/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
ரூ.5,000 கோடி பரிவர்த்தனையை தொட வேண்டும்!
/
ரூ.5,000 கோடி பரிவர்த்தனையை தொட வேண்டும்!
PUBLISHED ON : ஏப் 24, 2025 12:00 AM

பணப் பரிமாற்ற நிறுவனங்களில் ஒன்றான, 'இப்போ பே' என்ற செயலியின் நிறுவனரான, ராமநாதபுரம் மாவட்டம், தாமரைக்குளத்தைச் சேர்ந்த மோகன்:
அப்பா மீன் பிடி தொழிலாளி. நான் இன்ஜினியரிங் முடித்துவிட்டு, சென்னைக்கு கிளம்பும்போது, எனக்கு எந்த திட்டமும் இல்லை. 750 ரூபாய் சம்பளத்தில் வெப் டிசைனராக வேலைக்கு சேர்ந்தேன்.
இரண்டாண்டுகள் கழித்து, 12,000 ரூபாய் சம்பளத்தில் இன்னொரு கம்பெனிக்கு வேலைக்கு சென்றேன். 15வது நாளிலேயே, 'பர்பாமென்ஸ் சரியில்லை' என்று கூறி, வேலையை விட்டு அனுப்பி விட்டனர்; பெரிய அவமானமாக இருந்தது.
'இனி, நம் வாழ்க்கையில் இப்படியொரு அசிங்கம் நிகழக்கூடாது. நாமே முதலாளி ஆகணும்' என்று அப்போது முடிவு செய்தேன். 1,500 பிசினஸ் கார்டு அடித்து, 'லோகோ, வெப்சைட் டிசைன் செய்ய கூப்பிடுங்கள்' என்று கடை கடையாக ஏறி இறங்கினேன். அது 'ஒர்க் அவுட்' ஆகி, வேலைகள் வர ஆரம்பித்தன.
ஒருமுறை ஊருக்கு சென்றிருந்தபோது, பெட்டிக்கடை வைத்திருப்போர் என்னிடம், 'ஏம்பா, கூகுள் பே இருக்கா'ன்னு தினமும் இரண்டு பேராவது கேட்குறாங்க... அப்படின்னா என்னப்பா'ன்னு கேட்டனர்.
அப்போது தான், தமிழகத்தில் பணப் பரிவர்த்தனைக்கென ஒரு, 'ஆப்' ஆரம்பித்து, சிறு நகரங்களுக்கு கொண்டு சென்றால் என்ன என்று தோன்றியது. 2020ல், 'இப்போ பே' என்ற பெயரில் ஆப் ஆரம்பித்தோம். ஆனால், கொரோனா, 'லாக்டவுன்' சமயத்தில் என் நிறுவனம் முடங்கியது; 44 லட்சம் ரூபாய் கடனில் விழுந்தேன்.
மீண்டும் போராட்டம். அந்த சூழலில் இருந்து மீண்டு, தொழிலில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் எந்த வங்கியும் எங்களுடன் இணைந்து செயல்பட முன்வரவில்லை.
கடினமாக உழைத்தோம்; வங்கிகள் தேடி வந்து எங்களுடன் இணைந்தன. மூன்று ஆண்டில் இந்தியாவில், 'டாப் 4 ஆன்லைன் கேட் வே' நிறுவனமாக மாறியது.
கடன்களை அடைத்து லாபம் பார்க்க ஆரம்பித்தோம். ஆன்லைன் கேட் வே நன்றாக சென்றுகொண்டிருந்தபோதே, யு.பி.ஐ., என்ற செயலியையும், 'டெவலப்' செய்ய ஆரம்பித்து விட்டேன்.
தற்போது தமிழகம் முழுக்க, 5 லட்சம் வணிகர்கள் எங்கள் ஆப்பை பயன்படுத்துகின்றனர். 2024ல் எங்கள் யு.பி.ஐ.,யில் நடந்த பணப் பரிவர்த்தனை 1,400 கோடி. இந்த ஆண்டு 5,000 கோடி ரூபாயை தொட வேண்டும். வங்கி வாசலில் கால்கடுக்க நின்ற காலம் மாறி, இப்போது வங்கிகளை நாங்கள் தேர்வு செய்யும் இடத்துக்கு வந்து விட்டோம்.

