/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
திறமைக்கு வாய்ப்பளிக்கும் மனோபாவம் வர வேண்டும்!
/
திறமைக்கு வாய்ப்பளிக்கும் மனோபாவம் வர வேண்டும்!
PUBLISHED ON : ஏப் 11, 2025 12:00 AM

எழுத்தாளர், நாவல் ஆசிரியர், திரைப்பட வசனகர்த்தா என பல முகங்கள் கொண்ட பொற்கொடி: எனக்கு, எட்டாம் வகுப்பிலேயே எழுத்தில் ஆர்வம் ஏற்பட்டது. பள்ளி ஆண்டு விழாவிற்காக நான் எழுதி, நடித்த நாடகங்கள், என் பள்ளி சிநேகிதிகளிடையே பிரபலம்.
சிறு வயது முதலே, பத்திரிகைகளில் திரை விமர்சனங்களை ஆர்வத்துடன் படிப்பேன். பல நேரங்களில் என் கணிப்பும், விமர்சனமும் பொருந்தி போகும்.
திரை விமர்சனங்களின் இறுதி வரிகள் சிலவற்றை மறக்க முடியாது... உதாரணமாக, 'உலகப் புகழ் பெற்ற சமையல் கலைஞர், அனைவரையும் அழைத்து உப்புமா கிண்டியது போலுள்ளது, விந்திய மலையை புரட்டி, விரலளவு ஓணானை அடித்து விட்டார் இயக்குநர்' ஆகியவை இன்றும் நினைவில் உள்ளன.
அனைத்து படங்களையும் விமர்சிப்பதும், விவாதிப்பதும் எங்கள் குடும்ப வழக்கம். இப்படித்தான் என் ஆர்வம் திரைத்துறை நோக்கி வளர்ந்தது.
வசனங்கள் தான் ஒரு படத்தின் உயிர்நாடி. ஓர் ஆண் எழுதக்கூடிய வசனங்கள், விமர்சன ரீதியாக சரியாக இருக்கும்; பெண் எழுதக்கூடிய வசனங்கள், உணர்வை தொடும் விதத்தில் அமைந்திருக்கும்.
நான் இந்த துறைக்கு இப்போது தான் வந்திருந்தாலும், என் வசனங்களும் பேசப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். என் கனவுகளை விரட்டிப் பிடிப்பேன் என்று ஆழமாக நம்புகிறேன்.
கதை விவாதங்களின்போது நேரம், காலம் பார்க்காமல் ஆண்களால் ஈடுபட முடியும். ஆனால், ஒரு பெண்ணால் அதே அளவு சுதந்திரத்துடன் இயங்க முடிவதில்லை.
என்னதான் திறமையிருந்தாலும், நாள் முழுக்க வீட்டு வேலைகள் செய்து விட்டு, ஒரு பெண்ணால் அவளுடைய தனிப்பட்ட செயல்களில் ஈடுபடுவது சவாலான காரியம் தான்.
குடும்பப் பொறுப்புகள் காரணமாக, அவர்கள் முழு கவனத்துடன் பணியாற்ற முடியாத சூழல் உள்ளது. எந்த துறையானாலும் ஆண் - பெண் இடையே நிறைய வித்தியாசங்கள் இருப்பதே நிதர்சனம்.
பிரபல இயக்குநர்கள் புதுமுக வசனகர்த்தாக்களுக்கு வாய்ப்பு தருவதில்லை. வருங்காலத்தில் திறமைக்கு வாய்ப்பளிக்கும் மனோபாவம் வர வேண்டும்.
குடும்பத்தினர் புரிந்து கொண்டால் தான், நம்மால் சுதந்திரமாக இயங்க முடியும். என் கணவர், எல்லா வகையிலும் ஆதரவாக இருக்கிறார்.
ஆன்லைனில் வெளியாகும் ஒரு நாடகத்திற்கு வசனம் எழுதி உள்ளேன். பல குறும்படங்களுக்கும் திரைக்கதை, வசனம் எழுதி இருக்கிறேன்; எழுதிக் கொண்டிருக்கிறேன்.
நாஞ்சில் ஏ.ஜான்பிரிட்டோ தயாரிப்பில், ராஜா முகமதுவின் இயக்கத்தில், ஒரு புதிய தமிழ் படத்திற்கு வசனகர்த்தாவாக பணியாற்றி வருகிறேன்.

