையும் சுத்தம் செய்ய என்னுடன் இணைந்துள்ளனர். கடல் பசுக்கள் பாதுகாப்பை என் இலக்காக வைத்திருக்கிறேன். அதேபோன்று, ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த ஒரு உயிரினத்தை தேர்ந்தெடுத்து, அதை எப்படி பாதுகாக்கலாம் என்று யோசிக்கணும்.
வாரத்தில் மூன்று நாட்கள் காலை பொழுதை, கடலை சுத்தம் செய்ய ஒதுக்குகிறேன். என்னை சுற்றி இருக்கும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அனைவருக்கும் தேவை. ஆரோக்கியமான, துாய்மையான சமூகத்தை நாம் தான் உருவாக்க வேண்டும்.
ஏனெனில், உலகம் மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமானது இல்லை; அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் கடமை அனைவருக்கும் உண்டு.
