/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஆளுங்கட்சி கவுன்சிலர்களுக்கு அந்தமானில் 'கவனிப்பு!'
/
ஆளுங்கட்சி கவுன்சிலர்களுக்கு அந்தமானில் 'கவனிப்பு!'
ஆளுங்கட்சி கவுன்சிலர்களுக்கு அந்தமானில் 'கவனிப்பு!'
ஆளுங்கட்சி கவுன்சிலர்களுக்கு அந்தமானில் 'கவனிப்பு!'
PUBLISHED ON : ஆக 01, 2024 12:00 AM

''வக்கீல்களை ஆபீஸ் தேடி போய் அடிச்சிருக்காவ வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''மத்திய அரசின் அமலாக்க துறை வக்கீலிடம் ஜூனியரா பணிபுரியும் ரெண்டு வக்கீல்கள், சமீபத்துல பெசன்ட் நகர் பீச் ரோட்டுல கார்ல போயிருக்காவ... அப்ப, அடையாறு பகுதி ஆளுங்கட்சி கவுன்சிலரின் வாரிசும், தென்சென்னை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரின் வாரிசும், அவங்க ஆட்களும் கூட்டமா நடந்து போயிருக்காவ...
''அதுல ஒருத்தர் தடுமாறி, வக்கீல் கார்ல விழ பார்த்திருக்கார்... கார்ல இருந்த வக்கீல்கள், 'பார்த்து நடங்க தம்பி'ன்னு சொல்ல, ரெண்டு தரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஆயிருக்கு வே...
''அப்ப, வக்கீல்களின் கார் நம்பரை குறிச்சுக்கிட்ட ஆளுங்கட்சியினர், போக்குவரத்து போலீசார் உதவியுடன் வக்கீல்கள் அட்ரசை கண்டுபிடிச்சிட்டாவ... அவங்க ஆபீசுக்கே 20 பேர் வரை போய், ரெண்டு வக்கீல்களையும் வாயில ரத்தம் வர்ற வரைக்கும் அடிச்சு, துவைச்சுட்டாவ வே...
''வக்கீல்கள், திருவான்மியூர் போலீஸ்ல புகார் குடுத்ததுல, எப்.ஐ.ஆர்., போட்டிருக்காவ... ஆனாலும், வாரிசுகள் மேல நடவடிக்கை எடுக்க, தென் சென்னை மாவட்ட முக்கிய புள்ளி தடையா இருக்காரு... இதனால, வக்கீல்கள் தரப்பு, தங்களுக்கு நீதி கேட்டு சட்ட போராட்டம் நடத்த முடிவு பண்ணியிருக்கு வே...'' என்றார், அண்ணாச்சி.
''வீதியில் இறங்கி போராடியும், பலன் இல்ல பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் நகராட்சியில், நகர்மன்ற தலைவர் வார்டில் இ.பி., சாலை இருக்கு... இந்த சாலை, 10 வருஷமாவே போக்குவரத்துக்கு லாயக்கில்லாம தான் இருக்குது பா...
''பல முறை புகார் குடுத்தும், அதிகாரிகள் கண்டுக்கல... திருநின்றவூரை பெயரளவுக்கு மட்டும் நகராட்சியா தரம் உயர்த்தியிருக்காங்க... மற்றபடி, நிர்வாகம் செய்ய தேவையான அதிகாரிகளை இன்னிக்கு வரை நியமிக்கல பா...
''திருத்தணி நகராட்சிக்கு பொறுப்பு கமிஷனரா இருக்கிறவரையே, இந்த ஊருக்கும் கூடுதல் பொறுப்பா நியமிச்சிருக்காங்க... இதனால, எந்த ஒரு பிரச்னையும் இங்க தீரவே மாட்டேங்குது பா...'' என்றார், அன்வர்பாய்.
''கவுன்சிலர்களை அந்தமான் தீவுக்கு அழைச்சுண்டு போயிருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''எந்த ஊருல பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''சென்னைக்கு பக்கத்துல திருமழிசை பேரூராட்சி இருக்கோல்லியோ... இங்க தான், அரசு சார்புல துணைக்கோள் நகரம் அமைக்க பிளான் பண்ணிண்டு இருக்கா ஓய்...
''இதன் தலைவரா இருந்தவர், சமீபத்துல விபத்துல இறந்து போயிட்டார்... துணை தலைவர் பொறுப்புல தான் பேரூராட்சி நிர்வாகம் நடக்கறது ஓய்...
''வர்ற 6ம் தேதி தலைவர் பதவிக்கு தேர்தல் நடக்க போறது... பொறுப்பு, நிரந்தர தலைவராக காய் நகர்த்திண்டு இருக்கார்... அதுக்கு கவுன்சிலர்கள் கடாட்சம் வேணுமோன்னோ...
''இதனால, தன் ஆதரவு கவுன்சிலர்களை அந்தமான் தீவுக்கு டூர் கூட்டிண்டு போய், அட்டகாசமா கவனிச்சிருக்கார்... கூடவே, நகர ஆளுங்கட்சி புள்ளியும் போயிட்டு வந்திருக்கார் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''மகாதேவன், முனுசாமி வர்றாங்க... பிளாக் காபி குடும் நாயரே...'' என்றபடியே அந்தோணிசாமி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.