/
புகார் பெட்டி
/
கோயம்புத்தூர்
/
பஸ் ஸ்டாண்டில் கழிவுநீர் தேக்கம்; துர்நாற்றத்தால் மக்கள் பாதிப்பு
/
பஸ் ஸ்டாண்டில் கழிவுநீர் தேக்கம்; துர்நாற்றத்தால் மக்கள் பாதிப்பு
பஸ் ஸ்டாண்டில் கழிவுநீர் தேக்கம்; துர்நாற்றத்தால் மக்கள் பாதிப்பு
பஸ் ஸ்டாண்டில் கழிவுநீர் தேக்கம்; துர்நாற்றத்தால் மக்கள் பாதிப்பு
ADDED : ஜூன் 08, 2025 09:49 PM

வீணாகும் தண்ணீர்
பொள்ளாச்சி நகராட்சி, 29வது வார்டு, நேரு நகர் பகுதியில் குடியிருப்பு அருகே, கடந்த 6 மாதமாக குழாய் உடைந்து அதிகளவு தண்ணீர் வீணாகி வருகிறது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும், தற்போது வரை நடவடிக்கை இல்லை. எனவே, தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு விரைவில் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும்.
- ராஜன், பொள்ளாச்சி.
வாகனங்கள் ஆக்கிரமிப்பு
உடுமலை, சந்தைரோட்டில் சரக்கு வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. விதிமுறை பின்பற்றாமல் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. அவ்வழியாக செல்லும் மற்ற வாகனங்களும் செல்ல முடியாமல் நீண்ட நேரம் நெரிசல் ஏற்படுகிறது. சந்தைக்கு வருவோரும் பாதிக்கப்படுகின்றனர்.
- ராஜேஸ்வரி, உடுமலை.
ரோட்டில் பள்ளம்
பொள்ளாச்சி பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழையால், பொள்ளாச்சி முதல் ஊஞ்சவேலாம்பட்டி வரை ரோட்டில் ஆங்காங்கே பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர். எனவே, தேசிய நெடுஞ்சாலைதுறை சார்பில், ரோட்டை விரைவில் சீரமைக்க வேண்டும்.
-- தண்டபாணி, ஊஞ்சவேலாம்பட்டி.
'டிவைடர்' வைக்கணும்!
கிணத்துக்கடவு -- கொண்டம்பட்டி செல்லும் வழியில், லட்சுமி நகரில் ரோட்டின் வளைவு பகுதி அருகே, விபத்தை தடுக்க 'டிவைடர்' வைக்கப்பட்டிருந்தது. தற்போது, இவை ரோட்டின் ஓரம் நகர்த்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. போலீசார் மீண்டும் 'டிவைடர்' அமைத்து விபத்து ஏற்படுவதை தடுக்க வேண்டும்.
- மணிகண்டன், கிணத்துக்கடவு.
மேம்பால சுவரில் செடிகள்
கிணத்துக்கடவு மற்றும் முள்ளுப்பாடி மேம்பால சுவர்களில் ஆங்காங்கே செடிகள் வளர்ந்துள்ளது. செடிகள் வளர்ந்து மரமானால், மேம்பால சுவர் சேதமடையும். அதனால், தேசிய நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் செடிகளை வெட்டி அகற்றம் செய்ய வேண்டும்.
-- கணேஷ், கோவில்பாளையம்.
கழிவுநீரால் அவதி
பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில், மக்கள் நிற்கும் இடம் அருகே சாக்கடை கழிவு நீர் வழிந்தோடுவதுடன், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதை நகராட்சி நிர்வாகத்தினர் கவனித்து உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும்.
-- முருகேஷ், பொள்ளாச்சி.
துார்வார வேண்டும்
உடுமலை ஸ்ரீ நகரிலிருந்து பழநி ரோடு செல்லும் ரோட்டில், மழைநீர் வடிகாலில் குப்பை நிறைந்துள்ளது. இதனால், தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, இந்தமழைநீர் வடிகாலை துார்வார நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கண்ணன், உடுமலை.
சிதிலமடைந்த மூடி
உடுமலை, தாராபுரம் ரோட்டில் பாதாள சாக்கடை ஆள் இறங்கும் குழியின் மூடி சிதிலமடைந்துள்ளது. அவ்வழியாக கனரக வாகனங்களும் அதிகம் செல்கின்றன. சிதிலமடைந்த மூடியால் வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. இரவு நேரங்களில் மூடிகளை கவனிக்கவும் முடியாமல் வாகனங்கள் அவற்றின்மீது ஏறி செல்கின்றன.
- ரஞ்சித், உடுமலை.
கழிவுகள் தேக்கம்
உடுமலை, பழனியாண்டவர் நகர் சுரங்கபாதையில் கழிவுகள் தேங்கி நிற்பதால் அந்த பாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இப்பிரச்னையால் வாகன ஓட்டுநர்கள் தொலைதுாரம் சுற்றிவந்து செல்ல வேண்டி வருகிறது. சுரங்கபாதையை பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்களும் தேங்கி நிற்கும் கழிவுகளால் தடுமாறி செல்கின்றனர்.
- கிருஷ்ணன், உடுமலை.
நிழற்கூரையில் போஸ்டர்
உடுமலை காந்திநகர் பஸ் ஸ்டாப்பில் கட்சி விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதனால், நிழற்கூரை பொலிவிழந்து காணப்படுகிறது. எனவே போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செல்வம், உடுமலை.
சேதமடைந்த ரோடு
கணக்கம்பாளையம் ஊராட்சி பி.வி. லே-அவுட் பகுதியில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. வாகனங்கள் அவ்வழியாக செல்லும்போது அடிக்கடி பழுதடைந்துவிடுகின்றன. மழைநாட்களில் ரோடு சேரும் சகதியுமாக மாறுகிறது. அப்பகுதி மக்கள் அந்த வழிதடத்தை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர்.
- கண்ணன், கணக்கம்பாளையம்