PUBLISHED ON : செப் 09, 2025 12:00 AM

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார் தாசில்தாராக பணியாற்றும் சாந்தமீனா:
மயிலாடுதுறை பக்கத்தில் இருக்கும் திருமங்கலம் தான் சொந்த ஊர். நான் குழந்தையாக இருந்தபோதே, குடும்பத்தை விட்டு அப்பா பிரிந்து சென்று விட்டார். 5ம் வகுப்பு முடித்த என்னை, மயிலாடுதுறையில் பெரியம்மா வீட்டில் விட்டார் அம்மா.
பிளஸ் 2 வரை அங்கு இருந்துதான், அரசு பள்ளியில் படித்தேன். கல்லுாரியில் படித்து, வேலைக்கு சென்று அம்மாவை உட்கார வைத்து பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்போடு இருந்தேன்.
ஆனால், என் தாய்மாமனுக்கு திருமணம் செய் து வைத்து விட்டனர். அப்போது என் வயது, 17; அவருக்கு, 32. என் மகளுக்கு, 1 வயது கூட முடியவில்லை. கணவர், எங்களை பிரிந்து வே றொ ரு பெண்ணுடன் சென்று விட்டார்.
அழுது புலம்பி ஓய்ந்த பின், முன்னேற வேண்டும் என முடிவெடுத்தேன்.
தனியார் பள்ளியில், 400 ரூபாய் சம்பளத்திற்கு எல்.கே.ஜி., டீச்சர் வேலைக்கு சென்றேன். என் முதல் சம்பளம் பெரிய நம்பிக்கையை கொடுத்தது. மகளை, என் பெரியம்மாவிடம் கொடுத்து வளர்க்க சொன்னேன்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தபால் வாயிலாக பி.ஏ., வரலாறு, நுாலகவியலில் முதுநிலை மற்றும் எம்.பில்., முடித்தேன். 2008ல், குரூப் 2 தேர்வு எழுதினேன்; தேர்ச்சி பெற முடியவில்லை.
என் தோழி சென்னையில் இருக்கிற, 'கோச்சிங் சென்டர்' குறித்து சொல்ல, அதில் சேர்ந்தேன். வார இறுதி நாட்களில் நடை பெறும் வகுப்பிற்கு பஸ், டிரெயின் பிடித்து ஓடுவேன்.
சென்னையில் பெரியம்மாவின் மகள் வீட்டில் குளித்து, கிளம்பி, வகுப்புக்கு சென்று, இரவு மறுபடியும் ஊருக்கு கிளம்புவேன்.
அடுத்து எழுதிய குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று, 2012ல் திருவிடைமருதுார் தாலுகா அலுவலகத்தில், 'ரெவின்யூ அசிஸ்டென்ட்' பணி கிடைத்தது.
அரசு பணியில் சேர்ந்த அந்த முதல் நாள்... நான் பட்ட வலிகள் எல்லாம் ஆனந்த கண்ணீராக பெருக்கெடுத்தது. ரெவின்யூ இன்ஸ்பெக்டர், துணை தாசில்தார் என முன்னேறி, கடந்தாண்டு தாசில்தாராக பொறுப்பேற்றேன்.
அரசு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பணிகளுக்கான கணக் கெடுப்புக்காக வீடு வீடாக செல்லும்போது, அங்கிருக்கும் குழந்தைகளிடம், 'படித்தால் தான் வாழ்க்கையில் நல்ல இடத்துக்கு செல்ல முடியும்' என்று நம்பிக்கை வார்த்தைகளை கூறுவேன்.
என் உறவுகளுக்கும், என்னை சுற்றி இருப்போருக்கும் இப்போது நான் 'ரோல் மாடல்!' என் வேலையால் தான் எனக்கு சமூகத்தில் மரியாதை கொடுக்கப்படுகிறது.
உங்களுக்கு வாழ்க்கையில் என்னவெல்லாம் வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதை ஒரு வேலை கொடுக்கும்.