PUBLISHED ON : ஆக 13, 2023 12:00 AM

கார் ஓட்டி சம்பாதித்து வரும், சேலம் மாவட்டம் சர்க்கார் கொல்லப்பட்டியை சேர்ந்த, ௪௩ வயது பெண்ணான ரூத்:
கணவர் கொளுத்து வேலை மற்றும் தோட்ட வேலைக்கு செல்வார். அவர் பங்களாக்களில் தோட்ட வேலைக்கு செல்லும் போது, நானும் உடன் செல்வேன்.
சில நேரங்களில், தோட்ட வேலைக்காக வெளியிடங்களுக்கு, எங்களை காரில் அழைத்துச் செல்வர்.
காரில் முன் இருக்கையில் அமர்ந்திருப்பேன். அப்போது, டிரைவர் கார் ஓட்டுறதை பார்க்கப் பார்க்க, 'நாமும் கார் ஓட்டினால் என்ன?' என்ற எண்ணம் வந்தது. பின், பயிற்சி மையத்தில் சேர்ந்து கார் ஓட்டக் கற்று, 2010ல், 'லைசென்ஸ்' வாங்கினேன்.
அதன்பின், 'மஹிந்திரா ஆம்னி' வண்டியை, மாத தவணையில் வாங்கினேன். தோட்ட வேலைக்கு நடுவில், அந்த வண்டியை ஓட்டிய போது, தினமும், ௩௦௦ முதல், ௪௦௦ ரூபாய் கிடைத்தது.
இந்த நேரத்தில், சர்ச்சில் என்னைப் பார்த்த ஒரு அக்கா, 'என்னோட குழந்தைகளை பள்ளிக்கு கூட்டிட்டு போயிட்டு வந்து விடுறீங்களா?'ன்னு கேட்டாங்க; நானும் சந்தோஷமாக சம்மதித்தேன்.
அப்புறமாக மூன்று மாதத்தில், 30 பிள்ளைகள் சேர்ந்துட்டாங்க. சரின்னு இன்னொரு ஆம்னி வண்டி வாங்கி, என்னோட இளைய மகனும், நானும் ஓட்டினோம்.
திரும்ப பிள்ளைகள் சேர, பெரிய வண்டி வாங்கி, அதுக்கு டிரைவரை போட்டு ஓட்டினோம்; நல்ல வருமானமும், நல்ல பெயரும் கிடைத்தது.
கொரோனா நேரத்தில், இரண்டு வண்டியையும் விற்க வேண்டியதாகி விட்டது. அதன்பின் மளிகை கடை வைத்தேன்; அதிலும் வருமானம் குறைந்தது.
அடுத்து எந்த வேலை செய்தாலும், கடன் தான் மிஞ்சியதே தவிர, வருமானம் இல்லை.
அதனால், ஆம்னி வண்டி மட்டும் தான், என்னோட ஒரே நம்பிக்கையாக இருந்தது; அதனால், மீண்டும் அந்த வண்டியை வாங்கி, வாடகைக்கு ஓட்டும் நிறுவனத்துடன் இணைத்தேன்; அதிலும், பலன் இல்லை.
இதையடுத்து, ஆம்னியை விற்று விட்டு, கடந்த ஆண்டு, 'சுவிப்ட்' கார் வாங்கினேன்.
இப்போது காரை ஒரு கம்பெனிக்கு ஓட்டிக்கிட்டு இருக்கிறேன். பல ஊர்களுக்கும் சென்று வருகிறேன்; வருமானமும் நல்லபடியாக வருகிறது.
கார் ஓட்டும் போது, காடு, மலையெல்லாம் கூட சுற்றி வந்திருக்கேன். நாம இடம் தந்தால் மட்டும் தான், எந்தத் தவறும் நடக்க வாய்ப்பிருக்கிறது.
பொதுவாகவே எந்த வயது பெண்களானாலும், சில ஆண்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்க்க தான் செய்வர்.
