/
புகார் பெட்டி
/
திருப்பூர்
/
கோவில் அருகில் கழிவுநீர் தேக்கம்; நோய் பரவும் அபாயம்
/
கோவில் அருகில் கழிவுநீர் தேக்கம்; நோய் பரவும் அபாயம்
கோவில் அருகில் கழிவுநீர் தேக்கம்; நோய் பரவும் அபாயம்
கோவில் அருகில் கழிவுநீர் தேக்கம்; நோய் பரவும் அபாயம்
ADDED : ஜூன் 23, 2025 10:42 PM

கழிவுநீர் கால்வாய் அடைப்பு
உடுமலை டிவிபட்டிணம் பிளேக்மாரியம்மன் கோவில் அருகில், கழிவுநீர் கால்வாய் அடைப்பால் கொசு உற்பத்திக்கூடமாக மாறி வருகிறது. மேலும் குப்பையை அகற்றாமலும், ரோடு முறையாக சுத்தம் செய்யப்படாததாலும், துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- சிவக்குமார், உடுமலை.
தெருநாய்கள் தொல்லை
உடுமலை பாபுகான் வீதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. அப்பகுதியில் குடியிருப்புகளிலிருந்து கொட்டப்படும் குப்பைக்கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கு முன்பாகவே, ரோடு முழுவதும் பரப்பி சுகாதார சீர்கேடு ஏற்படுத்துகிறது. மேலும்,வாகன ஓட்டுநர்களை பகல் நேரத்திலும் துரத்தி சென்று அச்சுறுத்தலை உண்டாக்குகிறது.
- கணபதி, உடுமலை.
ரோட்டை சீரமையுங்க!
உடுமலை, சீனிவாசா வீதியில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டுநர்கள் ஏற்கனவே அவ்வழியாக செல்வதற்கு சிரமப்படுகின்றனர். இந்நிலையில் ரோட்டின் பாதிவரை கட்டுமான பொருட்களை கொட்டி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் வரும்போது ஒதுங்கி செல்வதற்கும் இடமில்லாமல் நெரிசல் ஏற்படுகிறது.
- ராமதிலகம், உடுமலை.
வேகத்தடை வேண்டும்
உடுமலை, ஜீவா நகர் அருகே வாகனங்கள் அதிவேகமாக வந்து திரும்புகின்றன. வேகத்தடை இல்லாததால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அதிவேகமாக வரும் வாகனங்கள் திரும்பும்போது கட்டுபாடில்லாமல் அருகில் செல்லும் பாதசாரிகள் மீதும் விடுகின்றனர். அப்பகுதியில் வாகன வேகத்தை கட்டுபடுத்தும் வகையில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
- சரண்ராஜ், உடுமலை.
குழியை மூடுங்க
உடுமலை ராமசாமி நகர் புது வாட்டர் டேங்க், 2வது வீதியில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய இடத்தில் உள்ள மண் பல நாட்களாக சரி செய்யப்படாமல் உள்ளது. இதனால், இரவில் வாகனங்களில் வருபவர்கள் கீழே விழும் அபாயம் உள்ளது. சுவர் அருகில் நிறைய குப்பை அகற்றப்படாததால், பாம்பு மற்றும் பூச்சிகள் வருகின்றன. நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கணபதி, ராமசாமி நகர்.
கால்நடைகளால் தொல்லை
வால்பாறை நகரின் முக்கிய பகுதியில் உள்ள ரோடுகளில், கால்நடைகள் கட்டுப்பாடின்றி சுற்றுவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், விபத்து அபாயம் அதிகளவு உள்ளது. எனவே, ரோட்டில் உலா வரும் கால்நடைகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- சுரேஷ், வால்பாறை.
'குடி' மகன்கள் தொல்லை
உடுமலை, பஸ் ஸ்டாண்ட் பின்புறம், அனுஷம் ரோட்டில் 'குடி'மகன்கள் ரோட்டில் இரவு நேரங்களில் நிலையில்லாமல் தாறுமாறாக செல்கின்றனர். இவ்வாறு செல்வதால் வாகன ஓட்டுநர்கள் அவ்வழியாக செல்லும்போது அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். அப்பகுதியில் வெளிச்சம் குறைவாக இருப்பதால், பெண்கள் மாலை நேரங்களில் அவ்வழியாக செல்ல அச்சப்படுகின்றனர்.
- திருமூர்த்தி, உடுமலை.
ரோட்டோரத்தில் புதர்
கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி வெளிப்புற சுவர் அருகே, ரோட்டோரத்தில் அதிகளவு செடிகள் முளைத்து புதர் போல் காட்சியளிக்கிறது. இதனால், அங்கு பூச்சிகள் மற்றும் விஷ ஜந்துக்கள் இருக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே, இதை பள்ளி நிர்வாகமோ அல்லது பேரூராட்சி நிர்வாகமோ கவனித்து உடனடியாக அகற்றம் செய்ய வேண்டும்.
-- கார்த்தி, கிணத்துக்கடவு.
செயல்படாத சிக்னல்
பொள்ளாச்சி --- கோவை ரோட்டில், தாமரைக்குளம் அருகே 'யூ டேர்ன்' பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிக்னல் செயல்படாததால், இரவு நேரத்தில் வாகன ஓட்டுநர்கள் விபத்துக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. இப்பகுதியில் அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன் சிக்னலை சரி செய்ய வேண்டும்.
-- கவியரசு, கோவில்பாளையம்.
செடிகளை 'ட்ரிம்' செய்யணும்!
கிணத்துக்கடவு அருகே, முள்ளுப்பாடி மேம்பாலத்தில் சென்டர் மீடியன் பகுதியில் பூச்செடிகள், அலங்கார செடிகள் வளர்க்கப்படுகிறது. மழைக்கு செழிப்பாக வளர்ந்த செடிகள், ரோட்டில் நீட்டியபடி உள்ளது. இதனால் வாகன ஓட்டுனர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், செடியின் கிளைகளை 'ட்ரிம்' செய்ய வேண்டும்.
- ரஞ்சித், கிணத்துக்கடவு.
சேதமடைந்த ரோடு
பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியில் இருந்து கருப்பராய சுவாமி கோவில் செல்லும் ரோட்டின் வளைவு பகுதியில், குவி கண்ணாடி பொருத்தப்பட்டு இருந்தது. தற்போது, கண்ணாடி இல்லாமல் இருப்பதால், வளைவுப் பகுதியில் திரும்பும் வாகனங்கள் எதிரே வாகனம் வருவது தெரியாமல் விபத்து ஏற்படுகிறது. எனவே இங்கு குவிகண்ணாடி அமைக்க வேண்டும்.
- ஆனந்த், மாக்கினாம்பட்டி.