PUBLISHED ON : அக் 08, 2026 12:00 AM

இ ஞ்சி டீயை உறிஞ்சிய படியே, “தினமும் 10 ஆயிரம் ரூபாய் சம்பாதிச்சிடுறாருங்க...” என, விவாதத்தை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
“யாருவே அந்த கடின உழைப்பாளி...” என கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.
“அவசரப்படாதீங்க... முழுசா கேட்டுட்டு பாராட்டுங்க அண்ணாச்சி...” என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
“கோவை மாவட்டத் துல இருந்து, கேரளா வுக்கு ரேஷன் அரிசியை அதிகமா கடத்துறாங்க... இதுக்கு சில போலீசாரே உடந்தையா இருக்காங்க...
“அதுலயும், க.க.சாவடி போலீஸ் அதிகாரியின் டிரைவரா இருக்கிறவர், தீவிர வசூல் மன்னனா இருக்காரு... இவருக்கு தினசரி, 5 ஆயிரத்துல இருந்து 10 ஆயிரம் ரூபாய் வரைக்கும் மாமூல் வருதுங்க...
“இது போக ரேஷன் அரிசி கடத்தும் கும்பலிடம் வாரம், ரெண்டு வாரம் மற்றும் மாதாந்திர மாமூலும் வசூலிக்கிறாரு... இவரை பத்தி எஸ்.பி., வரைக்கும் புகார்கள் போயும், எந்த நடவடிக்கையும் இல்லைங்க...” என்றார் அந்தோணிசாமி.
“மெர்க்குரி, தள்ளி உட்காருங்க...” என்ற அன்வர்பாயே, “குளக்கரையை ஆக்கிரமிச்சிருக்காரு பா...” என்றார் அன்வர்பாய்.
“யார் ஓய் அது...” என கேட்டார் குப்பண்ணா.
“காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் சட்டசபை தொகுதியில வர்ற குன்றத்துார் 11வது வார்டுல, வாணியன் குளம் இருக்கு... அந்த பகுதி மக்களுக்கு இதுதான் நிலத்தடி நீராதாரமா இருக்குது பா...
“குளத்தின் மேற்கு கரையில இருந்த 50 சென்ட் இடத்துல, 20 சென்ட் நிலத்தை த.வெ.க., பிரமுகர் ஒருத்தர் ஆக்கிரமிச்சிருக்காரு... இதுல, கட்டுமான பணிகளை செய்ய தொகுதியின் ஆளுங்கட்சி முக்கிய புள்ளி பச்சை கொடி காட்டியிருக்காரு பா...
“அங்க நடக்கிற கட்டுமான பணிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாதுன்னு, குன்றத்துார் தாசில்தாருக்கும் வாய்மொழி உத்தரவு போட்டிருக்காரு... இப்ப, குளக்கரையை ஆக்கிரமிச்ச இடத்துல கட்டுமான பணிகள் விறுவிறுப்பா நடந்துட்டு இருக்குது பா...” என்றார் அன்வர்பாய்.
“வாங்க அஜ்மீர்... தென்னரசு ஒத்தாசையா இருக்காரோல்லியோ...” என்ற குப்பண்ணாவே, “சிபாரிசுகள் குவியறதால நொந்து போயிருக்கா ஓய்...” என்றபடியே தொடர்ந்தார்...
“திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமா, 500 பேர் உட்காரக்கூடிய திருமண மண்டபம் இருக்கு... திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு மட்டும், இதை வாடகைக்கு தருவா ஓய்...
“அதேநேரம், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணியர்னு யாரும் தங்கறதுக்கு தர மாட்டா... ஒரு மாசத்துக்கு முன்னாடி, கீழச்செவல்பட்டியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவா கோவிலுக்கு வந்திருந்தா ஓய்...
“அப்ப, விதிகளை மீறி அவாளுக்கு திருமண மண்டபத்தை வாடகைக்கு விட்டிருக்கா... இதுக்கு, துறையின் மேலிட புள்ளி உட்பட மூணு முக்கிய புள்ளிகள் சிபாரிசு பண்ணியிருக்கா ஓய்...
“இதேபோல, மண்டபத்தை தனி நபர்களுக்கு வாடகைக்கு தரும்படி, ஆளுங்கட்சி அமைச்சர்கள் தரப்புல இருந்து அதிகாரிகளுக்கு அடிக்கடி அழுத்தம் வர்றது... ‘பொதுவெளியில நியாயமா பேசறவா இப்படி நடந்துக்கலாமா’ன்னு, அதிகாரிகள் புலம்பறா ஓய்...” என முடித்தார் குப்பண்ணா.
பெஞ்சில் புதியவர்கள் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.
