/
புகார் பெட்டி
/
செங்கல்பட்டு
/
புகார் பெட்டி: சாய்ந்த மின் கம்பங்கள் திருவடிசூலத்தில் அச்சம்
/
புகார் பெட்டி: சாய்ந்த மின் கம்பங்கள் திருவடிசூலத்தில் அச்சம்
புகார் பெட்டி: சாய்ந்த மின் கம்பங்கள் திருவடிசூலத்தில் அச்சம்
புகார் பெட்டி: சாய்ந்த மின் கம்பங்கள் திருவடிசூலத்தில் அச்சம்
ADDED : ஜன 27, 2025 11:20 PM
சாய்ந்த மின் கம்பங்கள் திருவடிசூலத்தில் அச்சம்
காட்டாங்கொளத்துார் ஒன்றியம் திருவடிசூலம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு செம்பாக்கம் மின் வாரிய அலுவலகம் வாயிலாக தெருக்களில் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு, மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் வயல்வெளியில் செல்லும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்கள் சாய்ந்து, ஆபத்தான நிலையில் உள்ளன. இதனால், வயல்வெளிகளுக்குச் செல்வோர் அச்சத்துடனேயே சென்று வரும் நிலை உள்ளது.
எனவே, இந்த மின் கம்பங்களை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மதன்,  திருவடிசூலம்.
சொந்த கட்டடத்தில் ரேஷன் கடை இயங்குமா?
மாமல்லபுரம் கங்கைகொண்டான் மண்டபம் தெருவில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த ரேஷன் கடை கட்டடத்தில், மழைக்காலத்தில் தண்ணீர் கசிவு ஏற்பட்டதால், பொருட்களை பாதுகாப்பதில் சிரமம் இருந்து வந்தது.
இதை தொடர்ந்து, காவல் நிலையம் அருகே தனியார் கட்டடத்தில், இரண்டு மாதங்களுக்கு முன், ரேஷன் கடை மாற்றப்பட்டது. அங்கு, எப்போது ரேஷன் கடை திறக்கப்படும் என்பது யாருக்கும் தெரிவதில்லை. மேலும், பொருட்களையும் சரியாக வழங்காமல், கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த இடம் மிகவும் குறுகியது என்பதால், பயனாளர்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, சேதமடைந்த ரேஷன் கட்டடத்தை சீரமைத்து, மீண்டும் கடையை செயல்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.ராஜமோகன், மாமல்லபுரம்.
வர்ணம் பூசாத வேகத்தடை வாகன ஓட்டிகள் பீதி
சித்தாமூர் அடுத்த பொலம்பாக்கம் கிராமத்தில், மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலை வழியாக இருசக்கர வாகனம், கார், லாரி என, தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இப்பகுதியில் உள்ள தனியார் கல்லுாரி எதிரே விபத்து ஏற்படுவதை தடுக்க, நெடுஞ்சாலைத் துறை சார்பில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. வேகத்தடையின் மீது அமைக்கப்பட்ட எச்சரிக்கை வர்ணம் நாளடைவில் மறைந்ததால், புதிதாக இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் இரவு நேரத்தில் செல்வோர் வேகத்தடை இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், வேகத்தடை மீது வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.சின்ராஜ்,  புத்திரன்கோட்டை.
வண்டலுார் தாலுகா ஆபீசில் ஆதார் சேவை மையம் வருமா?
நந்திவரத்தில், வண்டலுார் தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, இ - சேவை மையம் உள்ளது. அதேபோன்று, ஆதார் சேவை மையமும் தாலுகா அலுவலகத்தில் இயங்கினால், பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
தற்போது, நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி அலுவலகம் மற்றும் தபால் அலுவலகத்தில் தான் செயல்படுகிறது. எனவே, தாலுகா அலுவலகத்திலும் புதிதாக ஆதார் சேவை மையம் தொடங்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.முரளி,  நந்திவரம்.
குப்பை தேக்கம் அகற்ற வேண்டும்
நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, நந்திவரம் சிறிய தாங்கல் ஏரிக்கரையோரம் குப்பை அதிக அளவில் தேங்கியுள்ளது. அதில் ஆடுகள், மாடுகள் மற்றும் பன்றிகள் மேய்ந்து, குப்பையை இழுத்து சாலையில் போடுவதால், இவ்வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஏரிக்கரையோரம் தேங்கியுள்ள குப்பையை அகற்ற, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.பரமசிவம், நந்திவரம்.

