PUBLISHED ON : அக் 24, 2026 12:00 AM

'அரசு சார்பாக வீடு கிடைத்தால் நிம்மதியாக இருப்போம்!'
நாற்காலிகளுக்கு ஒயர் பின்னும் பணி செய்து வரும், சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதி இளங்கோ - பிரேமா:
* இளங்கோ: வேலுார் மாவட்டம், மாங்குப்பம் கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். 3 வயதில் எனக்கு கண் இமைகள் மிகவும் நீளமாக இருக்கிறது என்று, அந்த முடிகளை வெட்டி விடுவதற்கு பதில், குச்சியில் நெருப்பு வைத்து பொசுக்கி இருக்கின்றனர். அந்த புகை கண்களுக்குள் சென்று, பார்வை முழுதும் பறிபோய் விட்டது.
பாட்டி தான் என்னை வளர்த்தார். 1983ல் திருச்சியில் உள்ள தொண்டு நிறுவனத்தில், நாற்காலிகளுக்கு ஒயர் பின்னும் வேலையை கற்றுக் கொண்டேன்.
எங்கப்பாவிற்கு இரு மனைவியர். நான் முதல் தாரத்து மகன். அப்பாவுக்கு சொந்தமான நிலம் ஒன்று எங்களுக்கு வர வேண்டும்; பல ஆண்டுகளாக சட்டப்படி முயற்சி செய்தும் வாங்க முடியவில்லை. தற்போது வேறு வகை நாற்காலிகள் வந்து விட்டதால், முன்பு போல் வாய்ப்புகள் இல்லை. வரும் வருமானத்தில் வீட்டு வாடகை கூட கட்ட முடியவில்லை. அரசு சார்பாக எங்களுக்கு வீடு கிடைத்தால், எஞ்சிய நாட்களில் நிம்மதியாக இருப்போம்.
* பிரேமா: எனக்கு வேலுாரில் இருக்கும் பிச்சநத்தம் கிராமம் தான் பூர்வீகம். எட்டாம் வகுப்பு படிக்கும் வரை பார்வை நன்றாகவே இருந்தது. திடீரென தலைவலி வந்து ரொம்ப நாள் கஷ்டப்பட்டேன்; மருத்துவரிடம் சென்றபோது, 'பார்வை நரம்பு துண்டித்திருக்கிறது' என்று கூறினார். சிறிது சிறிதாக பார்வை போனது.
திருச்சியில் பயிற்சி மையத்தில் சேர்த்து விட்டனர். டெய்லரிங், கூடை பின்னுவது, நாற்காலிகளுக்கு ஒயர் பின்னுவது என கற்றுக் கொண்டு, மூன்று ஆண்டுகள் அங்கேயே இருந்தேன். என் கணவரின் அக்கா, அந்த பயிற்சி மையத்தில் எனக்கு தோழியாக அறிமுகமானார். அவர் தான் எங்களுக்கு திருமணம் செய்து வைத்தார்.
நான் கர்ப்பமான போது, 'உங்கள் இருவருக்குமே பார்வையில்லை. பிறக்கும் குழந்தைகள் எப்படி இருப்பாங்க என்று தெரியாது' என்று மருத்துவர்களே பயமுறுத்தினர். நாங்கள் கடவுளை நம்பினோம். எந்த குறையும் இல்லாமல் இரு ஆண் குழந்தைகள் பிறந்தன. உறவினர்கள், அக்கம் பக்கத்தினர், குழந்தைகளை வளர்க்க உதவியாக இருந்தனர்.
கடந்த 1986ல் பிழைப்பிற்காக சென்னை வந்தோம். ஆரம்ப நாட்கள் மிகவும் சவாலாகவே இருந்தன; எந்த இடமும் தெரியாது. ஆனாலும், சென்னை எங்களை வாழ வைக்கும் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது. மனிதர்களுடன் பேசி பேசி வாய்ப்புகள் வாங்க ஆரம்பித்தோம். செங்கல்பட்டு, திருவள்ளூர் வரை சென்று வேலை பார்த்து வருகிறோம்.
* இவர்களது போன் நம்பர் கிடைக்காததால், வயது சேர்க்க முடியவில்லை பாஸ்!
