PUBLISHED ON : அக் 13, 2025 12:00 AM

நினைவாற்றல் போட்டிகளில் பங்கேற்பது, மலையேற்ற சாகசங்கள் செய்வது, வேகமான வாசிப்புத்திறன் என, 57 வயதிலும் சுறுசுறுப்பாக இயங்குவது பற்றி கூறும் மருத்துவ பேராசிரியை முத்து பிரபா:
நெல்லை அரசு மருத்துவக் கல் லுாரியில், எம்.பி. பி.எஸ்., படிப்பை முடித்தேன்.
மருத்துவ முதுகலை படிப்பான, எம்.டி.,யை சென்னை மருத்துவக் கல்லுாரியில், மகப்பேறு மற்றும் மகளிர் நலம் சார்ந்த மருத்துவத்தை முக்கிய பாடமாக எடுத்து, படித்து முடித்தேன்.
தற்போது, நெல்லை மருத்துவக் கல்லுாரியில் பேராசிரியையாக பணிபுரிகிறேன்.
புத்தகங்கள் வாசிப்பது எனக்கு எப்போதும் பிடித்த விஷயம். கொரோனா காலத்தில், 'மனதை கட்டுபாட்டுக்குள் வைக்கும் முறை' எனும் தலைப்பில், 'வெற்றிக்கு படியுங்கள்' என்ற ஒரு பயிற்சி குறித்து அறிந்தேன்.
அதன் வாயிலாக, வாசிக்கும் வேகத்திறனை அதிகரிக்கலாம் என்றும் தெரிந்து கொண்டேன். உடனே, ஐந்து நாட்கள் பயிற்சி எடுத்து கொண்டேன்.
அடுத்தடுத்த தொடர் பயிற்சிகள் வாயிலாக, ஒரு நிமிடத்தில், 1,000க்கும் கூடுதலான வார்த்தைகளைப் படிக்க முடிந்தது.
கடந்த, 2023ல், மும்பை நகரில், சர்வதேச அளவில் நடைபெற்ற நினைவாற்றல் போட்டியில், மூன்றாம் இடம் பெற்றபோது, எனக்கு, 55 வயது; முதலிடம் பெற்றவர் வயது, 11. இரண்டாம் இடம் பெற்றவர் வயது, 15. ஆகையால், வயது என்பது வெறும் எண் மட்டுமே.
'மருத்துவம் இல்லா வாழ்வு' எனும் தலைப்பில், ஒருநாள் பயிற்சி, நெல்லையில் நடந்தது. அதில், அவர்களே மூச்சுப் பயிற்சியுடன், யோகா பயிற்சியும் கொடுத்தனர்.
மேலும் அவர்கள், மலையேறும் பயிற்சியும் தருகின்றனர் என்பதை அறிந்தேன். மலையேறுவதில் எனக்கு ஆர்வம் அதிகமாக இருந்ததால், அதில் பங்கேற்றேன்.
அதன்பின், 2023ல், வட மாநிலங்களில், பல இடங்களில் உள்ள மலைகளில் ஏறினேன். 2024லும் கூட, மலையேற்றத்தில் கலந்து கொண்டேன்.
யோகா, மலையேற்றம் போன்றவற்றால், என் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதால், கடந்த, ஐந்து ஆண்டுகளாக எந்த வித மருந்துகளையும் நான் எடுத்துக்கொள்வதில்லை.
யாராக இருந்தாலும், எந்த வயதிலும், எவ்வளவு வேலைப்பளுவிற்கு இடையிலும், இதை சாதிக்கலாம்.
இது தான் வாழ்க்கை எனக்குச் சொன்ன பாடம். இதை தான் அனைவருக்கும் அழுத்தமாகச் சொல்ல நினைக்கிறேன்!