/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஊட்டியில் ஓய்வெடுக்கும் தி.மு.க., புள்ளிகள்!
/
ஊட்டியில் ஓய்வெடுக்கும் தி.மு.க., புள்ளிகள்!
PUBLISHED ON : மே 03, 2024 12:00 AM

''மாவட்ட செயலர்களை கண்டிச்சு அனுப்பியிருக்காரு பா...'' என்றபடியே வந்தார், அன்வர்பாய்.
''எந்த கட்சி விவகாரம் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''போன வாரம் முழுக்க, சென்னையில முதல்வரை கட்சி நிர்வாகிகள் வரிசையா சந்திச்சு பேசினாங்கல்ல... இதுல, கோவை மாநகர் மற்றும் தெற்கு, வடக்கு மாவட்ட செயலர்களான கார்த்திக், தளபதி முருகேசன், ரவி ஆகியோரும் முதல்வரை பார்த்தாங்க பா...
''அவங்களிடம், 'கோவையில பா.ஜ.,வுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதா உளவுத்துறை அறிக்கை வந்திருக்கு... மாற்று கட்சியில இருந்து வந்தவங்களை, தேர்தல் பணிகள்ல நீங்க அரவணைக்கவே இல்லையாம்... சட்டசபை தொகுதி வாரியா எவ்வளவு செலவு செஞ்சீங்க'ன்னு பல விபரங்களை கேட்டிருக்காரு...
''கடைசியா, 'கோவையில நமக்கு வெற்றி கிடைக்கலைன்னா, உங்க பதவிகள் பறிக்கப்படும்'னு கண்டிப்பா சொல்லி அனுப்பிட்டாரு... மூணு பேரும் திகிலடிச்சு போய் திரும்பியிருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''பக்கத்து மாவட்ட திருப்பூர் கதையை கேளுங்க வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க.,வுக்கு, மேலிடம் சில கோடிகளை தேர்தல் செலவுக்கு குடுத்துச்சு... திருப்பூர்ல கூட்டணி கட்சியான இந்திய கம்யூ., வேட்பாளரா சுப்பராயன் போட்டியிட்டதால, வாக்காளர்களுக்கு பட்டுவாடா பண்ற பொறுப்பை, மாவட்ட முக்கிய புள்ளி தான் கவனிச்சிக்கிட்டாரு வே...
''அவரது கட்டுப்பாட்டுல இருந்த அவிநாசி, வடக்கு, தெற்கு, பல்லடம்னு நாலு ஏரியாக்கள்ல, நிறைய பேருக்கு பட்டுவாடா பண்ணாமலே பண்ணியதா கணக்கு காட்டிட்டாரு... மாவட்ட புள்ளியின் ஆதரவாளரான தெற்கு மாவட்ட புள்ளி ஒருத்தரும், முக்கால்வாசி பணத்தை பாக்கெட்டுல போட்டுக்கிட்டாரு வே...
''இப்ப, ஓட்டு சதவீதம் குறைஞ்சிட்டதால, மேலிடம் இவங்களிடம் கணக்கு கேட்டுட்டு இருக்கு... இவங்களும், தங்களது கட்சி பதவிகள் பறிபோயிடுமோன்னு கலக்கத்துல இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''எல்லாரும் ஊட்டிக்கு போயிட்டாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''அடிக்கிற வெயிலுக்கு அங்க போறது நல்லது தான ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''நீலகிரியில போட்டி யிட்ட தி.மு.க., சிட்டிங் எம்.பி., ராஜா, தன் சொந்த ஊரான பெரம்பலுார் மாவட்ட தி.மு.க., வினரை அங்க தேர்தல் பணிக்கு அழைச்சிட்டு போயிருந்தாருங்க... ஏப்ரல் 17ம் தேதி பிரசாரம் முடிஞ்சதும், அவங்க எல்லாம் பெரம்பலுார் திரும்பிட்டாங்க...
''இப்ப, அவங்க எல்லாம் ஒவ்வொரு குழுவா ஊட்டியில ராஜா செலவுல முகாமிட்டிருக்காங்க... அவங்களுக்கான சுற்றுலா ஏற்பாடுகளை எல்லாம் பண்ணி குடுத்துட்டு, ராஜா ஓய்வெடுக்க லண்டனுக்கு போயிட்டாருங்க...
''இதுக்கு இடையில, துாத்துக்குடியைச் சேர்ந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், திருநெல்வேலி தொகுதிக்கு தேர்தல் பொறுப்பாளரா இருந்தாரு... இவரும், தன் ஆதரவாளர்கள் சிலருடன் ஊட்டிக்கு போயிட்டாருங்க... அதுலயும், தன் சமுதாயத்தை சேர்ந்தவங்களா பார்த்து ஊட்டிக்கு கூட்டிட்டு போயிருக்காருன்னு தி.மு.க.,வுல ஒரு தரப்பு புலம்பிட்டு இருக்குதுங்க...'' என முடித்தார் அந்தோணிசாமி.
பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.