/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
விவசாயிகளுக்கு தற்சார்பு பயிற்சி அளிக்கிறோம்!
/
விவசாயிகளுக்கு தற்சார்பு பயிற்சி அளிக்கிறோம்!
PUBLISHED ON : பிப் 26, 2024 12:00 AM

மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள விவசாயிகளிடம் சிறுதானியங்களைப் பரவலாக்கம் செய்வதிலும், அதன் மகத்துவம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும், 13 ஆண்டுகளாக தீவிர முனைப்புடன் பங்காற்றி வரும், மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த, ஷர்மிளா ஜெயின் ஓஸ்வால்: இங்கிலாந்தில் சுற்றுச்சூழல் மற்றும் விவசாயம் சார்ந்த சட்டப்படிப்பில் முதுகலைப்பட்டம் பெற்ற நான், கனடாவில் வழக்கறிஞராக பணியாற்றி கொண்டிருந்த கால கட்டம் அது...
அப்போது, இந்தியாவில் விவசாயிகள் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்வதாக வந்த தகவல்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தின.
வேலையை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவுக்கு வந்தேன்.
பாசனத்துக்குத் தண்ணீர் பற்றாக்குறை, உற்பத்தி செய்த விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்காதது, இடுபொருட்களின் விலை உயர்வால் உற்பத்தி செலவு அதிகரிப்பு, அதனால் ஏற்படும் கடன் சுமை உள்ளிட்ட பிரச்னைகள் முதன்மையானதாக இருந்தன.
இதனால் தான் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்ற களநிலவரம் தெரிந்தது.
இவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நோக்கத்துடன், 2010ல், 'கிரீன் எனர்ஜி பவுண்டேஷன்' என்ற தொண்டு நிறுவனத்தை துவங்கினேன்.
முதல் கட்ட முயற்சியாக, சிக்கன நீர் மேலாண்மையில் புகழ்பெற்றுள்ள இஸ்ரேல், ஜோர்டான் நாடுகளுக்கு சென்று, அங்குள்ள விவசாயிகள் கடைப்பிடிக்கும் நீர் மேலாண்மை தொழில்நுட்பங்களை அறிந்து, அவற்றை மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் செயல்படுத்தினோம்.
இதனால், விவசாயிகளுக்கு கோடை காலத்தில் கூட தண்ணீர் கிடைத்தது. விவசாயிகள் தற்சார்போடு வாழ்வதற்கும், விவசாய விளைபொருட்களின் உற்பத்திச் செலவுகளை குறைப்பதற்கும், இயற்கை விவசாயப் பயிற்சிகள் கொடுக்கிறோம்.
மேலும், சிறுதானியங்களைப் பயன்படுத்தி, புதிய உணவுகளைத் தயாரிக்கும்படி உணவகங்கள் மற்றும் சமையல் கலைஞர்களிடம் கேட்டுக் கொண்டோம். அதோடு, விவசாயிகளிடமிருந்து சிறுதானியங்களைக் கொள்முதல் செய்து, உணவுப் பொருட்கள் தயாரித்து, விற்பனை செய்கிறோம்.
விவசாயிகள் சிறுதானியங்களை அதிக அளவில் விவசாயம் செய்ய வேண்டுமானால், சிறுதானியங்கள் நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்யப்பட வேண்டும்.
மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டத்தில் சிறுதானிய உணவைச் சேர்க்க வேண்டும் என, மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறேன்.
பிரதமர் மோடி, வானொலியில் பேசும் நிகழ்வான, 'மனதின் குரல்' நிகழ்ச்சி வாயிலாக, எனக்கு பாராட்டு தெரிவித்ததால், நாடு முழுதும் அறியப்பட்டுள்ளேன்!

