/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
பதவி முடிவதால் பஞ்., தலைவர்கள் தீவிர வசூல்!
/
பதவி முடிவதால் பஞ்., தலைவர்கள் தீவிர வசூல்!
PUBLISHED ON : ஆக 27, 2024 12:00 AM

''கனிமவளங்கள் கொள்ளை போயிட்டு இருக்குதுங்க...'' என்றபடியே, இஞ்சி டீயை உறிஞ்சினார் அந்தோணிசாமி.
''எந்த ஊருல பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''ராமநாதபுரம் மாவட்டத்தில், பொதுப்பணி மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் கட்டுப்பாட்டில் இருக்கிற கண்மாய்கள், ஊருணிகள்ல விவசாய பணி, மண்பாண்ட தயாரிப்புக்கு கனிமவள துறை அனுமதியுடன் வண்டல், களிமண் எடுத்துக்கலாம்...
''இதுல சிலஇடங்கள்ல தரமான மணலும் கிடைக்கிறதால, ஆளுங்கட்சியினர் கைவரிசையை காட்டுறாங்க... சமீபத்துல, ராமநாதபுரத்துல மணல் திருடிய சிலரை கேணிக்கரை போலீசார் கைது செஞ்சப்ப,'நகராட்சி தி.மு.க.,முக்கிய புள்ளியின் மகன் சொல்லி தான் கடத்துனோம்'னு வாக்குமூலம் தந்தாங்க...
''போலீசாரும், முக்கிய புள்ளி மகன் மேல வழக்கு மட்டும் பதிவு செஞ்சாங்களே தவிர, அவரை கைது செய்யல... இதே மாதிரி, திருப்புல்லாணி, பெரியப்பட்டினம் பகுதி ஊருணிகள்லயும் தி.மு.க., புள்ளிகள் மண்ணை கடத்தி பல லட்சம் ரூபாயை சம்பாதிக்கிறாங்க... வருவாய், கனிமவளம், போலீசார்னு பல துறை அதிகாரிகளும், அவங்களுக்கு ஆதரவா இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''என்கிட்டயும் ஒரு மண் கடத்தல் மேட்டர் இருக்கு ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''ஆந்திர மாநிலம், சிறுவனம் புதுார் கிராமத்துல, செம்மண் குவாரி இருக்கு... இங்க இருந்து உரிய அனுமதி இல்லாம, தமிழகத்துக்கு செம்மண் கடத்தி வரா ஓய்...
''அதாவது, ஆந்திரா அரசின் காலாவதியான பர்மிட்டை வச்சுண்டு, மண்ணை இங்க கொண்டு வந்துடறா... இதனால, தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படறது ஓய்...
''திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை போலீசார் சமீபத்துல சூளைமேனி பகுதியில, தீவிர வாகன சோதனை நடத்தினா... அப்ப, செம்மண் ஏற்றி வந்த மூணு லாரிகளை மடக்கி பிடிச்சா ஓய்...
''இதுல ஒரு லாரி டிரைவர் தப்பி ஓடிட்டார்... ரெண்டு பேர் மட்டும் தான் சிக்குனா... மாநில எல்லையில, அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தணும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''பயனாளிகளை மிரட்டுதாவ வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த துறையில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''திருவள்ளூர்மாவட்டத்தின் பிரபல முருகன் கோவில் ஊர் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டுல, 27 ஊராட்சிகள் இருக்கு... 100 நாள் வேலை திட்டத்துக்கு அடையாள அட்டை கேட்டு, பயனாளிகள் ஒன்றிய அலுவலகத்துல விண்ணப்பிக்காவ வே...
''அங்க இருக்கிறஅதிகாரிகளும், அடையாள அட்டை வழங்க பரிந்துரை செய்து, ஊராட்சி தலைவர்களுக்கு அனுப்புதாவ... ஆனா, ஊராட்சி தலைவர்கள், பயனாளிகளை கூப்பிட்டு, 'எங்களிடம் விண்ணப்பம் தராம, நேரா ஒன்றிய ஆபீஸ்ல குடுத்துட்டா, உங்களுக்கு அட்டை தந்துடணுமா'ன்னு மிரட்டுதாங்க வே...
''அதுவும் இல்லாம, 'அட்டை வாங்கிட்டாலும், வேலை நாங்க தானே தரணும்... 2,000 - 3,000 ரூபாய் வெட்டுனா தான் அட்டை'ன்னு சொல்லிடுதாவ... இன்னும் மூணு மாசம் தான் ஊராட்சி தலைவர்களுக்கு பதவி இருக்கிறதால, எல்லாரும் கடைசி கட்ட வசூல்ல கண்ணும், கருத்துமா இருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
அரட்டை கச்சேரி முடிய, அனைவரும் நகர்ந்தனர்.

