/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
19,000 வீடுகள் கட்டுவது கேள்விக்குறி; மத்திய அரசு நிதி தராததால் பாதிப்பு
/
19,000 வீடுகள் கட்டுவது கேள்விக்குறி; மத்திய அரசு நிதி தராததால் பாதிப்பு
19,000 வீடுகள் கட்டுவது கேள்விக்குறி; மத்திய அரசு நிதி தராததால் பாதிப்பு
19,000 வீடுகள் கட்டுவது கேள்விக்குறி; மத்திய அரசு நிதி தராததால் பாதிப்பு
PUBLISHED ON : மார் 10, 2025 12:00 AM
சென்னை: 'பிரதமரின் வீட்டு வசதி திட்ட நிதி ஒதுக்கீட்டில், 847 கோடி ரூபாய் நிலுவை தொகை வராததால், தமிழகத்தில், 19,000 வீடுகள் கட்டும் பணி கேள்விக்குறியாகி உள்ளது.
நாடு முழுதும், அனைத்து தரப்பு மக்களுக்கும் சொந்த வீடு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், 2015ல் மத்திய அரசு, பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்துக்கு அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
நகரங்களில் ஆட்சேபகரமான இடங்களில் வசிப்போருக்கு, மானிய விலையில் சொந்த வீடு வழங்குவது; நிலம் வைத்துள்ள ஏழைகள் வீடு கட்ட மானியம் வழங்குவது; வங்கிக்கடன் வாயிலாக வீடு வாங்குவோருக்கு வட்டியில் மானியம் வழங்குவது என, மூன்று பிரிவாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நாடு முழுதும் ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களுக்கு, 2 லட்சம் கோடி ரூபாயை விடுவிக்க, மத்திய அரசு சம்மதித்தது.
அதில், தற்போது வரை, 1.68 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே விடுவிக்கப்பட்ட நிலையில், 32,000 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது.
இந்த பின்னணியில், 2025 - 26ம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டில், 19,794 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது, முந்தைய நிதி ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதை விட, 34 சதவீதம் குறைவு. இதனால், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில், நிலுவை பணிகளுக்கு நிதி கிடைப்பது கேள்விக்குறியாகி உள்ளது.
இதுகுறித்து, தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில், பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில், 6.80 லட்சம் வீடுகள் அடங்கிய 5,282 திட்டங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
அதில், 6.61 லட்சம் வீடுகளுக்கான பணிகள் துவக்கப்பட்டதில், 5.98 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.
இதற்கான மதிப்பீட்டில், மத்திய அரசு, 11,185 கோடி ரூபாய் வழங்க சம்மதித்தது. அதில், 10,338 கோடி ரூபாய் மட்டுமே வந்தது. மீதமுள்ள, 847 கோடி ரூபாயை பெற முயற்சி நடந்து வருகிறது.
இத்திட்டத்துக்கான நிதி குறைப்பானது, கடந்த ஆண்டிலேயே நடைமுறைக்கு வந்து விட்டது. கடந்த, 2023 - 24 பட்ஜெட்டில், 21,684 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு முழுமையாக செலவு செய்யப்பட்டது.
அதன்பின், 2024 - 25 பட்ஜெட்டில், 30,171 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், திருத்தப்பட்ட மதிப்பீடுகளில், இத்தொகை, 13,670 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் தான், வரும் நிதியாண்டுக்கு, 19,794 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட் அறிவிப்புடன் ஒப்பிட்டு பார்த்தால், 34 சதவீதம் நிதி ஒதுக்கீடு குறைந்துள்ளது.
திருத்தப்பட்ட மதிப்பீடுடன் ஒப்பிட்டால், சற்று கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி குறைப்பு காரணமாக, தமிழகத்துக்கு வர வேண்டிய, 847 கோடி ரூபாய் நிலுவை தொகை கிடைப்பது கேள்விக்குறியாகி உள்ளது.
இதனால், தமிழகத்தில், 19,000 வீடுகள் கட்டும் பணியை துவக்கப்போவது கேள்விக்குறியாகி உளளது. நிலுவை தொகையை பெறுவதற்கான நடவடிக்கைகள் குறித்து, உயர் நிலை ஆலோசனை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.