கட்சி பணிகளில் ஒதுங்கிய தி.மு.க., 'மாஜி' அமைச்சர்!
கட்சி பணிகளில் ஒதுங்கிய தி.மு.க., 'மாஜி' அமைச்சர்!
PUBLISHED ON : அக் 07, 2026 12:00 AM

“எ ங்க தலையை உருட்டுறதான்னு புலம்புதாவ வே...” என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
“யாருப்பா அது...” என கேட்டார் அன்வர்பாய்.
“எந்த போராட்டங்கள்லயும் கலந்துக்காம மாணவர்களை தடுக்கணும்னு, உயர் கல்வித்துறை சார்பில் கல்லுாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்புனாங்கல்லா... இதுக்கு, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவிக்கவே, சுற்றறிக்கையை வாபஸ் வாங்கிட்டாவ வே...
“இது சம்பந்தமா, கல்லுாரி கல்வி இணை இயக்குநரிடம் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பியதும் சர்ச்சையை ஏற்படுத்துச்சு... இந்த சூழல்ல, கல்லுாரி முதல்வர்கள் நியமனங்கள் பாரபட்சமா நடந்திருக்கிறதா கல்லுாரி கல்வி கமிஷனர் மீது, உயர் கல்வித்துறை செயலருக்கு சில பேராசிரியர்கள் புகார்கள் அனுப்பியிருந்தாவ வே.. .
“இந்த விவகாரத்திலும் கமிஷனரை விட்டுட்டு, இணை இயக்குநரை கூப்பிட்டு உயர் கல்வித்துறை செயலர் கண்டிச்சிருக்காரு... 'உயர் அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு எங்களை பலிகடா ஆக்குறதா'ன்னு, இணை இயக்குநர் வட்டாரங்கள் புலம்புது வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி.
“தீரஜ்குமார், பொன்னையா உட்கார இடம் குடுங்க...” என்ற அந்தோணிசாமியே, “வசூல் மன்னன் கதை யை கேளுங்க...” என்றபடியே தொடர்ந்தார்...
“திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில ஒரு போலீஸ் அதிகாரி இருக்கார்... இவர் ஏற்கனவே வேலை பார்த்தமண்ணச்சநல்லுார், மணப்பாறை, சமயபுரத்துல எல்லாம் தீவிர வசூல் வேட்டை நடத்தினாருங்க...
“மணப்பாறையில் இவர் வேலை பார்த்தப்ப, பஸ்கள்ல, திருவிழா நெரிசல்ல தங்கச்செயின் பறிக்கும் பெண்களை கைது பண்ணி, அவங்களிடம் 5 லட்சம் ரூபாயை பறிமுதல் செஞ்சு, கணக்குல காட்டாத புகார்ல சிக்கினாருங்க...
“இங்கயும் அவரது வசூல் வேகம் குறையல... தெத்துார் பகுதியில் மண் கடத்தலுக்கு அனுமதி, திருட்டு லாட்டரி விற்பனைக்கு அனுமதி குடுத்து மாமூல் மழையில குளிக்கிறாரு... சக போலீசாரிடமும் அடாவடியா நடந்துக்கிடுறதால, அவ ங்க எல்லாம் வேற ஊருக்கு இடமாறுதல் கேட்டுட்டு இருக்காங்க...” என்றார் அந்தோணிசாமி.
“ரகுராமன், இரும் சேர்ந்து போலாம்...” என்ற குப்பண்ணாவே, “சத்தமே காட்டாம அமைதியாகிட்டார் ஓய்...” என்றார்.
“யாரை சொல்றீங்க பா...” என கேட்டார் அன்வர்பாய்.
“அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., சார்பில், திருச்செந்துார் சட்டசபை தொகுதியில் தொடர்ந்து ஏழு முறை ஜெயிச்சவர், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்... துாத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க., செயலராகவும் இருக்கார் ஓய்...
“இப்ப, '70 வயசுக்கு மேற்பட்டவாளுக்கு மாவட்டச் செயலர் பதவி கிடையாது'ன்னு தலைமை முடிவு எடுத்திருக்கோல்லியா... இதுல, 74 வயசாகும் அனிதாவின் பதவியும் காலியாகப் போறது ஓய்...
“இந்த மாதிரி பல, 'மாஜி'க்கள் இருந்தாலும், அவா எல்லாம் தங்களது வாரிசுகளை மாவட்டச் செயலராக்க தயாராகிட்டா... ஆனா, அனிதாவின் மகன்கள் யாருக்கும் அரசியலுக்கு வர விருப்பம் இல்ல ஓய்...
“இதனால அனிதா, கட்சி பணிகள்ல ஆர்வம் காட்டாம இருக்கறதா தி.மு.க.,வினர் புலம்பறா... த.வெ.க., ஆட்சியை கடுமையா விமர்சனம் பண்ணிண்டு இருந்தவர், தலைமை முடிவால வெறுத்து போயிட்டாராம்... கட்சியின் தலைமை அலுவலக நிர்வாகிகள் போன் போட்டாலும், 'அண்ணாச்சி உடம்பு சரியில்லாம ஓய்வுல இருக்கார்'னு, அவரது உதவியாளர்கள் சொல்லிடறா ஓய்...” என முடித்தார் குப்பண்ணா.
பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.