அப்படிப்பட்ட ஆண்களிடம் ரொம்பவே ஜாக்கிரதை உணர்வோட நடந்து கொள்வேன். முள்ளை முள்ளால் எடுக்குற மாதிரி, நறுக்கு சுருக்குன்னு நாலு வார்த்தை பேசிட்டு வந்துடுவேன்.
*****************
பில்டர் காபி முதல் குடல் குழம்பு வரை தயாரித்து வழங்கி அசத்துகிறோம்!
கண்டம் விட்டு கண்டம் சென்று, உணவுத் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும், கோவை போத்தனுார் பகுதியைச் சேர்ந்த பூங்கொடி: எனக்கு, ௨௦௦௬ல் திருமணம் நடந்தது. கணவர் வசந்தகுமார், ஆஸ்திரேலிய நாட்டின் அடிலெய்டு நகரில், இயந்திர வல்லுனராக பணி புரிந்ததால் அங்கு சென்றேன்.
கடந்த 2007ல் தீபாவளி பண்டிகையின் போது, அடிலெய்டு நண்பர்கள், உறவினர்களுக்கு, லட்டு, முறுக்கு போன்ற தின்பண்டங்கள் செய்து கொடுத்தேன்; நல்ல வரவேற்பு கிடைத்தது. அதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல, சிறிய சிறிய ஆர்டர்கள் எடுத்து, கேட்டரிங் தொழிலை துவக்கினேன்.பின், இந்திய மதிப்பில், 40 லட்சம் ரூபாய் முதலீட்டில், தென்னிந்திய உணவுகளுக்கான, 'சென்னை பேலஸ்' என்ற உணவகத்தை, 2011ல் துவக்கினேன்.
இதற்கு, கணவர் பக்கபலமாக இருந்தார். ஒரு கட்டத்தில், அவர் தன் வேலையை விட்டு விட்டு, உணவகத்தை கவனிக்கும் அளவுக்கு, வருமானம் வரத் துவங்கியது.
கடுமையாக உழைத்தோம்; பார்ட்டி ஆர்டர், கேட்டரிங் ஆர்டர், 'பல்க்' ஆர்டர்கள் எங்களை தேடி வரத் துவங்கின. புதிதாக ஏதாவது முயற்சி செய்யலாம் என, 'பபே கான்செப்டில்' தென்னிந்திய உணவுகளை தயாரித்தோம்; மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அடுத்தடுத்து, திருமணம், கார்ப்பரேட் நிகழ்ச்சிகள், பிறந்தநாள் பார்ட்டிகள் என, எங்களின் சேவைகளை அதிகரித்தோம்.எங்கள் உணவகத்தில் பணியாற்றும் அனைவரும் தான், இந்த வெற்றிக்கு காரணம். அவர்கள் ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை என, பல நாடுகளை சேர்ந்தவர்கள்.
எங்கள் உணவகத்தில், அனைத்து இந்திய உணவுகளும் கிடைக்கும். உணவுக்கு தேவையான மூலப் பொருட்களை, இந்தியாவிலிருந்து இங்கு வரவழைப்பது தான் சவாலான காரியம். அரிசி, பருப்பு, கோதுமை, காய்கறிகள், பழங்கள் என, 90 சதவீத பொருட்களை, இந்தியாவிலிருந்து விமானம் வாயிலாக கிடைக்கச் செய்கிறோம். நான் இந்தியாவுக்கு வரும் போது, சில பொருட்களை வாங்கிச் செல்வேன். எங்கள் உணவகத்தில், பில்டர் காபியில் துவங்கி, குடல் குழம்பு வரையிலான தென்னிந்திய உணவு வகைகளை தயாரித்து வழங்கி, வாடிக்கையாளர்களை அசத்தி வருகிறோம். இப்போது, ஆஸ்திரேலியா பண மதிப்பில், ஆண்டுக்கு ஒரு மில்லியன் டாலர் அளவுக்கு வியாபாரம் செய்கிறோம்; இந்திய மதிப்பில், 5 கோடி ரூபாய். மூன்று மாதங்களுக்கு முன் தான், இரண்டாவது கிளையை திறந்தோம். அடுத்தாண்டு, 15 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
