'உயிரை காப்பாற்றிய சிட்டு குருவிகளுக்கு சரணாலயமான வீடு!' 'மக்களின் உடல்நலனுக்கு நன்மை செய்யக்கூடிய தொழில் செய்கிறேன்!'
'உயிரை காப்பாற்றிய சிட்டு குருவிகளுக்கு சரணாலயமான வீடு!' 'மக்களின் உடல்நலனுக்கு நன்மை செய்யக்கூடிய தொழில் செய்கிறேன்!'
PUBLISHED ON : செப் 06, 2026 12:00 AM

தன் வீட்டையே சிட்டுக் குருவிகளுக்கான சரணாலயமாக மாற்றியுள்ள, கோவை மாவட்டம், காந்தையூர் கிராமத்தைச் சேர்ந்த, 50 வயதாகும் குருசாமி:
சில ஆண்டுகளுக்கு முன், வீட்டில் கோழிகள் வளர்த்து வந்தேன். அவற்றுக்கு போடும் தீவனத்தை சாப்பிட சிட்டுக்குருவிகள் வந்து செல்வது வழக்கம்; அவற்றை விரட்ட மாட்டேன். அதனால், நிறைய சிட்டுக்குருவிகள் வர ஆரம்பித்தன.
அவற்றுக்கும் சேர்த்து தீவனங்கள் வைக்க ஆரம்பித்தேன். இதனால், சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. ஒரு நாள் நள்ளிரவு நேரத்தில், காட்டு யானை ஒன்று எங்கள் ஊருக்குள் புகுந்து விட்டது. நான் வீட்டு முன்னால் கட்டில் போட்டு துாங்கிக் கொண்டிருந்தேன்.
தெருவில் சென்ற யானையை பார்த்து எங்கள் வீட்டு நாய் குரைக்கவும், கோபமான யானை அதை துரத்தியபடியே வந்தது. பயத்தில் நாய் சத்தமில்லாமல் என் கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொண்டது.
வீட்டுக்கு முன் இருந்த பெரிய மரத்தை தாண்டி, யானையால் வர முடியவில்லை. கோபத்தில் மரத்தை முறிக்க பார்க்கவும், மரத்தில் இருந்த சிட்டுக்குருவிகள் எல்லாம், 'கீச் கீச்' என கத்தியபடியே பறக்க ஆரம்பித்தன. அந்த சத்தம் கேட்டு, யானை அப்படியே நின்றது. சிட்டுக் குருவிகளின் சத்தம் கேட்டு நானும் விழித்துக் கொண்டேன்.
வீட்டு வாசலில் யானையை பார்த்ததும் எனக்கு பயத்தில் கை, கால்கள் ஓடவில்லை. யானை, மரத்தை முறித்து உள்ளே வர முயற்சித்துக் கொண்டிருந்தது. அப்போது, சிட்டுக்குருவிகள் சத்தம் போட்டபடியே பறக்க, யானை உள்ளே வராமல் தயங்கி நின்றது. நான் வீட்டுக்குள் ஓடிவிட்டேன். யானை ஒருமுறை பிளிறிவிட்டு திரும்பி சென்று விட்டது; அன்று என்னை காப்பாற்றியது, சிட்டுக்குருவிகள் தான்.
அந்த சம்பவத்திற்கு பின், எனக்கு சிட்டுக்குருவிகள் மீது பாசம் அதிகமானது; வீடு முழுக்க, 50க்கும் மேற்பட்ட கூடுகள் வைத்துள்ளேன். என் வீட்டை குருவிகளின் சரணாலயமாக மாற்றிய பின், ஒருமுறை கூட காட்டு யானையின் அச்சுறுத்தல் ஏற்படவில்லை.
குருவிகள் பெரும்பாலும் மனிதர்களை சார்ந்து வாழும் பறவைகள். வீடுகளில் உள்ள துவாரங்கள் மற்றும் இடுக்கான பகுதிகளில் தான் கூடு கட்டும். நாம் வீடு கட்டும் முறையை மாற்றியதால், குருவிகளின் வாழ்விடங்கள் குறைந்து கொண்டே வருகின்றன.
