/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
'பூ, புஷ்பம்' கணக்காக வேட்பாளரிடம் கறந்த நிர்வாகிகள்!
/
'பூ, புஷ்பம்' கணக்காக வேட்பாளரிடம் கறந்த நிர்வாகிகள்!
'பூ, புஷ்பம்' கணக்காக வேட்பாளரிடம் கறந்த நிர்வாகிகள்!
'பூ, புஷ்பம்' கணக்காக வேட்பாளரிடம் கறந்த நிர்வாகிகள்!
PUBLISHED ON : ஏப் 23, 2024 12:00 AM

''தேர்தல் அதிகாரிகள் அலட்சியத்தால, போலீசார் பாடு திண்டாட்டமா போயிடுத்து ஓய்...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், குப்பண்ணா.
''விளக்கமா சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''ஈரோடு மாவட்டம், கோபி சட்டசபை தொகுதியில், தேர்தல் பணிகள் சரியான ஒருங்கிணைப்பு இல்லாம நடந்துது... பாதுகாப்பு போலீசார் வந்து காத்திருந்தும், மண்டல தேர்தல் அதிகாரிகள் வர லேட்டானதால, ஓட்டுச்சாவடிக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எடுத்துண்டு போறதும் லேட்டானது ஓய்...
''அதே மாதிரி, ஓட்டுச்சாவடியில் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், பணி நியமன ஆணை பெற லேட்டா வந்ததாலும், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் லேட்டா தான் போனது...
''அலுவலர்களை விரட்டி வேலை வாங்க வேண்டிய, உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான ஆர்.டி.ஓ., கண்ணப்பன் மற்றும் கூடுதல் அலுவலரான தாசில்தார் கார்த்திக், தேர்தல் பணிகள்ல பெருசா ஆர்வம் காட்டல... 'அவாளது அலட்சியத்தால, நாங்க தான் திண்டாடி போயிட்டோம்'னு போலீசார் புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''கடைசி வரைக்கும் காத்திருந்து ஏமாந்துட்டாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.
''யாருவே அது...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''லோக்சபா தேர்தல்ல, அ.தி.மு.க., சார்புல கோடீஸ்வர வேட்பாளர்கள் தான் நிறுத்தப்பட்டாங்க... அவங்க தாராளமா செலவு செய்வாங்கன்னு கட்சியினர் எதிர்பார்த்தாங்க பா...
''ஆனா, ஆரம்பத்துல வேகம் காட்டியவங்க, கடைசி நேரத்துல கையை சுருக்கிட்டாங்களாம்... அதுலயும், கடைசி கட்டமா வாக்காளர்களுக்கு வழங்க, பெரும் தொகை வரும்னு நிர்வாகிகள் எதிர்பார்த்தாங்க பா...
''ஆனா, தலைமையில இருந்து பணம் வராத சூழல்ல, ஒரு சில வேட்பாளர்கள் மட்டும் கைக்காசை செலவு செஞ்சிருக்காங்க... மத்தவங்க கையை விரிச்சுட்டாங்க பா...
''பிரசாரம் ஓய்ந்ததும், கட்சி நிர்வாகிகள் பலரும் பணத்தை எதிர்பார்த்து ராவெல்லாம் துாங்காம இருந்து ஏமாந்து போயிட்டாங்க... அதே நேரம், பணத்தை பிரிச்சு குடுக்கிற தலைவலி இல்லன்னு மாவட்ட செயலர்களும் நிம்மதியாகிட்டாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''என்கிட்டயும் ஒரு பட்டுவாடா மேட்டர் இருக்குல்லா...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''பெரம்பலுார் லோக்சபா தொகுதியில, பா.ஜ., கூட்டணி சார்பில், ஐ.ஜே.கே., நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிட்டாருல்லா... எப்படியும் ஜெயிக்கணும்னு, பணத்தை தண்ணியா செலவழிச்சாரு வே...
''அவரது கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய செயலர்கள் பலரும் செயல்வீரர்கள் கூட்டம், பிரசாரம், கூட்டம் சேர்ப்பது, ஓட்டு சேகரிப்பு, பூத் கமிட்டி செலவுன்னு பல வழிகள்லயும் அவரிடம் பணத்தை கறந்துட்டாவ வே...
''பூ வாங்கியது, புஷ்பம் வாங்கியதுங்கிற மாதிரி, ஒரே வேலைக்கு வேற வேற பெயர்ல கணக்கு காட்டி, காசை சுருட்டியிருக்காவ... கடைசியா வாக்காளர்களுக்கு பட்டுவாடா பண்றதுலயும், 'கை' வச்சுட்டாவ வே...
''அதாவது, பாரிவேந்தருக்கு உறுதியா ஓட்டு போடுறவங்களுக்கு 1,000 ரூபாயும், இருமனசா இருக்கிறவங்களுக்கு 500 ரூபாயும் நிர்ணயம் பண்ணியிருக்காவ... இதுல, 60 சதவீத வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துட்டதா பாரிவேந்தர்ட்ட சொல்லிட்டு, 35 சதவீதம் பேருக்கு மட்டும்தான் பட்டுவாடா செஞ்சிருக்காவ... மீத பணத்தை நிர்வாகிகள் சுருட்டிட்டாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

