இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தாரக மந்திரம்: 'ஒரு வாக்காளர் விடுபட்டாலும் அது ஜனநாயகத்திற்குப் பின்னடைவு'. இந்த உறுதிமொழியை மெய்ப்பிக்கும் விதமாக, தேனி மாவட்டத்தின் அடர்ந்த மலைப்பகுதியில் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு அரங்கேறியுள்ளது.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளி மலை, வருசநாடு மலைப்பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையின் உச்சியில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் இங்குச் செழிப்பாக இருந்த தேயிலைத் தோட்டங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்ந்து வந்தனர்.
காலப்போக்கில், தோட்டங்கள் பராமரிக்க முடியாமல் மூடப்பட்டதால், மக்கள் வாழ்வாதாரத்திற்காகத் தேனி மற்றும் ஆண்டிப்பட்டி நகரங்களுக்கு இடம்பெயர்ந்தனர். தற்போது அங்கு மிச்சமாக உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தின் பாதுகாவலர்களாக ஒரே ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மட்டுமே அங்கு வசித்து வருகின்றனர்.
குறைவான வாக்காளர்கள் தானே என்று தேர்தல் ஆணையம் இவர்களைக் கைவிட்டுவிடவில்லை. கடல் மட்டத்திலிருந்து பல ஆயிரம் அடி உயரத்தில் உள்ள இந்த கிராமத்திற்குச் செல்ல சாலை வசதிகள் கிடையாது. வருசநாட்டிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரம் செங்குத்தான பாறைகள் மற்றும் அடர்ந்த காடுகள் நிறைந்த பாதையில் செல்ல வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் இதர உபகரணங்கள் குதிரைகள் மூலம் மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டன. தேர்தல் அலுவலர்கள், உதவியாளர்கள் மற்றும் போலீசார் என 12 பேர் கொண்ட குழுவினர், சுமார் 3 மணி நேரம் நடைப்பயணமாகவே மலை உச்சிக்குச் சென்றனர்.
மலை உச்சியில் அமைந்துள்ள அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிடப் பள்ளியில் (வாக்குச்சாவடி எண்: 261) தேர்தல் மையம் அமைக்கப்பட்டது. அங்கு மின்சாரம் கிடையாது, கடும் குளிரில் நடுங்கிய அதிகாரிகள், காய்ந்த மரக்குச்சிகளை எரித்து நெருப்பு மூட்டி குளிர்காய்ந்தனர். கைவசம் இருந்த உணவைச் சாப்பிட்டுவிட்டு, ஜனநாயகம் தழைக்க அந்த இரவைக் கழித்தனர்.
மறுநாள் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.பதிவு செய்யப்பட்டிருந்த 5 வாக்காளர்களில், ஒருவர் தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியூர் சென்றிருந்தார்.மீதமுள்ள நான்கு பேரும் ஆர்வத்துடன் வந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.வாக்குப்பதிவு முடிந்ததும், இயந்திரங்கள் மீண்டும் பத்திரமாகச் சீல் வைக்கப்பட்டு, அதே குதிரைகளின் மூலம் மலையிலிருந்து கீழிறக்கப்பட்டு, தேனியில் உள்ள காப்பறைக்கு கொண்டு செல்லப்பட்டன.