/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அறிவாலயத்தில் முன்னோட்டம் பார்த்த இன்பநிதி!
/
அறிவாலயத்தில் முன்னோட்டம் பார்த்த இன்பநிதி!
PUBLISHED ON : ஆக 22, 2024 12:00 AM

அறிவாலயத்தில் முன்னோட்டம் பார்த்த இன்பநிதி!
''பாலியல் தொல்லை தர்றாருங்க...'' என்ற பரபரப்பான தகவலுடன் பெஞ்சில் அமர்ந்தார், அந்தோணிசாமி.
''யார் ஓய் அது...'' என கேட்டார், குப்பண்ணா.
''பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை யூனியன் ஆபீஸ்ல, ஒரு அதிகாரி இருக்காரு... அடுத்த வருஷ மத்தியில,
'ரிட்டயர்' ஆக போறாருங்க...
''ஊழியர்களுக்கு ஊதிய சான்றிதழ், சத்துணவுக்கு காய்கறி செலவு, பயணப்படி மற்றும் ஓய்வு பெறும் அலுவலர்களுக்கு
ஜி.பி.எப்., வழங்கன்னு,எல்லாத்துக்கும் லஞ்சம் வாங்குறாருங்க...
''அதேபோல, 15வது நிதிக்குழு மானியம், அண்ணா கிராம ஊராட்சி மறுமலர்ச்சி திட்டம், மாவட்ட ஊராட்சி
மற்றும் ஒன்றிய திட்ட பணிகளுக்கு 2 சதவீதம் கமிஷன் வாங்குறாரு... லஞ்ச பணத்தை தன் மனைவி அல்லது மகனின், 'ஜி பே'க்கு அனுப்ப சொல்றாருங்க...
''சத்துணவு பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லையும் தர்றாருங்க... இது சம்பந்தமா, சத்துணவு பணியாளர்கள் சங்கம் சார்புல, கலெக்டரின், 'வாட்ஸாப்'புக்கு
புகார் அனுப்பியிருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''கவுன்சிலர்கள் நெருக்கடியால, ஒரு மாசம் லீவுல போயிட்டாரு வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில், அமானி கொண்டலாம்பட்டி ஊராட்சி இருக்கு... வருஷத்துக்கு 2 கோடி ரூபாய்க்கு மேல வரி வசூலாகும் பெரிய ஊராட்சியான இங்க, 15 கவுன்சிலர்கள்
இருக்காவ வே...
''இவங்க, தங்களது வார்டுகள்ல, 'சாக்கடை அடைப்பை எடுத்தோம், பொக்லைன் இயந்திரம் பயன்படுத்தி குப்பையை
அள்ளினோம்'னு வெவ்வேறு பெயர்கள்ல பில் குடுத்து, ஊராட்சியில பணம் வாங்கியிருக்காவ... இதை தணிக்கை செய்த அதிகாரிகள், இதுல நிறைய குளறுபடிகள் இருக்கிறதால, 'பணத்தை திருப்பி
கட்டுங்க'ன்னு சொல்லிட்டாவ வே...
''கொஞ்ச நாளா அடங்கியிருந்த கவுன்சிலர்கள், மறுபடியும் பொக்லைன் இயந்திர பில்களை குடுத்து பணம் கேட்குறாங்க... இவங்க தொல்லையால நொந்து போன ஊராட்சி செயலர், ஒரு மாசம் லீவு போட்டுட்டு போயிட்டாரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''கட்சி ஆபீஸ்ல முன்னோட்டம் பார்த்துட்டு போயிருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''அமைச்சர் உதயநிதியின் மகன் இன்பநிதி, சமீபத்துல திடீர்னுஅறிவாலயத்துக்கு வந்திருக்காரு... முதல்ல, அவரை யாருக்கும் அடையாளம்
தெரியல... அப்பறமா விழுந்தடிச்சுண்டு வரவேற்றிருக்கா ஓய்...
''அறிவாலயத்துலஇருக்கற எல்லா அறைக்கும் போய், யார் யார் இருக்கா... அங்க என்னென்ன பணிகள் நடக்கறதுன்னு பார்த்திருக்காரு... அப்படியே மாடியில இருந்த
கலைஞர், 'டிவி' ஆபீசுக்கும் போய் சுத்தி பார்த்திருக்கார் ஓய்...
''அங்க இருந்த ஊழியர்களிடம்,'சம்பளம் எவ்வளவு வாங்கறேள்'னு அக்கறையோட கேட்டிருக்கார்... அதோட, 'தொழில்நுட்ப அறைகளை
இன்னும் நவீனப்படுத்தணும்... ஸ்டூடியோ ரொம்ப ஓல்டா இருக்கு... எல்லாத்தையும் ஹாலிவுட் ரேஞ்சுக்கு மாத்தணும்'னு சொல்லியிருக்கார் ஓய்...
''இதை பார்த்துட்டு, 'உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி குடுத்ததும், கலைஞர் 'டிவி' நிர்வாகத்தை இன்பநிதி தான் கவனிப்பார் போல தெரியறது... இளைஞர் அணியில, 'போஸ்டிங்' போட்டாலும் ஆச்சரியம் இல்ல'ன்னு அறிவாலய ஊழியர்கள் பேசிக்கறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பேச்சு முடிவுக்கு வர, பெரியவர்கள் கிளம்பினர்.