/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
நம் பலத்தை விட பலவீனத்தை தெரிஞ்சுக்கணும்!
/
நம் பலத்தை விட பலவீனத்தை தெரிஞ்சுக்கணும்!
PUBLISHED ON : அக் 27, 2024 12:00 AM

கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கலையுலகில் வெற்றிகரமாக வலம் வரும், 74 வயதான பிரபல நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன்: என் அப்பா ஒய்.ஜி.பார்த்தசாரதியின் கடைசி நாள் வரை, அவரிடம் வயது குறித்து கேட்டால், இவ்வளவு வயது என்று சொன்னதே இல்லை; இவ்வளவு வயது இளைஞன் என்று தான் சொல்வார்.
முதுமை என்பது உடலில் தெரிய ஆரம்பிக்கும் முன்பே, அதை மனதின் வாயிலாக கட்டுப்படுத்தி விடலாம்; அதை தான் கடைப்பிடிக்கிறேன்.
என்னை பொறுத்தவரை, வயது உடம்பில் இல்லை; மனதில் தான் இருக்கிறது என்பது திடமான நம்பிக்கை. அத்துடன் எனக்கு நடிப்பு தொழில் இருப்பதால், அடுத்தவர்களை, 'என்டர்டெயின்' செய்தபடியே இருக்க நினைக்கிறேன்.
ஒருநாள் வேலை செய்யாமல் இருந்தால்கூட, சோர்வு வந்து விடும் என்பதால், அதற்கு இடம் கொடுக்க மாட்டேன். உடம்பை பற்றி பெரிதாக கவலை கொள்ள மாட்டேன். ஆனால், மனதை 'ஆக்டிவ்'வாக வைத்துக் கொள்வதில் உறுதியாக இருக்கிறேன்.
அதற்கு உறுதுணையாக இருப்பது நாடக மேடை, திரையுலகம். இன்றும் இந்த இரண்டு உலகிலும் நான் பிசியாக இருக்கிறேன். இளம் இயக்குனர்களின் படங்களில் ஒரு காட்சியில் நடித்தாலும், நானும் இளமையாக உணர்கிறேன்.
'நம் வயதில் இருப்பவன் அப்படியிருக்கிறானே... இப்படியிருக்கிறானே...' என்று நினைக்க மாட்டேன். அடுத்தவன் குறித்து யோசிக்க ஆரம்பித்தால், அவனுக்கு நல்லது நடந்தாலும் கஷ்டமாக இருக்கும்; கெட்டது நடந்தாலும் கஷ்டமாக இருக்கும். நம் வேலையை பார்த்தபடியே இருந்தால், அடுத்தடுத்த வேலைகள் நமக்காக காத்துக் கொண்டிருக்கும்.
வசதியாக வாழ்வோர், கஷ்டப்படாமல் காலத்தை நகர்த்துகின்றனர் என்று நினைப்பது தவறு. உலகில் உள்ள அனைவருக்கும் கஷ்டமும், நஷ்டமும் கண்டிப்பாக இருக்கும்.
அந்த சங்கடங்களை நானும் பல நிலைகளில் அனுபவித்திருக்கிறேன். நான் சோர்ந்து போகும்போதெல்லாம் எனக்கு தோள் கொடுத்தது, என் குடும்பத்தினர் தான்.
எனக்கும் கோபம் வரும். 'கன்ட்ரோல்' செய்ய முடிந்தால் செய்வேன்; இல்லையெனில், குழாயில் இருந்து தண்ணீரை திறந்து விடுவது மாதிரி வெளியே கொட்டி விடுவேன்.
கோபம், பொறாமை, கெடுதல்களை மனதுக்குள்ளே வைத்திருந்தால், மனதுடன் வயதும் குன்றி, சோர்ந்து போய் விடுவோம்.
எந்த வயதிலும் நம் பலத்தை தெரிந்து கொள்வதைவிட, பலவீனத்தை தெரிந்து கொள்வது நல்லது. ஆண்டுகள் போகப் போக உடல் பலவீனமடையத் தான் செய்யும்; நம் மனதை பலமாக்கிக் கொண்டால் போதும்.
