/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
தண்ணீர் பஞ்சத்தில் பெங்களூரை காப்பாற்றினோம்!
/
தண்ணீர் பஞ்சத்தில் பெங்களூரை காப்பாற்றினோம்!
PUBLISHED ON : அக் 28, 2024 12:00 AM

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் இந்தாண்டு ஏற்பட்ட கடுமையான தண்ணீர் பஞ்சத்தை தீர்த்து வைத்த தமிழரும், ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான ராம்பிரசாத் மனோகர்: நான், தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவன். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பம். பல கஷ்டங்களுக்கு மத்தியில் தான், ஐ.ஏ.எஸ்., ஆக தேர்வானேன்.
பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத் தலைவராக பொறுப்பேற்ற போது, வரலாறு காணாத அளவிற்கு தண்ணீர் பஞ்சமும், போராட்டங்களும் வெடிக்க ஆரம்பித்தன. அதனால், ஐந்து கொள்கைகள் கொண்ட, 'பஞ்ச சூத்திரம்' திட்டத்தை அமல்படுத்தினேன்.
அவை...
குடிசைப்பகுதிகளில், 'சின்டெக்ஸ்' டேங்குகளை வைத்து, மினி வாட்டர் சப்ளை திட்டத்தை கொண்டு வந்தோம். 'சென்சார்' வாயிலாக கண்காணித்து, தண்ணீர் காலியாக, காலியாக நிரம்பிக் கொண்டே இருக்கும், 'டெக்னாலஜி'யை இணைத்தோம்
ஹோட்டல்கள், மால்கள் போன்ற பொது இடங்களில், தண்ணீர் வீணாவதை தடுக்க, 'ஏரியேட்டர்' எனும் நவீன சாதனங்களை பொருத்தினோம்
செடிகளுக்கும், வாகனங்களை சுத்தப்படுத்தவும் மறுசுழற்சி செய்த தண்ணீரை பயன்படுத்த சொன்னோம். 'மீறினால், 5,000 ரூபாய் அபராதம்' என்ற நடைமுறையை கொண்டு வந்தோம்.
அதன் வாயிலாக, தண்ணீர் சேமிக்கப்பட்டதுடன், குடிதண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்ட மக்களுக்கும் தண்ணீர் கிடைத்தது
எந்தெந்த பகுதியில், எவ்வளவு நிலத்தடி நீர் இருக்கிறது என்பதை அறிய, அதற்கேற்ற திட்டங்களை செயல்படுத்தினோம்.
கழிவுநீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துவதற்காக, 'இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ்' என்ற தொழில்நுட்ப கல்வி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, 'ஜீரோ பாக்டீரியா' அளவுக்கு மறுசுழற்சி செய்தோம்.
அந்த தண்ணீரை, ஐ.டி., கம்பெனிகள், கமர்ஷியல் காம்ப்ளக்ஸ்கள் பயன்படுத்த உத்தரவிட்டோம்
ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களை பயன்படுத்தி, 'வருணமித்ரா' என்ற பெயரில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை பள்ளி, கல்லுாரியில் அறிமுகம் செய்தோம். பெங்களூரு ஒரு 'லேக் சிட்டி!
இங்கு மட்டும், 185 ஏரிகள் உள்ளன. முதற்கட்டமாக, 20 ஏரிகளில் குழாய் வாயிலாக தண்ணீரை நிரப்பினோம். சுற்று வட்டார நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது.
இதுவும் எங்களுக்கு வெற்றியை தேடி தந்தது. அடுத்த ஆண்டுக்குள், 100 ஏரிகளில் தண்ணீரை நிரப்ப இருக்கிறோம்.
இதன் வாயிலாக, மழை பெய்தாலும், பெய்யவில்லை என்றாலும் நிலத்தடி நீர் மட்டம் இருந்தபடியே இருக்கும். எல்லாமே எளிமையான திட்டங்கள் என்றாலும், 'டெக்னாலஜி'யை பயன்படுத்தியதால் பிரச்னையை தீர்க்க முடிந்தது.
வரும், 2050ம் ஆண்டு வரை தண்ணீர் பிரச்னை இல்லாத அளவிற்கான திட்டங்களை, இப்போதே யோசித்து ஆரம்பித்து விட்டோம்!

