/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கொடுத்ததை எடுக்க முடியாமல் குமுறும் அதிகாரி!
/
கொடுத்ததை எடுக்க முடியாமல் குமுறும் அதிகாரி!
PUBLISHED ON : மார் 06, 2025 12:00 AM

“தொழிலதிபர் பேச்சைக் கேட்டு, அதிர்ச்சி ஆகிட்டாரு பா...” என்றபடியே, ஏலக்காய் டீயை உறிஞ்சினார் அன்வர்பாய்.
“யாருவே அது...” எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
“மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சமீபத்துல கோவைக்கு வந்தாரே... அவரை, தமிழகத்தின் பெரிய தொழிலதிபர் ஒருத்தர் பார்த்து பேசியிருக்காரு பா...
“அப்ப, '9,500 கோடி ரூபாய் முதலீட்டுல, உங்க குஜராத் மாநிலத்துல தொழில் துவங்க விரும்புறேன்... விரிவான திட்ட அறிக்கையுடன் உங்களை சீக்கிரமே வந்து பார்க்கிறேன்'னு சொல்லியிருக்காரு பா...
“அமித் ஷா,'தமிழகத்துல தொழில் துவங்காம ஏன் குஜராத் வர்றீங்க'ன்னு கேட்டிருக்காரு... அதுக்கு, 'குஜராத், மஹாராஷ்டிரா மாநிலங்கள்ல புதுசா தொழில் துவங்கவும், எல்லா பர்மிஷனும் வாங்கவும், 35 கோடி ரூபாய் போதும்... ஆனா,இங்க நிலம் கையகப்படுத்துறது உட்பட எல்லாத்துக்கும் சேர்த்து, 350 கோடி ரூபாய் மொய் வைக்கணும்... அதான், குஜராத்துக்கு வர்றேன்'னு சொன்னதை கேட்டு, 'தமிழகத்துல அவ்வளவு கரப்ஷன் இருக்கா'ன்னு அமித் ஷா அதிர்ச்சி ஆகிட்டாரு பா...” என்றார், அன்வர்பாய்.
“மேயர் நாற்காலியை ஆக்கிரமிச்சுடுறாருங்க...” என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
“சென்னை மேயர் பிரியா பங்கேற்கிற அரசு விழாக்கள் மற்றும் மாநகராட்சி நிகழ்ச்சிகள்ல ஆளுங்கட்சி எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களும் கலந்துக்கிறாங்க... இதுல ஒரு எம்.பி., மேயருக்கு போட்டிருக்கிற சீட்ல போய் பந்தாவா உட்காந்துடுறாருங்க...
“சில அதிகாரிகள், எம்.பி.,யிடம் பவ்யமா, 'சார் இது மேயருக்கான சீட்'னு சொன்னாலும், 'அதனால என்ன... என் பக்கத்துலயே அவங்களுக்கும் சீட் போடுங்க... அவங்களும் வி.ஐ.பி., தானே'ன்னு கிண்டலா சொல்றாருங்க... எல்லா நிகழ்ச்சிகள்லயும் எம்.பி., இப்படி பண்றதால, அதிகாரிகள் பாடு திண்டாட்டமா போயிடுதுங்க...” என்றார், அந்தோணிசாமி.
“குடுத்ததை எடுக்க முடியல ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
“தமிழக நீர்வளத் துறையில் அமைச்சர், செயலருக்கு அடுத்து முக்கியமான பதவி ஒண்ணு இருக்கு... அதிகாரிகள் புரமோஷன், டிரான்ஸ்பர், முக்கிய திட்டங்களை சீக்கிரமா முடிக்க நடவடிக்கை எடுக்கற பதவிங்கறதால, 'வரும்படி' கொட்டும் ஓய்...
“ஈரோட்டில் இருந்த ஒரு அதிகாரி, துறை முக்கிய புள்ளியின் உதவியாளருக்கு பெரிய தொகையை குடுத்து, இந்த பதவிக்கு வந்தார்... ஆனா, அவர் பார்க்க வேண்டிய புரமோஷன், டிரான்ஸ்பர் உள்ளிட்ட பணிகளை வேற ஒரு அதிகாரியிடம் துறையின் முக்கிய புள்ளி ஒப்படைச்சுட்டார் ஓய்...
“ஏன்னா, அந்த அதிகாரி முக்கிய புள்ளியின் சமுதாயம்... அதுவும் இல்லாம, அமலாக்க துறை சோதனையில் சிக்கி நிறைய பணத்தையும், நகைகளையும் இழந்துட்டாராம் ஓய்...
“அதை எல்லாம் ஈடு பண்ணிக்கட்டும்னு முக்கிய பொறுப்புகளை அவரிடம் குடுத்திருக்கார்... அவரும் வர்ற 31ம் தேதி, 'ரிட்டயர்' ஆக போறதால, வசூலை வாரி குவிச்சுண்டு இருக்கார் ஓய்...
“இதனால, பெரும் தொகை குடுத்து, இந்த பதவிக்கு வந்த ஈரோடு அதிகாரி, போட்ட பணத்தை எப்படி எடுக்கறதுன்னு தவியா தவிச்சுண்டு இருக்கார்... 31ம் தேதிக்கு பிறகாவது, தன் கைக்கு பொறுப்புகள் வருமான்னு காத்துண்டு இருக்கார் ஓய்...” என முடித்தார், குப்பண்ணா.
அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.