PUBLISHED ON : பிப் 28, 2026 12:12 AM

ஜல்லிக்கட்டு காளைகள், 40க்கும் மேற்பட்டவற்றை வளர்த்து வரும், புதுக்கோட்டை மாவட்டம், கைக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன்: நான், 45 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறேன். ஜல்லிக்கட்டுக்கென நான் எந்தவித பயிற்சிகளும் என் காளைகளுக்கு கொடுப்பதில்லை.
ஆனாலும், வாடிவாசலை திறந்து விட்டால், சீறிப் பாய்ந்து விளையாடி, போட்டிகளில் பரிசுகளை காளைகள் குவித்து விடும்.
நீண்ட நேரம் களத்தில் நின்று விளையாடுவதற்கும், ஜல்லிக்கட்டு வீரர்களின் பிடியில் சிக்காமல் வெற்றி அடைவதற்கும் உடல் வலிமையும், சுறுசுறுப்பும் தேவை.
தினமும் காளைகளை சுத்தமாக குளிக்க வைத்து, சத்தான தீவனங்கள் கொடுத்தாலே போதும்... அவை, ஜல்லிக்கட்டுக்கு தயாராகி விடும். ஏனெனில், சீறிப் பாய்வது தான் காளைகளின் இயல்பு.
ஜல்லிக்கட்டு காளைகளில் போக்கு மாடு, சுத்து மாடு என இரு வகைகள் உண்டு. போக்கு மாடு என்பது சீறிப் பாய்ந்து நேராக சென்று கொண்டே இருக்கும்.
சுத்து மாடு என்பது ஒரே இடத்தில் நின்று, சுத்தி சுத்தி லாவகமாக விளையாடும். நான் வளர்க்கும் காளைகள் எல்லாமே சுத்து மாடுகள் தான்.
இதற்கு நிறைய தீவனங்கள் செலவாகும். பாரம்பரியம் அழிந்து விடக்கூடாது என்பதாலும், என் தனிப்பட்ட ஆர்வத்தாலும், எங்கள் நிலங்களை விற்று தான், இந்த மாடுகளுக்கு செலவு செய்து வருகிறேன்.
ஆறு மாதங்களுக்கு முன், 11 லட்சம் ரூபாய் கொடுத்து, தஞ்சாவூரில் இருந்து ஒரு காளையை வாங்கி வந்தேன்.
என் காளைகள் ஜல்லிக்கட்டு போட்டிகளில் சீறிப் பாய்ந்தால், அந்த இடமே கலவர பூமி ஆகிவிடும். அதனால் தான், என் காளைகளில் ஒருவனுக்கு, 'கலவரம்' என்றே பெயர் வைத்துள்ளேன்.
'கரிகாலன்' என்ற காளை, சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்று, எனக்கு கார் வாங்கி கொடுத்தான்.
'புல்லட்' என்ற காளை, ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஜல்லிக்கட்டில் ஜெயித்து, இரு சக்கர வாகனமான, புல்லட் பரிசு வாங்கி கொடுத்தான்; அதனால், அந்த பெயரையே அவனுக்கு வைத்து விட்டேன்.
கடந்த, 2022ல் அவனே போட்டியில் மீண்டும் ஜெயித்து, கார் வாங்கி கொடுத்தான். ஜல்லிக்கட்டு போட்டியில் நான் கார் வாங்கியது, இரண்டாவது முறை.
நான் வளர்த்த காளைகள் வாயிலாக நுாற்றுக்கணக்கான சைக்கிள்கள், தங்கக் காசுகள் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வாங்கி இருக்கிறேன்.
இந்த காளைகளால் தான், 'கைக்குறிச்சி தமிழ்ச்செல்வன்' என்ற என் பெயர், நாடு முழுதும் பிரபலமானது. இந்த காளைகளுக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

