/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
7 அடி உயர டிபன் கேரியரை தினமும் வாசலில் வச்சிடுவோம்!
/
7 அடி உயர டிபன் கேரியரை தினமும் வாசலில் வச்சிடுவோம்!
7 அடி உயர டிபன் கேரியரை தினமும் வாசலில் வச்சிடுவோம்!
7 அடி உயர டிபன் கேரியரை தினமும் வாசலில் வச்சிடுவோம்!
PUBLISHED ON : பிப் 06, 2025 12:00 AM

உணவகத்தின் வாசலில் மெகா சைஸ் டிபன் கேரியர் வைத்து, பாலிதீன் பைகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும், மதுரை மாவட்டம், சின்ன சொக்கிக்குளம், 'ஹரிஸ் மெஸ்' உரிமையாளர் செல்வம்: என் சொந்த ஊர், மதுரை மாவட்டம், மேலுார் பக்கத்தில் உள்ள சூரக்கண்டு கிராமம்.
குடும்பத்தில் இருந்த பொருளாதார நெருக்கடியால், விவசாயம் செய்ய வேண்டும் என்ற என் எண்ணத்தை வீட்டில் யாரும் கேட்கவில்லை.
இதனால், நானும், அம்மாவும் சேர்ந்து பிளாட்பாரத்தில் ஒரு சின்ன டிபன் கடை ஆரம்பித்தோம்; படிப்படியாக பிசினஸ் சூடுபிடிக்க ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் தினமும், 30 பேருக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு, மெஸ் வைத்து வளர்ச்சி அடைந்தோம்.
எங்கள் மெஸ்சில் சாப்பிட வரும் விவசாயிகளுக்கு, 10 சதவீதம் தள்ளுபடி என்ற சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினோம்.
'ஊருக்கே சோறு போடும் உங்களுக்கு, நாங்கள் கொடுக்கும் இந்த சலுகை எல்லாம் ஒரு சின்ன துரும்புக்கு கூட ஈடாகாது' என்று கூறும்போது, அவர்கள் வயிறார சாப்பிட்டு, மனதார வாழ்த்துவர்.
அதுமட்டும் அல்லாமல், நிலம் இருந்தும் முதலீடு செய்ய முடியாமல் இருக்கும் விவசாயிகளுக்கு விதையும், இடுபொருட்களும் வாங்கிக் கொடுக்கிறோம்.
எங்கள் உணவகத்திற்கு தேவையான காய்கறிகளை, முடிந்த அளவிற்கு நேரடியாக விவசாயிகளிடம் இருந்து தான் வாங்குகிறோம்.
சமையலுக்கு மரச்செக்கு எண்ணெய் பயன்படுத்துகிறோம். சாப்பிட்ட பிறகு உணவு செரிமானமாக, வெற்றிலை, பாக்கு இலவசமாகக் கொடுக்கிறோம். பார்சல் சாப்பாடு, டிபன் கேரியரில் வாங்குவோருக்கு வாழை இலை கொடுக்கிறோம்.
பாலிதீன் பைகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் பல உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.
இதைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்று யோசித்த போதுதான், பிரமாண்ட டிபன் கேரியர் ஐடியா தோன்றியது.
இதன்படி, 7 அடி உயரம், 3 அடி சுற்றளவு கொண்ட ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டிபன் கேரியருக்கு ஆர்டர் கொடுத்து, அதில் மெஸ் பெயரை பெயின்டில் எழுதினோம்; இதற்கு, 40,000 ரூபாய் செலவானது.
கடந்த நான்கு ஆண்டுகளாக, இதை தினமும் காலையில் வெளியில் எடுத்து வைத்து, இரவு மெஸ்சை மூடும்போது உள்ளே எடுத்து வைப்போம்.
கேரியர் கனமாக இருப்பதால், தினமும் எடுத்து வைப்பது சிரமமாக இருந்தாலும், ஒருநாள் கூட இதை வாசலில் எடுத்து வைக்காமல் இருந்தது இல்லை.
இன்று, 'அந்த டிபன் கேரியர் உணவகம் எங்கே இருக்கிறது' என்று எல்லாரும் கேட்கும் அளவிற்கு பிரபலமாகி விட்டது.
தொடர்புக்கு: 96778 90689.