/
புகார் பெட்டி
/
கோயம்புத்தூர்
/
வெள்ளலுார், ஸ்ரீ ராம் அவென்யூவில் 'இல்லைமயம்'
/
வெள்ளலுார், ஸ்ரீ ராம் அவென்யூவில் 'இல்லைமயம்'
ADDED : ஜூலை 06, 2025 11:46 PM

அங்கன்வாடியின் அவலம்
கோவை மாநகராட்சி, 41வது வார்டு, கருப்பராயன் கோவில் பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி வளாகத்தில், புதர் அடர்த்தியாக வளர்ந்துள்ளது. பூச்சிகள், பாம்பு, தேள் போன்ற விஷ உயிரினங்கள் நடமாட்டம் உள்ளது. குழந்தைகளுக்கு ஆபத்து இருப்பதால், வளாகத்தை சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும்.
- தமிழ் ரவி, 41வது வார்டு.
கடும் துர்நாற்றம்
ஜி.என்.மில்ஸ், 13வது வார்டு, சாஸ்திரி நகரில், சாக்கடை சரிவர சுத்தம் செய்யப்படவில்லை. கழிவுநீர் தேங்கி நிற்பதால், கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால், குடியிருப்பு பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
- பார்வதி, ஜி.என்.மில்ஸ்.
மோசமான சாலையால் அவதி
கிக்கானி பள்ளி முதல் ராம்நகர் வரை, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை, மாலை வேளையில் பள்ளி, கல்லுாரி செல்வோர், வேலைக்கு செல்வோர் அவதிப்படுகின்றனர். படேல் ரோடு சந்திப்பில் மோசமான சாலையால், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகின்றனர்.
- உண்ணிகிருஷ்ணன், ஆர்.எஸ்.புரம்.
மூடப்படாத குழிகள்
வெள்ளக்கிணறு பிரிவு, ரயில்வே கேட் அருகே சாய்ராம் அவென்யூ பகுதியில், குடிநீர் குழாய் சீரமைப்பு பணிக்காக குழி தோண்டப்பட்டது. பணி முடிந்து பல நாட்கள் ஆகியும், மூடப்படாமல் உள்ளது. இதற்கு அருகிலேயே, மீண்டும் கேபிள் பதிக்க குழி தோண்டப்பட்டது. மூடப்படாத குழிகளால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
- குமார் கணேசன், வெள்ளக்கிணறு பிரிவு.
புதர்மண்டிய ரேஷன் கடை
நஞ்சுண்டாபுரம் ரோடு, ராமநாதபுரம், 33வது ரேஷன் கடை வளாகம் போதிய பராமரிப்பின்றி உள்ளது. கடையை சுற்றிலும் புதர் மண்டி இருப்பதுடன், குப்பை நிறைந்து காணப்படுகிறது. ரேஷன் கடை வளாகத்தை சுற்றிலும் சுத்தம் செய்து, பராமரிக்க வேண்டும்.
- பிரியா ராம், ராமநாதபுரம்.
தெருவிளக்கு பழுது
வடக்கு மண்டலம், 25வது வார்டு, வ.உ.சி.நகர், சமுதாயக்கூடம் அருகில், 'எஸ்.பி - 8, பி -20' என்ற எண் கொண்ட கம்பத்தில், இரண்டு வாரமாக தெருவிளக்கு எரியவில்லை. இரவு நேரங்களில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதால், தெருவிளக்கை சரிசெய்து தர வேண்டும்.
- சின்னமுத்து, வ.உ.சி., நகர்.
சேறும், சகதியுமான ரோடு; மக்கள் அவதி
வெள்ளலுார், ஸ்ரீ ராம் அவென்யூவில் தார் சாலை வசதியில்லை. இதே போல் மழைநீர் வடிகாலும் அமைக்கப்படவில்லை. இதனால், மழைநீர் மண் சாலையில் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. சாலையில் நடப்பதற்கும், இருசக்கர வாகனங்கள் செல்வதற்கும் மிகவும் சிரமமாக உள்ளது.
- சசிகுமார், வெள்ளலுார்.
சேதமடைந்த ரோடு
மதுக்கரை, அரசு மருத்துவமனை வழியாக பைபாஸ் செல்லும், 26வது வார்டு, முல்லை நகர் பிரதான சாலையின் இறுதி பகுதி, மோசமாக சேதமடைந்துள்ளது. பைபாஸ் சாலை சந்திப்பில், தார் முழுவதும் பெயர்ந்து, கரடு, முரடாக உள்ளது. வாகனங்கள் ஏறவும், இறங்கவும் சிரமமாக உள்ளது. பிரதான சாலையாக இருப்பதால், விரைந்து சீரமைத்து தர வேண்டும்.
- கார்த்திக், மதுக்கரை.
அடிக்கடி விபத்து
திருச்சி ரோடு, ஸ்டேன்ஸ் பள்ளி மற்றும் ஐ பவுண்டேஷன் எதிரே, சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. சாலையில் பெரிய அளவில் தார் பெயர்ந்து மண்ணாக உள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்வோர், அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். விபத்துகள் பல நடந்தும், சாலையை சீரமைக்கவில்லை.
- ராதாகிருஷ்ணன், திருச்சி ரோடு.
வேகத்தடை வேண்டும்
செட்டிபாளையம் ரோடு, ஜி.டி.டேங்க் பகுதியில் தாறுமாறாக வரும் வாகனங்களால் அதிக விபத்து நடக்கிறது. அதிவேகத்தில் வரும் வாகனங்களை கட்டுப்படுத்த, இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும். விபத்துக்களால் உயிரிழப்பு ஏற்படும் முன் நடவடிக்கை வேண்டும்.
- வேல்முருகன், மதுக்கரை.