/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
தங்களின் குழந்தை பருவத்துக்கே சென்றுவிடுவர்!
/
தங்களின் குழந்தை பருவத்துக்கே சென்றுவிடுவர்!
PUBLISHED ON : ஏப் 17, 2025 12:00 AM

கிட்டத்தட்ட, 35 ஆண்டுகளாக ஜவ்வு மிட்டாய் விற்கும், கோவை, உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த, 65 வயதான பெருமாள் தாத்தா:
என் பெற்றோருக்கு பூர்வீகம், தேனி மாவட்டம் உசிலம்பட்டி. எங்கப்பா ஜவ்வு மிட்டாய் செய்து விற்று வந்தார்.
எங்க அண்ணனுக்கும், எனக்கும் அந்த வேலை பிடிக்காமல், வேறு வேறு வேலைகள் செய்தோம். இதற்கு நடுவில் எனக்கு திருமணம் முடிந்தும், அப்பா தயவிலேயே வாழ்ந்து வந்தேன்.
என் மைத்துனர், கோவையில் ஜவ்வு மிட்டாய் செய்து விற்று வந்தார். நானும், மனைவியும் கோவைக்கு வந்து, நான் வேண்டாம் என்று ஒதுக்கிய அதே ஜவ்வு மிட்டாய் தொழிலை செய்ய ஆரம்பித்தோம்; இப்போது வரை அதுதான் சோறு போடுகிறது.
கூட்டம் கூடும் இடங்களில் எல்லாம் தேடிப்போய் விற்கிறேன்.
என் வாடிக்கையாளர்கள் குழந்தைகள் தான். அவர்களை பார்க்கும்போது எல்லா சலிப்பும் காணாமல் போய்விடும்.
நம்மை, அவர்கள் ஏதோ கடைக்காரர் மாதிரி பார்க்க மாட்டார்கள். நம்மை ஒரு மாயாவி மாதிரி, குட்டி கண்களில் ஆச்சரியம் தேக்கி பார்க்கும் போது, நமக்கும் உள்ளுக்குள்ள ஹீரோ போன்று இருக்கும்.
அவர்கள் கையில் ஜவ்வு மிட்டாயை கட்டி விடும்போது நிறைய சந்தோஷம், ஆச்சரியம், கொஞ்சம் வெட்கம் என்று அவர்கள் முகம் மாறும் பாருங்கள்... நீங்கள், அந்த குழந்தைகளுக்கு 500 ரூபாய்க்கு பொருள் வாங்கி கொடுத்தாலும் அதை பார்க்க முடியாது.
என்னை ஒருத்தர் வீடியோ எடுத்து, 'யு டியூப்'ல போட்டு விட்டுட்டாரு. அதன்பின் திருமணம், பள்ளி, கல்லுாரி நிகழ்ச்சி என, என்னை தேடி வந்து கூப்பிடுகின்றனர். நான் தொழில் செய்ய ஆரம்பித்த போது, ஒரு ஜவ்வு மிட்டாய் 25 காசு; இப்போது 20 ரூபாய் வரை விற்கிறேன்.
சில நேரங்களில் குழந்தைகள் ஆசைப்பட்டாலும், பெற்றோரால் வாங்கி கொடுக்க முடியாமல் இருப்பாங்க. நான் அதை புரிந்துகொண்டு, விலையை குறைத்துக் கொள்வேன்.
சில வீதிகளில் எனக்கு தொடர் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். அந்த வீதிகளுக்கு சென்றுவிட்டால், வெளியே வரவே நேரமாகி விடும். இதில் இன்னொரு சுவாரஸ்யமும் இருக்கிறது...
குழந்தையாக இருந்தபோது என்னிடம் ஜவ்வு மிட்டாய் வாட்ச் வாங்கி, கட்டிக் கொண்டவர்கள் எல்லாம் இப்போது தாத்தா, பாட்டி ஆகி, தங்களின் பேரக்குழந்தைகளை கூட்டி வந்து ஜவ்வு மிட்டாய் வாங்கி கொடுக்கின்றனர்.
அவர்களையும் வம்பு செய்து, 'வாங்க, உங்க கையிலும் ஒரு மிட்டாய் கட்டலாம்' என்று கட்டிவிட்டால், ஒரு நிமிடம் தங்களின் குழந்தை பருவத்துக்கே சென்றுவிடுவர். ஜவ்வு மிட்டாய், ஒரு டைம் டிராவல் இனிப்பு!