/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
'அத்தி, டிராகன் பாண்டியன்' என்ற தனி அடையாளம்!
/
'அத்தி, டிராகன் பாண்டியன்' என்ற தனி அடையாளம்!
PUBLISHED ON : அக் 16, 2024 12:00 AM

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே உள்ள புத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாண்டியன்: இது என்னோட பூர்வீக கிராமம். நீர் வளமும், மண் வளமும் உள்ள செழிப்பான பூமி இது.
நான் முதுகலை தாவரவியல் முடித்து விட்டு, வேலை தேடி அலைந்தேன்; ஆனால், எதுவும் சரியாக அமையவில்லை. 'சரி, நமக்கு தான் விவசாயம் இருக்கே... அதையே எடுத்து செய்வோம்' என, விவசாயத்தில் இறங்கினேன். எங்கள் குடும்பத்திற்கு, 5 ஏக்கர் நிலம் உள்ளது. பல ஆண்டுகளாக நெல் விவசாயம் தான் செய்து வந்தேன்.
ஆனால், உரிய நேரத்தில் விவசாய பணியாளர்கள் கிடைக்காமல், மிகவும் சிரமப்பட்டேன். அதனால், பணியாளர்கள் அதிகம் தேவைப்படாத பழப்பயிர்களை பயிர் செய்ய ஆரம்பித்தேன்.
அதன்பின், 'நம் பகுதியில் இதுவரை யாரும் சாகுபடி செய்யாத பயிர்களை உற்பத்தி செய்தால் என்ன?' என்று தோன்றியது. அதனால், 250 அத்திக் கன்றுகளும், 60 டிராகன் புரூட் கன்றுகளும் வாங்கி, 4 சென்ட் பரப்பில் பயிர் செய்தேன்.
அத்திக் கன்றுகளை, 2021ல் நடவு செய்து, 2023ல் 150 கிலோ பழங்கள் கிடைத்தன. கிலோ, 150 ரூபாய் என விற்பனை செய்ததன் வாயிலாக, 22,500 ரூபாய் வருமானம் கிடைத்தது.
இந்தாண்டு, 1 டன் பழங்கள் மகசூல் கிடைக்கும். கிலோவுக்கு, 150 என, விலை நிர்ணயித்தால், 1.50 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.
இயற்கை இடுபொருட்கள் போடுவது, பழங்கள் அறுவடை உள்ளிட்ட பணிகளை நானே செய்து விடுவதால், வேறு செலவுகள் இல்லை. கிட்டத்தட்ட, 30,000 செலவு போக, 1.20 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும்.
டிராகன் புரூட் நடவு செய்து ஒன்றரை ஆண்டுகளுக்கு பின், காய்ப்புக்கு வந்தது. முதலாம் ஆண்டில் குறைவான மகசூல் தான் கிடைத்தது. இந்த ஆண்டு பல மடங்கு கூடுதலாக, பூக்கள் பூத்திருக்கு. மொத்தம், 150 கிலோ பழங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.
வரும் ஆண்டுகளில், 1,500 கிலோ பழங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது; அப்போது வருமானமும் அதிகரிக்கும்.
'நம் மண்ணிற்கு இது சரியாக வருமா?' என கேள்வி எழுப்பிய பலரும், இப்போது என் தோட்டத்தில் விளைந்து வரும் பழங்களை பார்த்து ஆச்சரியப்படுகின்றனர்.
'அத்தியும், டிராகனும் விலை உயர்ந்த பழங்கள். அதை விலை கொடுத்து வாங்குவரா?' என்ற சந்தேகமும், பயமும் இருந்தது. ஆனால், மக்கள் என் தோட்டத்துக்கே வந்து வாங்கி செல்கின்றனர்.
எனக்கு, 'அத்தி, டிராகன் பாண்டியன்' என்ற தனி அடையாளமே ஏற்பட்டு இருக்கிறது. இதனால், சாகுபடி பரப்பை அதிகரிக்கவும் திட்டமிட்டிருக்கிறேன்.
தொடர்புக்கு
99409 09767