/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஏரி மண்ணை விற்று கொள்ளை அடிக்கும் கூட்டணி!
/
ஏரி மண்ணை விற்று கொள்ளை அடிக்கும் கூட்டணி!
PUBLISHED ON : ஜூன் 10, 2024 12:00 AM

''கொலை மிரட்டல் விடுத்தவரை கைது செய்ய வலியுறுத்தி, போராட்டம் நடத்த திட்ட மிட்டிருக்காவ வே...'' என்றபடியே வந்தார், பெரியசாமி அண்ணாச்சி.
''விளக்கமா சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''தேர்தல் முடிவு வெளியானதும், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை படத்தை ஆடு கழுத்துல மாட்டி, அதை அரிவாளால வெட்டிய வீடியோவை, கிருஷ்ணகிரி மாவட்ட தி.மு.க.,வினர் வெளியிட்டாங்கல்லா...
''இதை கண்டிச்சு, தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம், 'தி.மு.க.,வின் அராஜக அருவருப்பு அரசியலை மக்கள் பார்த்துட்டு தான் இருக்காங்க... தமிழகத்தில் போலீஸ் துறை இருக்கிறதா'ன்னு சமூக வலைதளத்துல பதிவிட்டாரு வே...
''இதைப் பார்த்து டென்ஷனான தி.மு.க., தொண்டர் ஒருவர், 'முருகானந்தத்தின் தலையை துண்டா வெட்டணும்னு நினைக்கிறேன்'னு சொல்லி, அவரை தகாத வார்த்தையில கடுமையா திட்டி மிரட்டியிருக்காரு... அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆளுங்கட்சி தொண்டரை போலீசார் கைது செய்யாட்டி, பெரிய அளவுல போராட்டம் நடத்த கொங்கு மண்டல பா.ஜ., நிர்வாகிகள் திட்டமிட்டிருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''தங்களுக்கு தோதான அதிகாரி வேணும்னு காய் நகர்த்தறா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''கோவையில், பெரிய கட்டடங்களுக்கு அனுமதி வழங்கக்கூடிய நகர ஊரமைப்பு அலுவலகத்தில், முக்கிய மான இளம் அதிகாரி நேர்மையா இருக்கார்... ஆனாலும், இவருக்கு கீழ இருக்கற மூவர் அணி, புரமோட்டர்கள், ரியல் எஸ்டேட் உரிமை யாளர்கள் மற்றும் தனிப்பட்ட விண்ணப்ப தாரர்களிடம் பெரும் தொகையை கறந்துடறது ஓய்...
''இதுல ரெண்டு பேர், சம்பாதிக்கற பணத்தை, புரமோட்டர்கள் சிலருடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில்ல முதலீடு பண்ணியிருக்கா... இருந்தாலும், விதிகளை மீறி சில விஷயங்களை செய்ய முடியாம தவிக்கறா ஓய்...
''இதனால, தங்களது வசூலுக்கு உடந்தையா இருந்து, பங்கு வாங்கிக்கற ஒரு அதிகாரியை நியமிக்க காய் நகர்த்திண்டு இருக்கா... அதுக்கு ஏற்ற மாதிரி, ஏற்கனவே இங்க இருந்து நன்னா சம்பாதிச்ச, தமிழ்க் கடவுள் பெயர் கொண்ட ஒரு அதிகாரி, மறுபடியும் கோவைக்கு வர பெரிய தொகையுடன் கோட்டை வட்டாரத்துல வலம் வந்துண்டு இருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''ஏரி மண்ணை கொள்ளை அடிக்கிறாங்க பா...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.
''எந்த ஊர்ல ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''நீர்வள ஆதாரத் துறை சார்புல, சென்னை மாதவரம் ரெட்டேரியை துார்வாரி மேம்படுத்தும் பணி, 43 கோடி ரூபாய்ல கடந்த பிப்ரவரி மாசத்துல இருந்து நடக்குது... ஏரியில், 5 முதல், 7 அடி ஆழம் வரை துார் வாரிட்டு இருக்காங்க பா...
''இதுல, தரமான மணலும், நிறைய சவுடு மண்ணும் கிடைக்குது... இதை, அஞ்சாறு யூனிட் கொள்ளளவு கொண்ட டாரஸ் லாரிகள்ல தினமும் 80 முதல் 100 லோடு வரை அள்ளுறாங்க பா...
''இந்த மண்ணை, சோழவரம் ஏரிக்கரை பலப்படுத்தும் பணிக்காக, அரசு கிடங்கில் இருப்பு வைக்கிறதா சொல்றாங்க... ஆனா, தனியார் அடுக்குமாடி கட்டுமான பணிக்காக ஒரு லாரி மணல், 25,000, சவுடு மண், 18,000 ரூபாய்னு திருட்டுத்தனமா விற்பனை பண்ணிடுறாங்க...
''இதுக்கு, துறை அதிகாரிகள் மற்றும் அந்த ஏரியா ஆளுங்கட்சி புள்ளியின் முழு ஆதரவும் இருக்கிறதா, உள்ளூர் தி.மு.க.,வினரே சொல்றாங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
பேச்சு முடிய, பெரியவர்கள் கலைந்தனர்.