இந்த மனப்பக்குவம் தான், இந்த வயதிலும் என்னை இளமையாக இயக்கிக் கொண்டு இருக்கிறது.
********************
மாக்கல் பாத்திர சமையல் ருசியே தனி!
மாக்கல் பாத்திரங்கள் தயாரித்து விற்பனை செய்து வரும், நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த, வெங்கடாஜலபதி மகளிர் சுய உதவிக்குழுவின் தலைவி சுமதி:எங்கள் ஊரில், 100க்கும் அதிகமான குடும்பங்கள் இருக்கின்றன. மாக்கல்
எங்கள் பகுதியில் மட்டும் கிடைப்பதால், ஆண்டு முழுக்க எங்களுக்கு ஆர்டர் இருக்கும். காலையில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, ஊருக்கு வெளியே இருக்கும் எங்கள், 'லேத்' பட்டறைக்கு வந்து விடுவோம்.
மலையில் இருந்து வெட்டி எடுத்த மாக்கல்லை, லேத்துக்கு வண்டி வாயிலாக கொண்டு வருவோம். கல்லை வெட்டுற வேலைகளை எங்கள் வீட்டு ஆண்கள் பார்த்து கொள்வர்.
கல்லை உடைக்கும்போதே, அதில் என்ன பாத்திரம் செய்ய முடியும் என்று தெரிந்து விடும்.
கல்லை மிஷினில் வைத்து, பொருளுக்கான வடிவம் கொண்டு வருவோம். அதன்பின், கூர்மையான உளியால் அடித்து குழி எடுப்போம். கடைசியாக உப்பு காகிதம் வைத்து, 'பாலிஷ்' செய்து விற்பனைக்கு அனுப்பிடுவோம்.
ஆரம்பத்தில் ஆண்கள் தான் இந்த தொழிலை செய்து வந்தனர். கல் செதுக்க, உடைக்க மிஷின் வந்த பின், பெண்களும் மாக்கல் தொழிலுக்கு வந்தோம்.'மகளிர் சுய உதவிக்குழுவில் சேர்ந்தால், வங்கிக் கடன் எளிதில் கிடைக்கும்' என்று கூறினர்.
அதனால், எங்கள் ஏரியாவில் இருக்கும், 12 பெண்கள் சேர்ந்து, குழுவை ஆரம்பித்தோம். குழு வாயிலாக கடன் வாங்கி, மாக்கல் செதுக்கும் மிஷின் வாங்கி, இன்னிக்கு எங்கள் வீட்டு
ஆண்களுக்கும் வேலை தருகிறோம்.
மாக்கல் பாத்திரங்களில் சமைத்தால், சாப்பாடு மிக ருசியாக இருக்கும். இதில் மருத்துவ குணம் இருக்கிறது என்பதால், பலர் இதை விரும்பி வாங்கி செல்கின்றனர். 40க்கும் அதிகமான ரகங்களில் மாக்கல் பாத்திரம்
தயாரித்து விற்பனை செய்கிறோம். எந்த கலரும், ரசாயனமும் சேர்க்காததால், மக்களுக்கு இது மிகவும் பிடித்து விட்டது.பெரிய பாத்திரங்கள் செய்து மீதி விழும் கல்லை வீணாக்காமல், குழந்தைகளுக்கான சொப்பு சாமான்கள் தயார் செய்கிறோம். மொத்த வியாபாரிகள் பலர், லாரியில் வந்து வாங்கி செல்வர். இயற்கையாக கிடைப்பதால், மூலப்பொருளுக்கு பெரிதாக செலவு
செய்வது இல்லை.மிஷின் வந்தாலும், கல் பாத்திரம் செய்வது எளிதான வேலை அல்ல. கையில் அடிபடும்; கை காய்த்து போகும். எடை அதிகமான பொருளை துாக்கி துாக்கி தோள்பட்டை வலிக்கும். துாசி விழுவதால் அலர்ஜி வரும்.
இதையெல்லாம் தாண்டி, இது எங்களின் வாழ்வாதாரம். பள்ளிப்படிப்பை கூட முடிக்காத நாங்கள், மாதத்திற்கு 3 லட்சம் ரூபாய், 'டர்ன் ஓவர்' செய்கிறோம்.