/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
பெண்கள் ஏதேனும் ஒன்றை சாதிக்க வேண்டும்!
/
பெண்கள் ஏதேனும் ஒன்றை சாதிக்க வேண்டும்!
PUBLISHED ON : நவ 30, 2024 12:00 AM

சிலம்பத்தில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் பல்வேறு பரிசுகள் பெற்றுள்ளதுடன், இளம் வயதிலேயே போட்டிகளுக்கு நடுவராகவும் இருக்கும், மதுரையைச் சேர்ந்த கல்லுாரி மாணவி காயத்ரி: மதுரை, மங்கையர்க்கரசி பெண்கள் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு வேதியியல் படிக்கிறேன்.
ஆதி மனிதர்கள் கைகளால் சண்டையிட்டு, விலங்குகளிடம் இருந்து தற்காத்து கொண்டனர். பின், தடி எனும் கம்பை பயன்படுத்தினர்.
அதன் தொடர்ச்சி தான் சிலம்பம். சிலம்பத்தில் 18 வகை பாட முறைகள் உள்ளன.
ஒற்றைக் கம்பு, இரட்டை கம்பு, மான் கொம்பு, வேல் கம்பு, வாள் - கேடயம், சுருள் வாள் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்ட 32 வகையான ஆயுதங்களும் உள்ளன.
தொடு புள்ளி எனும் சிலம்ப சண்டை முறை, பாவலா பம்மல், பதுங்கல் என உடல் அசைவுகளாலும், கூச்சலிடுதல் மற்றும் பார்வையாலே எதிரியை பயமுமுறுத்தி மிரட்டும் அம்சங்களும் சிலம்பத்தில் உள்ளன.
பெண்கள் ஏதேனும் ஒன்றை சாதிக்க வேண்டும்; தயங்கக் கூடாது. யாராவது ஏதேனும் சொல்வரே, கோபித்து கொள்வரே என பார்த்தால் முன்னேறவே முடியாது. நம் லட்சியத்தை நோக்கி பயணித்து கொண்டே இருக்க வேண்டும்.
எங்கள் தலைமுறையில் சிலம்பம் கற்றுக் கொண்ட முதல் பெண் நான் தான். இதற்கு கொரோனா காலத்திற்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
நாங்கள் குடியிருக்கும் பரவை கிராமப் பகுதியில், ஆசான் முத்துநாயகம் - இன்பவள்ளி தம்பதி, இந்த கலையை கற்றுத் தந்தனர்.
டில்லியில் நடந்த தேசிய சிலம்ப போட்டியில் முதல் பரிசும், முதல்வர் கோப்பைக்கான சிலம்பம், மான் கொம்பு போட்டிகளில் மூன்றாவது இடமும் பிடித்தேன். இவ்விரு போட்டிகளிலும் என் கல்லுாரி சார்பில் பங்கேற்றேன்.
டில்லியில் பிரதமர் மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில், எங்கள் கிராமத்தைச் சேர்ந்த 12 பேர் புலியாட்டம், அலங்கார சிலம்பம் ஆடினோம். கடந்தாண்டு தொடர்ந்து மூன்று மணி நேரம் மான் கொம்பு விளையாடி, நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தேன்.
மதுரை சித்திரை திருவிழாவில், மரக்கால் அணிந்து சுவாமிக்கு முன் ஏழு மணி நேரம் ஊர்வலம் வந்தேன்.
மதுரை அரசு பொருட்காட்சி, மாமதுரை விழா, திருமலை நாயக்கர் மஹால் விழா என பல அரசு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று, சான்றிதழ்கள் பெற்றுள்ளேன்.
ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு மலர் கண்காட்சிகளில் சிலம்பாட்டம், புலியாட்டம் ஆடியுள்ளேன். இனி வரும் காலங்களில், நம் நாட்டின் பெருமையை உலகறியச் செய்யும் விதமாக, நாட்டிற்காக விளையாடவும் ஆவலாக இருக்கிறேன்.

