'தேடல், தொடர் முயற்சி இருந்தால் தொழிலில் ஜெயிக்கலாம்!'
'தேடல், தொடர் முயற்சி இருந்தால் தொழிலில் ஜெயிக்கலாம்!'
PUBLISHED ON : செப் 23, 2026 12:00 AM

கையில் அணியும், 'பிரேஸ்லெட்'களை தயாரித்து, சமூக வலைதளங்கள் வாயிலாக விற்பனை செய்து வரும், திண்டுக்கல் மாவட்டம், எ.வெள்ளோடு பகுதியைச் சேர்ந்த ஜெனி பிரின்சியா:
என் அப்பா விவசாயி; அம்மா இல்லத்தரசி. அக்காவிற்கு திருமணமாகி விட்டது. பி.ஏ., ஆங்கில இலக்கியம் படித்தேன். வீட்டின் வறுமைச்சூழல் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
குறைந்தபட்சம் நம் செலவுகளையாவது நாமே பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக இருந்தது. அந்த எண்ணமே, நான் தொழில் துவங்குவதற்கு அடிப்படை காரணம்.
எனக்கு கைகளில் அணியும், 'பிரேஸ்லெட்' தயாரிப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களில், அது தொடர்பான காணொளிகளை நிறைய பார்த்து வந்தேன். ஒவ்வொரு காணொளியையும் பார்க்கும்போது, 'இதேபோன்று ஒரு வடிவத்தை நாமும் முயற்சி செய்து பார்க்கலாமா' என்று மனதிற்குள் தோன்றும்.
அந்த ஆர்வத்தில் தான், பிரேஸ்லெட் தயாரிப்புக்கேற்ற பொருட்கள் சிறிது வாங்கி தயாரித்து பார்த்தேன்; நன்றாக வந்திருந்தது.
என் தயாரிப்புகளை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிடுவேன். என் பதிவுகளை பார்த்து நண்பர்களும், தெரிந்தவர்களும் விபரம் கேட்க ஆரம்பித்தனர். அப்படித்தான், 'ஆர்டர்'கள் வர ஆரம்பித்தன.
முதன் முதலாக கிடைத்த லாபம், 200 ரூபாய்; அது சிறு தொகை தான். ஆனால், நாமும் ஒரு தொழில் செய்ய முடியும்; சம்பாதிக்க முடியும் என்ற தைரியத்தை, நம்பிக்கையை அது தந்தது. நான் சம்பாதித்த பணம் என்ற பெருமையுடன், அந்த பணத்தை அம்மாவிடம் கொடுத்த அந்த தருணத்தை மறக்கவே முடியாது.
காலையில் கல்லுாரி, மாலையில் வீட்டு வேலை, அதன்பின் என் வியாபாரத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவது என, பகல் முழுதும் ஓடியபடியே இருப்பேன்.
ஆர்டர்களுக்கான பொருட்களை, அடுத்த நாள் அதிகாலை 2:00 மணி வரை கண் விழித்து தயாரிப்பேன். ஆனால், ஒரு ஆர்டரை முடித்து வாடிக்கையாளரிடம் ஒப்படைக்கும்போது ஒரு திருப்தி வரும். அவர்களது பாராட்டுகளும், அதனால் கிடைக்கும் வருமானமும், எல்லா கஷ்டங்களையும் மறக்க வைத்து விடும்.
அடுத்ததாக, பிரத்யேக பரிசு பொருட்கள் தொகுப்பு கேட்டு, சமூக வலைதளத்தில் வந்த ஆர்டரை மறக்க முடியாது. அவர், பரிசு பொருட்களின் தொகுப்பு வேண்டும் என்று தான் ஆர்டர் செய்தார். அதை எப்படி செய்ய வேண்டும் என்று, 'யூ டியூப்'பில் பார்த்து, அதற்கு தேவையான பொருட்களை வாங்கி, நல்ல வடிவத்தில் செய்து அனுப்பினேன்.
நான் அனுப்பியது வாடிக்கையாளருக்கு மிகவும் பிடித்து போய், பாராட்டினார். எனக்கு நானே சபாஷ் சொல்லி கொண்டேன். ஒரு விஷயம் தெரியவில்லை எனில், பயப்பட தேவையில்லை. தேடல் இருந்தால் கற்றுக் கொண்டு, தொடர் முயற்சியுடன் ஜெயிக்கலாம்.
