தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்


PUBLISHED ON : அக் 02, 2026 04:00 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 02, 2026 04:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

‘பல பயிர்கள்

சாகுபடியில்

ஆண்டுக்கு

ரூ.7 லட்சம் லாபம்!’

இயற்கை விவசாயத்தில் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து, நிறைவான லாபம் ஈட்டி வரும், சேலம் மாவட்டம், திருமலைபுரி கிராமத்தைச் சேர்ந்த, 50 வயதாகும் பழனிமுருகன்:

என் அப்பா, விவசாயத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்; சொட்டு நீர் பாசனம் அறிமுகமான காலத்திலேயே, அதை அமைத்து, இயற்கை விவசாயம் செய்தார். நான், 10ம் வகுப்பு முடித்ததும், அப்பாவுடன் சேர்ந்து முழு நேர விவசாயி ஆனேன்.

இயற்கை இடுபொருளுக்காக எங்கள் தோட்டத்தில் 20 பசுக்கள், 10 எருமை மாடுகள், ஆடு, கோழிகள் என வளர்த்ததால், எங்களுக்கு எரு உரத்திற்கு பஞ்சமே இல்லை. மண் வளமாக இருந்தால், விளைச்சலும் செழிப்பாக இருக்கும்.

அப்பாவிற்கு பின் சொத்து பிரித்தபோது எனக்கு ஐந்து ஏக்கர் நிலம் கிடைத்தது; அதில் தனியாக விவசாயம் செய்கிறேன். சொட்டு நீர் பாசனம் அமைத்துள்ளதால், எல்லா பயிர்களுக்கும் சீரான முறையில் தண்ணீர் கிடைக்கிறது. இரண்டு ஏக்கரில், 150 வீரிய ரக தென்னை மரங்கள் இருக்கின்றன.

தென்னைகளுடன் ஊடுபயிராக, ‘கொம்பு’ அவரையை சாகுபடி செய்துள்ளேன். இதனால், மண்ணில் ஈரப்பதம் இருந்தபடியே இருக்கும்; 60ம் நாளில் இருந்து மகசூல் கிடைக்கும். அடுத்த நான்கு மாதங்களுக்கு காய்கள் பறிக்கலாம். தவிர தேன் வாழையில், 800 கன்றுகள் நடவு செய்துள்ளேன்; 13 – 14 மாதங்களில் அறுவடைக்கு வரும்; நல்ல விலை கிடைக்கிறது.

அரை ஏக்கரில் பயிரிட்டுள்ள வீரிய ரக கொய்யாவில், 120 மரங்கள் இருக்கின்றன. கன்றுகள் நடவு செய்து மூன்று ஆண்டுகள் கழித்து, கடந்தாண்டு முதல் மகசூல் கிடைக்கிறது. கொய்யாவில் ஊடுபயிராக பூசணி சாகுபடி செய்துள்ளேன்; விதைத்த 60ம் நாளில் அறுவடை செய்யலாம். அரை ஏக்கரில் நீல நிற கத்தரிக்காய் சாகுபடி செய்கிறேன்; நடவு செய்த 60ம் நாளில் இருந்து காய்களை அறுவடை செய்யலாம். அதில் இருந்து ஆறு மாதங்கள் வரை காய்கள் கிடைக்கும்.

மீதி அரை ஏக்கரில் நாட்டு ரக வெண்டைகள் சாகுபடி செய்கிறேன்; விதைத்த 50ம் நாளில் இருந்து காய்கள் அறுவடைக்கு வரும்; அடுத்த இரு மாதங்கள் வரை காய் பறிக்கலாம்.

மொத்தம் ஐந்து ஏக்கரில், எல்லா பயிர்களிலும் சேர்த்து ஆண்டுக்கு, 7 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் லாபம் கிடைக்கிறது. மொத்த குடும்பமும் உழைப்பதாலும், நேரடியாக விற்பனை செய்வதாலும் இந்த லாபம் சாத்தியமாகிறது.

நான் தனியாக விவசாயம் செய்ய ஆரம்பித்து, 16 ஆண்டுகள் ஆகின்றன. ஒருமுறை கூட ரசாயன உரமோ, பூச்சிக்கொல்லியோ பயன்படுத்தியது இல்லை. உழவர் சந்தையில் கடை அமைத்து, விளைபொருட்களை நேரடியாக விற்பனை செய்கிறேன். அதனால், என் உழைப்புக்கும், முதலீட்டுக்கும் ஏற்ற நிறைவான லாபம் கிடைக்கிறது.

தொடர்புக்கு: 99651 35751

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us