/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
டன் கணக்கில் முருங்கை பவுடர் ஏற்றுமதி!
/
டன் கணக்கில் முருங்கை பவுடர் ஏற்றுமதி!
PUBLISHED ON : ஜூலை 10, 2025 12:00 AM

'திரவியம் இன்டர்நேஷனல்' என்ற பெயரில், முருங்கை இலை, பவுடர், விதை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை ஐந்து ஆண்டுகளாக ஏற்றுமதி செய்து வரும், மதுரையைச் சேர்ந்த பாஸ்டின் ராஜன்:
சென்னை லயோலா கல்லுாரியில் எம்.பி.ஏ., முடித்து, ஐந்து ஆண்டுகள் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தேன். எனக்கு பிசினஸ் செய்ய வேண்டும் என்பது தான் கனவு, லட்சியம் எல்லாமே. நண்பன் ஒருவன் தான் இந்த முருங்கை பிசினஸ் குறித்து பேசினான்.
அவனுக்கு தெரிந்த, சீனாவை சேர்ந்த நண்பனுக்கு முருங்கை விதை மற்றும் அதன் இலைகளுக்கு தேவை உள்ளதை சொல்லி, 'எக்ஸ்போர்ட் செய்தால் நல்ல எதிர்காலம் இருக்கும்' என்றான். ஆனால், அதற்கு முன் வரை முருங்கை விதை குறித்து எனக்கு எதுவுமே தெரியாது.
இதனால், மூன்று மாதங்கள் வார இறுதி நாட்களில் சொந்த ஊருக்கு வந்து விவசாயிகளிடம் இதுகுறித்து பேசினேன். அப்போது தான் நம்மால் இதை செய்ய முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. முருங்கை விதை, இலைகளை சப்ளை செய்பவர்களையும் கண்டறிந்தேன்.
நண்பன் கூறிய சீனாவை சேர்ந்த நபர், எங்களுக்கு முதல் ஆர்டர் கொடுத்தார். முதல் மூன்று ஆர்டர்கள் எங்களுக்கு எந்தவித பிரச்னையும் இல்லாமல் நன்றாக நடந்தது. நான்காவது ஆர்டர் கொடுத்தவர்கள் பணம் தராமல் ஏமாற்றி விட்டனர். 5 லட்சம் ரூபாய் நஷ்டம்.
அதன்பின், ஏற்றுமதி பிசினசிற்கு என்னென்ன ஆவணங்கள் அவசியம், பண பரிவர்த்தனையில் என்னென்ன கவனிக்க வேண்டும், ஆர்டர் கொடுப்பவரின் நம்பகத்தன்மையை எப்படி தெரிந்து கொள்வது என, எல்லாவற்றையும் கற்றுக் கொண்டேன். 2020ல், 'திரவியம் இன்டர்நேஷனல்' என்ற நிறுவனத்தை துவங்கி, முழு மூச்சாக முருங்கை பவுடர் பிசினசில் இறங்கினேன்.
கொரோனா ஊரடங்கு முடிந்து, மூன்றாவது ஆண்டில் பிசினஸ் பிக்கப் ஆனது. முதலில் 5 கிலோ, 10 கிலோ என ஆர்டர்கள் வந்த நிலையில், அடுத்த கட்டமாக, 100 கிலோ வரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தோம்.
கடந்தாண்டு முதல், கன்டெய்னர்களில் டன் கணக்கில் முருங்கை பவுடர் ஏற்றுமதி செய்கிறோம். இப்போது முருங்கை இலை பவுடர் மட்டுமல்லாமல், முருங்கை விதை எண்ணெய், முருங்கை தேன், முருங்கை கேப்சூல்கள் என தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.
ஆரம்பத்தில் முருங்கை விதை, பவுடர்களை வெளியில் இருந்து வாங்கி தான் ஏற்றுமதி செய்தோம். அதன்பின் நாங்களே முருங்கை பொருட்களை வாங்கி, பிராசஸிங் யூனிட்டுகளிடம் கொடுத்து பொருட்களை தயாரித்தோம்.
தற்போது, 12 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். உள்ளூரிலும் மாதத்திற்கு 6 டன் வரை விற்பனை செய்கிறோம். இப்போது ஆண்டுக்கு, 'டர்ன் ஓவர்' 1.50 கோடி ரூபாயாக உள்ளது. இதை இன்னும் அதிகப்படுத்துவேன் என்ற நம்பிக்கை உள்ளது.