PUBLISHED ON : ஜூன் 19, 2026 12:00 AM

மதுரையில் நுாறாண்டுகளை தாண்டி இயங்கி வரும், 'மதுரை கல்லுாரி'யின் தாவரவியல் துறை பேராசிரியர் சரவணன்:
சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் விதமாக, மதுரையில் பசுமையான காட்டை உருவாக்க வேண்டும் என, கல்லுாரி நிர்வாகம் முடிவு செய்தது. இக்கல்லுாரியின் மொத்த பரப்பளவு 47 ஏக்கர். கட்டடங்கள் போக, மீதி இடத்தில் நிறைய மரங்களை வளர்க்க முடிவெடுத்தோம்.
மழை பெய்தால், அதிகமாக தண்ணீர் தேங்கும் இடங்களில் குறுங்காடுகளை உருவாக்க விரும்பினோம். மாணவர்களுக்கு பசுமை சார்ந்த கல்வி கற்பிக்கும் நோக்கிலும், மதுரையின் சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் விதமாகவும் இதை உருவாக்க திட்டமிட்டோம்.
கல்லுாரி வாரியமும், அரிமா சங்கமும் இணைந்து, 15 லட்சம் ரூபாய் செலவில், 3.5 ஏக்கர் பரப்பில் குறுங்காடு உருவாக்கும் திட்டத்தை, 2022ல் செயல்படுத்தின. 95 சதவீதம் அளவுக்கு தமிழகத்தின் நாட்டு ரக மரக்கன்றுகளையே வாங்கி நடவு செய்தோம்; அவை இன்று நன்கு வளர்ந்துள்ளன.
மொத்தம், 110 வகையான மரங்கள் இருப்பதால், பல உயிரினங்கள் இங்கு வாழ்கின்றன. அழிவின் விளிம்பில் உள்ள, அரிய வகை நாட்டு மரங்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், அவை குறித்து மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளோம். அதிக அளவு ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுவதால், 'மதுரையின் நுரையீரல்' என கருதப்படும் அளவுக்கு, இக்குறுங்காடு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பள்ளி மாணவர்களை அழைத்து வந்து, மரம் வளர்ப்பின் அவசியம் மற்றும் அதன் பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பல கல்லுாரிகளில் படிக்கும் தாவரவியல் மற்றும் உயிரியல் மாணவர்களுக்கும் இது நேரடி களப்பயிற்சி மையமாக பயன்படுகிறது.
குறுங்காடு உருவாக்கப்பட்ட பின் செய்த மண் பரிசோதனையில், நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷியம் உள்ளிட்ட சத்துக்களின் அளவு, 70 சதவீதம் வரை உயர்ந்திருப்பது உறுதியானது. நவீன யுக மாற்றத்தாலும், மக்கள் தொகை பெருக்கத்தாலும், சுற்றுச்சூழல் மிகவும் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. இதனால் ஏற்படும் பேராபத்துகளை தடுக்க, குறுங்காடுகளை உருவாக்குவதே சிறந்த வழி.
நிலம் உள்ளவர்கள் குறைந்தபட்சம், 10 சதவீத பரப்பிலாவது குறுங்காடு உருவாக்க வேண்டும். மாவட்ட வனத்துறையை அணுகி, இலவசமாக மரக்கன்றுகளை பெறலாம். லாப நோக்கில் மரங்கள் வளர்க்க விரும்பினால், அரசு அனுமதியுடன் தேக்கு, செம்மரம் போன்ற வணிக மரங்களையும் வளர்க்கலாம்.
