/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
இன்னும் பல கிளைகளை உருவாக்க வேண்டும்!
/
இன்னும் பல கிளைகளை உருவாக்க வேண்டும்!
PUBLISHED ON : நவ 25, 2025 12:00 AM

எண்ணற்ற உடல்நல பிரச்னைகளுக்கு மத்தியிலும், பீனிக்ஸ் பறவையே வியந்து பார்க்கும் அளவுக்கு, கைவேலைகளிலும், கலைத் திறன்களிலும் சாதிக்கும் திலகசுதா: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, வெஞ்சமடை பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு எலும்பு முறிவால் ஏற்படும், 'ஆஸ்டியோஜெனெசிஸ் இம்பெர்பெக்டா' எனும் பிரச்னை உள்ளது. இந்த நோய் மிக அரிதானது. மரபணு காரணங்களால் உண்டாகிறது.
இந்த பாதிப்பு காரணமாக, எலும்புகள் மென்மையாக இருக்கும். எனவே, பலமாக தும்மினால், இருமினால், சற்றே எடையுள்ள பொருட்களை துாக்கினால் கூட, எலும்புகள் உடைந்து விடும்.
அத்துடன், முதுகெலும்பு, தசை பலவீனம், சுவாசிப்பதில் சிரமம் என, பிற பிரச்னை களும் ஏற்படும்.
எனக்கு இதுவரை, 400க்கும் மேற்பட்ட எலும்பு முறிவு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதால், மருத்துவர்கள் என்னை, 'கண்ணாடி குழந்தை' என்பர்.
நீச்சல் தெரியாதவர்களை தண்ணீருக்குள் தள்ளிவிட்டால் நீந்தி தானே ஆக வேண்டும். அப்படித்தான் நானும்... பள்ளிக்கு செல்லும் போது, எனக்கு உடை தைக்க அளவெடுப்பதில் துவங்கி, தைப்பது வரை, பல பிரச்னைகள் இருந்தன.
அப்போது, நானே தைக்க முடிவு செய்து, தையல் கற்றேன்.
இப்போது, கடை வைத்து நடத்தும் அளவுக்கு உயர்ந்தாலும், என் உடல் பிரச்னையை காரணம் காட்டி யாரும் என்னை நம்பவில்லை.
இருப்பினும், எனக்கான செலவுகளை நான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதால், மெகந்தி டிசைன், ஜாக்கெட்களில் எம்பிராய்டரி செய்யும், 'ஆரி வொர்க்' மற்றும் கிராப்ட் ஓவியம் என, பல கலைகளை கற்றுக் கொண்டேன்.
ஆரி வொர்க் பயிற்சியை, 'ஆன்லைன்' வழியாகவும் கற்று தருகிறேன். என்னிடம், 50க்கும் மேற்பட்டோர், ஆரி வொர்க் கற்றுள்ளனர்.
குறைந்த விலையில் நுணுக்கமான வேலைப்பாடுகளை செய்து தந்தாலும், மாற்றுத்திறனாளி என்பதால், முதலில் யாரும் நம்பவில்லை. தற்போது, வெளியூரில் இருந்தும் வாடிக்கையாளர்கள் வருகின்றனர்.
வீட்டில் இருந்தபடியே முதுகலைப் பட்டப்படிப்பும் முடித்தேன். எலும்பு பிரச்னைக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதால், முன்பை விட பரவாயில்லை.
ஆனால், இரண்டு மணி நேரம் தொடர்ந்து உட்கார முடிந்தாலே பெரிய சாதனை தான். 1 கிலோவிற்கு மேல், எந்த பொருளையும் துாக்க முடியாது.
நீண்ட நேரம் உட்கார, அதற்கான தையல் மிஷின் வாங்க வேண்டும். ஏனெனில் அதன் விலை, 30,000 ரூபாய் வரை இருக்கும். தற்போது நான் சம்பாதிப்பது மருத்துவ செலவுக்கே சரியாகி விடுகிறது.
அடுத்ததாக, 'ஆன்லைன்' வழியாக இன்னும் பலருக்கும், 'ஆரி வொர்க்' கற்றுத்தர வேண்டும். கடையை விரிவுபடுத்தி, இன்னும் பல கிளைகளை உருவாக்க வேண்டும்.

