தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/'ஒரு தொழிலை ஆரம்பியுங்கள் இப்போதே!'

'ஒரு தொழிலை ஆரம்பியுங்கள் இப்போதே!'

'ஒரு தொழிலை ஆரம்பியுங்கள் இப்போதே!'


PUBLISHED ON : செப் 26, 2026 04:20 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 26, 2026 04:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பீடி சுற்றும் பெண் தொழிலாளிகளை மீட்டு, 'கொற்றவை' என்ற அமைப்பின் வாயிலாக, தொழில் முனைவோராக உருவாக்கி வரும் காருண்யா குணவதி: நான், 'எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்' படித்துள்ளேன். நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கிட்டத்தட்ட 5 லட்சம் பெண்களின் வாழ்வாதாரமே பீடி சுற்றும் தொழில் தான். நீண்ட நேரம் அமர்ந்தபடியே வேலை செய்வதால் முதுகு வலி, புகையிலையை கையாள்வதால் ஆஸ்துமா பாதிப்பு, புற்று நோய் அச்சம் என்று பலவித சிரமங்களை பெண்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

அவர்களுக்கு கிடைக்கும் கூலியும் குறைவு. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று களத்தில் இறங்கினேன். அவர்களை ஒருங்கிணைத்து சுய உதவிக்குழுக்களை உருவாக்கினேன். அவர்கள் தொழில் முனைவோராக மாற, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து எளிதாக நிதி உதவி கிடைத்தது. இதுபோல், ஓராண்டில் 55 பெண்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறேன். அடுத்த ஐந்து ஆண்டுகளில், 10 ஆயிரம் பெண்களை தொழில் முனைவோராக மாற்ற வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் நகர்கிறேன். எங்களின் தயாரிப்புகள் இரு பிரிவுகளின் கீழ் தரம் பிரிக்கப்பட்டு, சந்தைப்படுத்தப்படுகின்றன.

ஆரோக்கியமான உணவு பொருட்கள் என்ற பிரிவில், ரசாயனங்கள் கலக்காத கருப்பு உளுந்து, முருங்கைக்கீரை, இட்லி பொடி வகைகள், சிறுதானிய தோசை மற்றும் சத்துமாவு கஞ்சி பொடி செய்கிறோம். அதேபோல, சுற்றுச்சூழலுக்கு உகந்த கைவினை பொருட்கள் வகையில், கைகளாலேயே செய்யும், 'டெரகோட்டா' எனப்படும் களிமண் நகைகள், தேங்காய் சிரட்டை கப்கள் மற்றும் பனை ஓலை பைகள் தயாரிக்கிறோம். நாங்கள் செய்யும் தொழில், இந்த மண்ணை கெடுக்கக் கூடாது; இயற்கையுடன் இயைந்ததாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்த தொழில்களை செய்கிறோம்.

பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் மிக முக்கியம். ஏதோ ஒரு திறமை எல்லாருக்கும் இருக்கும்; சமைக்க மட்டுமே தெரியும் என்றாலும்கூட, அதையும் நான்கு பேருக்கு செய்து கொடுத்து, அதற்கான பணத்தை பெற்றுக் கொள்ள பழக வேண்டும். பணம் சம்பாதிப்பதை ஒரு பழக்கமாக மாற்றிக் கொண்டால் அந்த தேடலும், ஆர்வமும் தானாகவே வந்து விடும். எனவே, முதலில் ஆரம்பிக்க வேண்டும்; அவ்வளவு தான். எல்லாவற்றையும் கற்றுத் தேர்ந்து, களத்தில் இறங்க வேண்டும். சரியான நேரம் வர வேண்டும் என்று சிலர் தயங்கிக் கொண்டிருப்பர். ஆனால், அப்படிப்பட்ட தயக்கங்கள் தேவையில்லை. நம் உள் மனதிற்குள் ஒரு விஷயம் தோன்றுகிறது. அதனால், பெரிதாக பண இழப்பு இல்லையெனில் கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள்; அதுவும் இப்போதே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us