தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/ 'சரியாக திட்டமிட்டு முயற்சி எடுப்பதே வெற்றிக்கு முதல் படி!' : 'என்னால் நான்கு குடும்பங்கள் வாழ வேண்டும்!'

'சரியாக திட்டமிட்டு முயற்சி எடுப்பதே வெற்றிக்கு முதல் படி!' : 'என்னால் நான்கு குடும்பங்கள் வாழ வேண்டும்!'

'சரியாக திட்டமிட்டு முயற்சி எடுப்பதே வெற்றிக்கு முதல் படி!' : 'என்னால் நான்கு குடும்பங்கள் வாழ வேண்டும்!'


PUBLISHED ON : ஆக 16, 2026 12:12 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 16, 2026 12:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாதம், 1.50 லட்சம் ரூபாய்க்கு இட்லி பொடிகள் விற்பனை செய்யும், மதுரை மாவட்டம், கோசாகுளத்தைச் சேர்ந்த, 45 வயதாகும் மகேஸ்வரி சுடலைமுத்து:

'நமக்கென ஒரு வருமானம் இருந்தால் நன்றாக இருக்கும்' என்று, ஒவ்வொரு பெண்ணுக்கும், ஏதோ ஒரு வயதில் தோன்றும்; எனக்கு, 35 வயதில் தோன்றியது. சொந்தமாக தொழில் துவங்க, வீட்டில் போராடி சம்மதம் வாங்கினேன்; கணவர், 50,000 ரூபாய் கொடுத்தார்.

மொத்தமாக புடவைகள் வாங்கி, விற்பனை செய்ய ஆரம்பித்தேன். தொழில் முன்னேற்றம் அடைந்த நேரத்தில், கொரோனா ஊரடங்கு வந்தது. புடவை விற்பனையில் கிடைத்த பணத்தை, ஊரடங்கில் வீட்டு செலவுக்காக பயன்படுத்திக் கொண்டேன்.

கொரோனா ஊரடங்கு முடிந்து, இயல்பு நிலை திரும்பியதும், மீண்டும் சம்பாதிக்கும் ஆசை வந்தது. அப்போது என்னிடம் இருந்த, 300 ரூபாயை முதலீடாக்கி, 1 கிலோ இட்லி பொடி தயாரித்து, அக்கம் பக்கத்து வீடுகளில் விற்றேன்; 50 ரூபாய் லாபம் கிடைத்தது. அடுத்த நாள், 350 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கி, இட்லி பொடி தயாரித்து விற்பனை செய்தேன்.

வீடுகள் தாண்டி, கடைகளுக்கும் பொடிகள் தயாரித்துக் கொடுத்தேன். விற்பனை அதிகரிக்கவே, 'மதுரை மாடசாமி இட்லி பொடி' என்ற பெயரில் தொழில் துவங்கினேன்.

'சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்தால் கூடுதல் வாடிக்கையாளர்கள் கிடைப்பர்' என்று என் மகன் கூறவே, கறிவேப்பிலை, துாதுவளை பொடிகளை தயாரிக்க ஆரம்பித்தேன். செடிகளில் இருந்து இலைகளை பறிப்பது துவங்கி, பொருட்களை வறுப்பது, அரைப்பது என அனைத்தையும் காணொளிகள் எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட ஆரம்பித்தேன்; ஆர்டர்கள் வர ஆரம்பித்தன.

அதன்பின் அக்கம் பக்கத்து வீட்டு பெண்களை சேர்த்து, மகளிர் சுய உதவிக்குழு ஆரம்பித்தேன். அரசிடம் இருந்து, 35,000 ரூபாய் கடன் கிடைத்தது. அந்த பணத்தில் தொழில்முறை இயந்திரம் வாங்கி, என் நிறுவனத்தை பதிவு செய்தேன். உணவு தரச்சான்றிதழ், ஜி.எஸ்.டி., எண் வாங்கினேன்.

இப்போது, 15 விதமான பொடி வகைகள் தயாரிக்கிறேன்; நிறைய ஹோட்டல்களுக்கும் விற்பனை செய்கிறேன். மாதம், 350 கிலோ வரை இட்லி பொடி வகைகளை தயாரித்து விற்பனை செய்கிறேன்; மாதம் 1.50 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது.

பெண்கள் தொழில் ஆரம்பிக்க வேண்டுமெனில், பெரிய முதலீடு தேவை என்று நினைக்க வேண்டாம். கையில் இருக்கும் சிறிய தொகையிலும் பெரிய அளவில் சம்பாதிக்கலாம். தோல்வி ஏற்பட்டால், பயப்படாமல், சரியான முறையில் திட்டமிட்டு அடுத்த முயற்சியை எடுக்க வேண்டும்; அதுதான் வெற்றிக்கான முதல் படி!

