/
புகார் பெட்டி
/
கோயம்புத்தூர்
/
புது ரோடு போட நல்ல நாள் பார்க்குறாங்களோ!
/
புது ரோடு போட நல்ல நாள் பார்க்குறாங்களோ!
ADDED : செப் 01, 2025 10:31 PM

அடிக்கடி விபத்து
பேரூர் செட்டிபாளையம், ஒன்பதாவது வார்டு, ஆபீசர்ஸ் காலனி செல்லும் சாலை மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. தினமும் அதிக வாகனங்கள் இச்சாலை வழியே செல்கின்றன. சேதமடைந்த சாலையால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன.
- ராகவ், பேரூர் செட்டிபாளையம்.
சாக்கடையில் அடைப்பு
புலியகுளம் மெயின் ரோடு, 66வது வார்டு, முந்தி விநாயகர் கோவில் அருகே ஸ்ரீ ரங்கன் வீதி வரை உள்ள சாக்கடை கால்வாய் பல மாதங்களாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. சேறும், சகதியுமாக உள்ளது. மழைக்காலங்களில் சாக்கடை நிரம்பி சாலையில் வழிந்தோடுகிறது. குடியிருப்பு பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது.
- சம்பத், புலியகுளம்.
தாழ்வான ஒயர்கள்
கோணவாய்க்கால்பாளையம், சுப்பராயன் முதலியார் வீதியில், கம்பம் எண் 15ல், மின்கம்பத்தில் இருந்து ஒயர்கள் மிகவும் தாழ்வாகச் செல்கின்றன. மிகவும் ஆபத்தான முறையில் ஒயர்கள் தரைக்கு மிக அருகில் உள்ளன. மின்விபத்தால் உயிர்சேதம் நிகழ வாய்ப்புள்ளதால், உடனடியாக சரிசெய்து தர வேண்டும்.
- முத்துக்குமார், சுப்பராயன் முதலியார் வீதி.
நடைபாதை சேதம்
ரேஸ்கோர்ஸ் நடைபாதையில், ஆங்காங்கே சிலாப் உடைந்துள்ளது. வாக்கிங் செல்வோர், குழந்தைகள் தடுக்கி விழுகின்றனர். விரைந்து நடைபாதை சிலாப்பை சீரமைக்க வேண்டும்.
- முத்துக்குமார், ரேஸ்கோர்ஸ்.
இடிந்த சாக்கடை
கவுண்டம்பாளையம், நல்லாம்பாளையம் ரோடு, இந்திரா நகர், சுப்பையா வீதியில், சாக்கடை கால்வாய் பல இடங்களில் இடிந்துள்ளது. மண், கற்கள் குவிந்திருப்பதால் கழிவுநீர் செல்ல வழியில்லை. புதிதாக கழிவுநீர் வடிகால் அமைக்க பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.
- கமலாதேவி, இந்திரா நகர்.
அரைகுறை பணி
கணபதி முதல் சரவணம்பட்டி, புரோசோன் மால் அருகே ராம்ராஜ் காட்டன் எதிரே, சாலையில் இருந்த குழிகள் கான்கிரீட் கொண்டு சரிசெய்யப்பட்டது. கான்கிரீட் சீராக இல்லாமல் மேடு, பள்ளமாக உள்ளது. பெரிய வாகனங்கள் தடுமாறி செல்கின்றன. பைக்கில் செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர்.
- அருண், கணபதி.
வீணாகும் குடிநீர்
மலுமிச்சம்பட்டி முதல் செட்டிபாளையம் மெயின் ரோடு, எல் அண்ட் எல் மருத்துவமனை அருகே குழாய் உடைந்து, பல நாட்களாக தண்ணீர் வீணாகிறது. அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கையில்லை. பெருமளவு தண்ணீர் வீணாகிறது.
- விமலா, மலுமிச்சம்பட்டி.
தெருவிளக்கு பழுது
கிழக்கு மண்டலம், சேரன் மாநகர், 22வது வார்டு, கம்பம் எண் இரண்டில் பல நாட்களாக தெருவிளக்கு எரியவில்லை. இரவு நேரங்களில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
- செல்வக்குமார், சேரன் மாநகர்.
புதிய தார் சாலை எப்போது?
வேடப்பட்டி, 12வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பல மாதங்களுக்கு முன் புதிய தார் சாலை அமைக்க கற்கள், மண் கொட்டி பரப்பப்பட்டது. இதுவரை தார் சாலை அமைக்கவில்லை.
- கோகுல், வேடப்பட்டி.
கடும் துர்நாற்றம்
கோவை மாநகராட்சி, 75வது வார்டு, புளியமரம் பஸ் ஸ்டாப் பின்புறம் சாக்கடை கால்வாயில் கழிவுகள் நிறைந்து அடைத்து நிற்கிறது. அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. கொசுப்புழுக்கள் உற்பத்தியும் அதிகளவில் உள்ளது. குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது.
- குமார், 75வது வார்டு.