/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கூடுதல் பொறுப்பால் திணறும் கூட்டுறவு அதிகாரிகள்!
/
கூடுதல் பொறுப்பால் திணறும் கூட்டுறவு அதிகாரிகள்!
PUBLISHED ON : மே 11, 2024 12:00 AM

''அடிக்கடி ஆடியோ வெளியாகி, கட்சி மானம் கப்பலேறுதுல்லா...'' என்றபடியே நண்பர்கள் நடுவில் அமர்ந்தார், பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த கட்சி விவகாரம் பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''தி.மு.க.,வுல தான்... லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி, ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க., செயலர் நல்லசிவத்துக்கு பவானி ஒன்றியம், பெரியபுலியூர் வார்டு செயலர் ரமேஷ் போன் போட்டு, 'கட்சியினருக்கும், ஓட்டுக்கும் பணம் குடுக்கணும்... தலைமை அனுப்பிய பணத்தை தாங்க'ன்னு கேட்டு வாக்குவாதம் செஞ்சாரு வே...
''கடைசியா நல்ல சிவம், 'பணம் தர முடியாது... என்ன செய்யணுமோ செஞ்சுக்க'ன்னு சொல்லிட்டாரு... அடுத்து, பவானி தெற்கு ஒன்றிய செயலர் துரைராஜுக்கு போன் போட்ட ரமேஷ், அவர்கிட்டயும் பணம் கேட்டு மோசமான வார்த்தைகளால திட்டுனாரு வே...
''இந்த ரெண்டு ஆடியோவும் வெளியாகி, பரபரப்பாச்சு... இப்ப, சமீபத்துல பூந்துறை சேமூர் பஞ்சாயத்து தலைவர் தங்கதமிழ்செல்வன் தனியா பேசிய ஒரு ஆடியோ வெளியாச்சு வே...
''அதுல, 'அமைச்சர் முத்துசாமியை கைக்குள்ள வச்சுக்கிட்டு, முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனை, மொடக்குறிச்சி ஒன்றிய செயலர் குணசேகரன் தான் தோற்கடிச்சாரு... அது சம்பந்தமான வீடியோ, ஆடியோ பேச்சுகள் என்கிட்ட இருக்கு...
''அவல்பூந்துறை குளத்தை துார்வாரியதுல, குணசேகரன் பல கோடி வாங்கிட்டாரு... அவருக்கு முத்துசாமி உடந்தையா இருக்கார்'னு பேசியிருந்தாரு வே...
''இதனால, மாவட்டத்துல தி.மு.க., மானம் போயிட்டு இருக்கு... இந்த விவகாரத்தை தலைமையும் கண்டுக்காம இருக்கிறதால, இந்த மாதிரி இன்னும் பல ஆடியோக்களை வெளியிட சிலர் தயாராகிட்டு இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''மாற்று கட்சியினரை இழுத்து போடுறாருங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''தேர்தலுக்கு சில நாட்கள் முன்னாடி, அ.தி.மு.க., - ஐ.டி., அணியின் மாநில இணை செயலர் நிர்மல்குமார் ஏற்பாட்டுல, மதுரை, உசிலம்பட்டி நகராட்சி தலைவர் சகுந்தலா மற்றும் தி.மு.க., - பா.ஜ., நிர்வாகிகள் பலர் அ.தி.மு.க.,வுல சேர்ந்தாங்க...
''இப்ப, த.மா.கா., தென்சென்னை மாவட்ட செயலர் பட்டுக்கோட்டை பூபதி, மயிலாப்பூர் பகுதி தலைவர் கோபிநாதன் ஆகியோரை, பழனிசாமி முன்னிலையில சேர்த்திருக்காருங்க... இன்னும் பலருக்கு துாண்டில் போட்டுட்டு, காத்துட்டு இருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''ஒரே அதிகாரியிடம் எல்லாத்தையும் குடுத்திருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''எந்த துறையில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''கூட்டுறவு துறையில் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம், நுகர்வோர் பணிகள், நிதி மற்றும் வங்கியியல், மாநில தலைமை கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பல பிரிவுகள் இருக்கு... இவை எல்லாம், தலா ஒரு கூடுதல் பதிவாளரின் கீழ் செயல்படறது ஓய்...
''இப்படி மொத்தம் 12 கூடுதல் பதிவாளர்கள் இருக்கா... அவாளுக்கு கீழ பதிவாளர்கள் இருப்பா... இப்ப, ரெண்டு, மூன்று கூடுதல் பதிவாளர்களுக்கு, ஒரு தனி கூடுதல் பதிவாளர் கவனிக்க வேண்டிய பொறுப்புகளை வழங்கியிருக்கா ஓய்...
''அவா எல்லாம், அந்த பிரிவுகள்ல கவனம் செலுத்த முடியாம திணறிண்டு இருக்கா... 'முக்கிய பிரிவுகள்ல இருக்கற சில அதிகாரிகள், திறமையா செயல்பட மாட்டேங்கறா... திறமையான அதிகாரிகள் ஓரங்கட்டப்பட்டிருக்கா'ன்னு துறைக்குள்ள பலரும் புலம்பறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பேச்சு முடிய, பெரியவர்கள் நகர்ந்தனர்.