தொடர்புக்கு: 98434 30304

***

'என்னால் நான்கு குடும்பங்கள் வாழ வேண்டும்!'

Image 1609475

பாரம்பரிய செட்டிநாட்டு பலகாரங்களை செய்து, பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வரும் புதுக்கோட்டை மாவட்டம், வேந்தன்பட்டி கிராமத்தை சேர்ந்த, 72 வயது மீனாட்சி ஆச்சி:

நான் பிறந்தது ராங்கியம் கிராமம்; திருமணமானதும் கணவர் ஊரான வேந்தன்பட்டிக்கு குடியேறினேன். வாழ்க்கை நல்லபடியாக சென்று கொண்டிருந்தபோது, திடீரென கணவருக்கு உடம்பு சரியில்லாமல் போகவே, வருமானம் சுத்தமாக நின்றுவிட்டது.

வறுமை சூழ்ந்தாலும், கையை பிசைந்தபடி சும்மா உட்கார எனக்கு மனதில்லை. திருமணத்திற்கு முன்னரே அம்மாவிடம் செட்டிநாட்டு பலகாரங்கள் எல்லாம் செய்ய கற்றுக் கொண்டேன். அந்த தைரியத்தில், 1985ல் செட்டிநாட்டு பலகார தொழிலை ஆரம்பித்தேன். கணவர், 'இதெல்லாம் சரியாக வராது' என்றார்.

எந்த தொழிலில் தான் போராட்டமும், பிரச்னையும் இல்லை. என் உழைப்பின் மீது இருந்த அசாத்திய நம்பிக்கையில், வைராக்கியத்துடன் இந்தத் தொழிலில் இறங்கினேன்.

ஆரம்பத்தில் நானே பலகாரங்களை செய்து, வீடு வீடாக எடுத்துச் சென்று விற்பனை செய்தேன். வாடிக்கையாளர்களுக்கு சுவை பிடித்து போகவே, வீட்டிற்கு வந்து வாங்கி செல்ல ஆரம்பித்தனர். அன்றும் சரி, இன்றும் சரி... சுத்தம், சுவை, தரம் இதில் நான் மிகவும் தெளிவாக இருப்பேன்; எந்த கலப்படமும் செய்ய மாட்டேன்.

என் தயாரிப்புகள் தரமாக இருப்பதால் தான், 40 ஆண்டுகளாக வாடிக்கையாளர்கள் என் கடையை தேடி வருகின்றனர். இன்று, 20 பெண்கள் என்னிடம் பணிபுரிகின்றனர்; எல்லாரும் என் பிள்ளைகள் போன்றவர்கள் தான்.

அமெரிக்கா, சிங்கப்பூர், லண்டன், மலேஷியா என பல நாடுகளுக்கும் என் பலகாரங்கள் செல்கின்றன. மொபைல் போனிலேயே, 'ஆர்டர்' கொடுத்து விடுகின்றனர். எனக்கு ஒருநாள் கூட விடுமுறை கிடையாது. வேலை பார்ப்போர் விடுப்பு எடுத்தால் தான், எனக்கு ஓய்வு.

எப்போதும் விறகு அடுப்பில் தான் பலகாரங்களை தயார் செய்கிறோம். முறுக்கு, அதிரசம் உள்ளிட்ட பலகாரங்கள் மட்டுமல்லாமல், மா வற்றல், கத்தரி வற்றல் உள்ளிட்ட வற்றல் வகைகளும், சத்து மாவு மற்றும் இட்லி - தோசை பொடிகளும் தயாரிக்கிறோம்.

எனக்கென பெரிதாக ஆசை எதுவும் இல்லை. ஆனால், என்னை நம்பி 20 குடும்பங்கள் இருக்கின்றன. நான் கஷ்டப்படுவதெல்லாம் இங்கு வேலை பார்க்கிற அவர்களின் நலனுக்காகத் தான்.

அரசு சிறிது நிதியுதவி செய்தால், என்னால் இன்னும் பெரிய அளவில் தொழில் செய்து, இன்னும் பல குடும்பங்களுக்கு வேலை கொடுக்க முடியும். என்னால் நான்கு குடும்பங்கள் நன்றாக இருக்க வேண்டும்; அந்த சந்தோஷமே எனக்கு போதும்.

தொடர்புக்கு: 97863 83473

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us