/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஐ.ஏ.எஸ்.,கள் வட்டாரத்தில் அதிருப்தி குரல்கள்!
/
ஐ.ஏ.எஸ்.,கள் வட்டாரத்தில் அதிருப்தி குரல்கள்!
PUBLISHED ON : ஜூலை 06, 2024 12:00 AM

நாளிதழை மடித்தபடியே, ''பதவி உயர்வு கிடைக்காம விரக்தியில இருக்காங்க...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''எந்த துறையில பா...'' என, விசாரித்தார் அன்வர்பாய்.
''சேலம் மின் பகிர்மான வட்டத்தில், ஐந்து செயற்பொறியாளர் அலுவலகங்கள் இருக்கு... இதுல, 1,800க்கும் மேற்பட்டோர் பணியில இருக்காங்க... இவங்கள்ல உதவியாளர்கள், ஒயர்மேன் பதவிக்கும், ஒயர்மேன்கள், லைன் இன்ஸ்பெக்டர் பதவிக்கும், லைன் இன்ஸ்பெக்டர்கள், போர்மேன் பதவி உயர்வுக்கும் காத்திருக்காங்க...
''லோக்சபா தேர்தல் வந்ததால, நாலு மாசமா யாருக்கும் பதவி உயர்வு தரல... இப்ப, புதுசா பணி மூப்பு பட்டியல் தயாரிச்சு, பதவி உயர்வு வழங்கணுமாம்... இதனால, இன்னும் ஆறு மாசத்துக்கு பதவி உயர்வு தள்ளி போகும்னு சொல்றாங்க...
''அந்த ஆறு மாசத்துக்குள்ள பலர் ஓய்வு பெறும் நிலையில இருக்கிறதால, 'பதவி உயர்வுடன், சம்பள உயர்வும் இல்லாம போயிடுமே'ன்னு அவங்க கவலைப்படுறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''உல்லாசம் மற்றும் ஊழல்ல புகுந்து விளையாடுதாரு வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''திருச்சி மாவட்டத்துல இருக்கிற ஒரு போலீஸ் ஸ்டேஷன்ல எஸ்.பி., தனிப்பிரிவுல இருக்கிறவர், பெண் போலீசாரை அரட்டி, மிரட்டி, தன் வழிக்கு கொண்டு வர்றதுல கில்லாடியாம்... சமீபத்துல, ஸ்டேஷன்லயே ஒரு பெண் போலீசுடன் இவர் சில்மிஷத்துல ஈடுபட்டதை, சக போலீசார் பார்த்து, எஸ்.பி.,க்கு புகார் அனுப்பியிருக்காவ வே...
''இது போக, தனிப்பிரிவு அதிகாரியும், ஸ்டேஷன் அதிகாரி ஒருத்தரும் சேர்ந்து, ரேஷன் அரிசியை மொத்தமா வாங்கி, அரிசி கடத்தும் வியாபாரிக்கு விற்பனை பண்ணுதாவ... இது பத்தியும் எஸ்.பி.,க்கு புகார் போயிருக்கு வே...
''ஆனா, புகார்ல சிக்கியவரும், எஸ்.பி., தனிப்பிரிவுல இருக்கிற பெண் அதிகாரியும் ஒரே சமூகமா இருக்கிறதால, அந்த பெண் அதிகாரி, புகார்களை எஸ்.பி., கவனத்துக்கே எடுத்துட்டு போறது இல்ல... இதனால, 'இவரது வண்டவாளங்களை எப்படி எஸ்.பி.,யிடம் கொண்டு போறது'ன்னு ஸ்டேஷன் போலீசார் தலையை பிய்ச்சிட்டு இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''வாங்க மோகன், காபி சாப்பிடுங்கோ...'' என, நண்பரை வரவேற்ற குப்பண்ணாவே, ''அதிகாரிகள் வருத்தத்துல இருக்கா ஓய்...'' என்றார்.
''அவங்களுக்கு என்னப்பா பிரச்னை...'' என கேட்டார், அன்வர்பாய்.
''கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், முக்கிய துறைகளின் செயலர் உள்ளிட்ட அதிகாரம் மிக்க பதவிகள்ல இருந்த அதிகாரிகளே, இந்த ஆட்சியிலும் முக்கிய பதவிகள்ல இருக்கா... ஒவ்வொரு முறை ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் டிரான்ஸ்பர் நடக்கறச்சேயும், தங்களுக்கு முக்கிய பதவி கிடைக்கும்னு மற்ற அதிகாரிகள் எதிர்பார்க்கறா ஓய்...
''ஆனா, 'அ.தி.மு.க., ஆட்சியில் செல்வாக்கா இருந்த அதிகாரிகளுக்கே மறுபடியும், 'கீ போஸ்ட்'களை குடுத்துடறா... முக்கிய துறைகள்ல இருக்கற அதிகாரிகள், தங்களுக்குள், 'சிண்டிகேட்' அமைச்சு செயல்படறா... இதனால, அவாளை அசைக்கவே முடியல... இதெல்லாம் முதல்வருக்கு தெரியுமா'ன்னு, ஐ.ஏ.எஸ்.,கள் வட்டாரத்துல அதிருப்தி குரல்கள் கேக்கறது ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
அரட்டை முடிய, பெரியவர்கள் புறப்பட்டனர்.