சிட்டுக்குருவிகள் அழிந்தால், உலகின் உணவு சங்கிலியில் மாற்றம் ஏற்பட்டு, மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படும். குருவிகள் வீட்டுக்கு வந்தால், தானியங்கள் போடுவதுடன், சிறு பாத்திரத்தில் தண்ணீரும் வைக்க வேண்டும். அட்டை பெட்டிகளில் கூடுகள் செய்து வைத்தால், சிட்டுக்குருவிகளும் நம்முடன் வசிக்கும்.
தொடர்புக்கு: 99766 13699.
'மக்களின் உடல்நலனுக்கு நன்மை செய்யக்கூடிய தொழில் செய்கிறேன்!'
எனக்கு தொழில் முனைவோர் ஆக வேண்டும் என்று ஆசை. எம்.பி.ஏ., படித்து முடித்ததும், காரைக்குடியில் ஒரு சைக்கிள், 'ஷோரூமில்' வேலை பார்த்தபடியே, என்ன தொழில் செய்யலாம் என்று யோசித்தேன். குறைவான முதலீட்டில் மக்களுக்கு நன்மை தரக்கூடிய, சில ஆரோக்கிய உணவு வகைகளை தயார் செய்து, சாலையோரம் கடை போட்டு விற்பனை செய்யலாம் என்று முடிவெடுத்தேன்.
நண்பர்கள், உறவினர்கள் அனைவரும், 'எம்.பி.ஏ., படித்து விட்டு, சாலையில் கடை வைக்கலாமா?' என்று கேட்டனர். ஆனால், கணவரும், என் குடும்பத்தினரும் முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக கூறினர்.
காலை 6:00 மணிக்கு தேங்காய் பால், வெண்பூசணி, கேரட் சாறு, பீட்ரூட் சாறு, நெல்லிக்காய் சாறு, வாழைத்தண்டு சாறு, பாசிப்பயறு, கொள்ளு சுண்டல் என விற்பனை செய்து வருகிறேன். காரைக்குடி மாநகராட்சிக்கு தினமும், 50 ரூபாய் செலுத்தி விடுவதால், காவல் துறையினரின் முறையான ஒத்துழைப்பும் கிடைக்கிறது.
லாப நோக்கம் மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்துக்கு அதிக முக்கியத்துவம் தருகிறேன். இந்த கடைக்கு நான் செய்த முதலீடு 5,000 ரூபாய் தான். சில பாத்திரங்கள், 'பார்சல் கப்' உள்ளிட்ட சில பொருட்கள் மட்டும் தான் வாங்கினேன். அதிகாலை 3:00 மணிக்கு எழுந்து எல்லாவற்றையும் தயார் செய்து, எடுத்து வருகிறேன்.
ஆரம்பித்த புதிதில் பெரிதாக வியாபாரம் இல்லை. சோர்வடைய ஆரம்பித்த போது, நடைபயிற்சிக்கு வரும் சிலர், என் கடை குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அதன்பின், மக்கள் மத்தியில் என் கடைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 'எசன்ஸ்' எனப்படும், உணவின் சுவை, மணத்திற்காக சேர்க்கப்படும் செறிவூட்டப்பட்ட திரவம் மற்றும் நிறமூட்டிகள் எதுவும் பயன்படுத்துவதில்லை. உற்பத்தி செலவுடன், குறைவான லாபம் வைத்து தான் விற்பனை செய்கிறேன்.
இப்போதைக்கு எல்லா செலவும் போக மாதம், 22,500 ரூபாய் லாபம் கிடைக்கிறது. என்னை பொறுத்தவரை இது ஓரளவுக்கு நிறைவான லாபம் தான். மக்களின் உடல்நலனுக்கு நன்மை செய்யக்கூடிய ஒரு தொழில் செய்கிறோம் என்ற ஆத்ம திருப்தி கிடைப்பதை தான் பெரிதாக நினைக்கிறேன்.
இது தவிர சத்துமாவு, சிறுதானிய சத்துமாவு, பீட்ரூட் பொடி என சில தயாரிப்புகளை, 'ஆன்லைன்' வாயிலாக விற்பனை செய்கிறேன். இதன் வாயிலாக, மாதம் 10 ஆயிரம் ரூபாய் வருகிறது. இந்த இரு தொழில்களையும் அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வதற்காக, வங்கி கடன் கிடைத்தால் பெரிய உதவியாக இருக்கும். இந்த கடை என் உழைப்புக்கும், நம்பிக்கைக்கும் கிடைத்த அங்கீகாரம்.
தொடர்புக்கு: 89255 41015
