/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
சிறை துறையை மிரட்டி காரியம் சாதிக்கும், ' கான்ட்ராக்டர்! '
/
சிறை துறையை மிரட்டி காரியம் சாதிக்கும், ' கான்ட்ராக்டர்! '
சிறை துறையை மிரட்டி காரியம் சாதிக்கும், ' கான்ட்ராக்டர்! '
சிறை துறையை மிரட்டி காரியம் சாதிக்கும், ' கான்ட்ராக்டர்! '
PUBLISHED ON : பிப் 24, 2025 12:00 AM

இஞ்சி டீயை உறிஞ்சியபடியே, ''நாட்டுக்கோழி தான் வேணும்னு அடம் பிடிச்சிருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''யாருவே அது...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''கோவையில், போலீஸ் துணை கமிஷனரின் ஸ்பெஷல் டீம்ல இருந்த தனிப்பிரிவு எஸ்.ஐ., ஒருத்தர், சமீபத்துல, 'சரக்கு' அடிக்க ஒரு பாருக்கு போயிருக்காரு... அங்க போய், 'சைட் டிஷ்'ஷா நாட்டுக் கோழி வறுவல் தான் வேணும்னு அடம் பிடிச்சிருக்காருங்க...
''பார் ஊழியர்கள், 'சார், எங்களிடம் பிராய்லர் கோழி தான் இருக்கு'ன்னு சொல்லியிருக்காங்க... ஆனாலும், விடாத எஸ்.ஐ., 'எனக்கு இப்பவே நாட்டுக்கோழி வறுவல் வேணும்... இல்லாட்டி பாரே நடத்த முடியாது'ன்னு அலப்பறை பண்ணிட்டாருங்க...
''அதுவும் இல்லாம, ஒரு முக்கிய பிரமுகருக்கும் போன் போட்டு பேசி, கெத்தை காட்டி யிருக்காரு... நீலகிரியில் வேற ஒரு பிரிவுல இருந்து அயல் பணியா இங்க வந்துட்டு, அதிகாரிகளிடம், தனக்கு பெரிய அளவில், 'சோர்ஸ்' இருக்கிறதா அளந்து விட்டுட்டு வலம் வர்றாரு...
''இவர் சொல்றதை உயர் அதிகாரிகளும் நம்பிட்டு இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''கார்த்திக், இந்த பேப்பரை அங்க வைங்க...'' என்ற அன்வர்பாயே, ''கூடுதல் தொகைக்கு பைல் தயார் பண்ண சொல்லி நெருக்கடி தர்றாங்க பா...'' என்றார்.
''எந்த துறையிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''சென்னை, பெரம்பூர் பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில், 110 கோடி ரூபாய்ல, 500 படுக்கைகள் கொண்ட புதிய கட்டடம் கட்டும் பணி நடந்துட்டு இருக்கு... இந்த கட்டடத்துல, 70 லட்சம் ரூபாய் மதிப்பில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ஏற்கனவே முடிவு செஞ்சிருக்காங்க...
''ஆனா, 'இந்த தொகை பத்தாது... கூடுதலா, 50 லட்சம் ரூபாய் தேவை'ன்னு பைல் தயார் பண்ணி தரும்படி பொதுப்பணித் துறையின் எலக்ட்ரிக்கல் பிரிவு பெண் அதிகாரி, தனக்கு கீழே பணிபுரியும் அதிகாரிக்கு நெருக்கடி தந்திருக்காங்க பா...
''அவரோ, 'வேணும்னா, 15 லட்சம் ரூபாய் கூடுதலா கேட்கலாம்... 50 லட்சம் ரூபாய் கேட்டு பைல் அனுப்புனா, எதிர்காலத்துல சிக்கல் ஏற்படும்'னு மறுக்க, ரெண்டு பேருக்கும் பனிப்போர் ஓடுது பா...'' என்றார், அன்வர்பாய்.
''என்கிட்டயும் இந்த மாதிரி ஒரு தகவல் இருக்கு ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''தமிழகத்துல, அனைத்து சிறைகளுக்கும் தேவையான உபகரணங்கள், கைதிகளுக்கு தேவையான பொருட்களை சப்ளை செய்ற கான்ட்ராக்டரின் அதிகாரம், துறைக்குள்ள கொடி கட்டி பறக்கறது...
''அதிகார மையத்தின் பெரிய புள்ளியின் பெயரை சொல்லி, 'இது, அவருடைய கம்பெனி தான்'னு நா கூசாம பொய்யை அள்ளி விடறார் ஓய்...
''இதன் மூலமா அதிகாரிகளை எல்லாம் மிரட்டி, தனக்கு வேண்டிய காரியங்களை கச்சிதமா முடிச்சுக்கறார்... இவரை பார்த்து, சிறைத்துறை அதிகாரிகள், 'பெரிய இடத்து பொல்லாப்பு நமக்கேன்'னு பயந்து, அவர் கேக்கறதை எல்லாம் உடனுக்குடன் செய்து குடுத்துடறா...
''இதுல, பெரிய வேடிக்கை என்னன்னா, இதே கான்ட்ராக்டர் தான், கடந்த, அ.தி.மு.க., ஆட்சியிலும், சிறைத்துறையில இதே செல்வாக்குடன் கோலோச்சிட்டு இருந்தார் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.

