'மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கும் தில்லைநாயகம் அரிசி!
'மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கும் தில்லைநாயகம் அரிசி!
PUBLISHED ON : செப் 22, 2026 12:41 AM

'தில்லைநாயகம்' என்ற பாரம்பரிய நெல் ரகத்தை சாகுபடி செய்து, பரவலாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள, சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த, 50 வயதாகும் இயற்கை விவசாயி சியாமளா:
எங்களுக்கு 5 ஏக்கர் நிலம் இருக்கிறது. 10 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். பாரம்பரிய நெல் ரகங்களை தேடி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடக்கக்கூடிய விதை திருவிழாக்களுக்கு செல்வது வழக்கம்.
கடந்தாண்டு கரூரில் நடந்த விதை திருவிழாவில் தான், தில்லைநாயகம் என்ற நெல் குறித்தும், அதில் உள்ள ஏராளமான மருத்துவ குணங்கள் குறித்தும் தெரிந்து கொண்டேன். ஆர்வம் அதிகமாகி, அந்த ரகத்தை சாகுபடி செய்ய ஆரம்பித்தேன்.
தில்லைநாயகம் ரகத்தின் பூர்வீகம் மதுரை. சோறு, இட்லி, தோசை, கஞ்சி என எல்லா உணவுக்கும் ஏற்ற ரகம். இதில் சமைத்த உணவுகள் மிகவும் சுவையாக இருக்கும். அரிசி சன்னமாகவும், மோட்டாவாகவும் இல்லாமல் நடுத்தர அளவில் இருக்கும்.
குறிப்பாக, பழைய சோற்றுக்கு அற்புதமாக இருக்கும். இந்த அரிசியை நான் பயன்படுத்த ஆரம்பித்த பின், சிறிது கூட சோர்வு இல்லாமல், உடல் சுறுசுறுப்பாக இருக்கிறது. இதில், உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய புரதச்சத்து, 7.15 சதவீதமும், நீரிழிவு நோயை கட்டுப்படுத்தக்கூடிய, 'பயோபிலவனாய்டுகள்' என்ற தாவர உயிர் வேதிப்பொருள் மற்றும் மலச்சிக்கலை கட்டுப்படுத்தும் நார்ச்சத்தும் அதிகம் உள்ளது.
விதை நெல் உற்பத்திக்காகவும், அரிசி தேவைக்காகவும் தலா அரை ஏக்கரில் இந்த நெல்லை சாகுபடி செய்தேன். இரு பிரிவுகளாக தனியாக சாகுபடி செய்தாலும், மகசூலில் பெரிய வித்தியாசம் இல்லை. இரு அரை ஏக்கரிலும், தலா 600 கிலோ நெல் கிடைத்தது. விதை நெல்லை எங்கள் தேவைக்கு கொஞ்சம் எடுத்துக் கொண்டு, மீதியை தேவைப்படும் விவசாயிகளுக்கு கொடுத்து வருகிறேன்.
அரிசி உற்பத்திக்காக சாகுபடி செய்த நெல்லை அரைத்ததில், 350 கிலோ அரிசி கிடைத்தது. எங்கள் வீட்டு தேவைக்கு போக, கூடுதலாக உள்ள அரிசியை நண்பர்கள், உறவினர்களுக்கு கொடுத்து வருகிறேன்.
விதை நெல்லை பரவலாக்கம் செய்வதும், இந்த அரிசியின் மகத்துவத்தை மக்கள் மத்தியில் சேர்ப்பதும் தான், என் முதன்மையான நோக்கம். இதனால், விதை நெல் மற்றும் அரிசிக்கு நிரந்தரமான விலை நிர்ணயம் செய்வதில்லை. இதை வாங்குவோரின் ஆர்வத்தை பொறுத்தே நான் தரக்கூடிய அளவையும், விலையையும் நிர்ணயம் செய்கிறேன். அதிக மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த நெல், தமிழகம் முழுக்க விளைவிக்கப்பட வேண்டும் என்பதே என் பெரும் கனவு.
தொடர்புக்கு: 99941 30443.
