நடிகர் கட்சியில் இருந்து ஓட்டம் பிடிக்கும் நிர்வாகிகள்!
நடிகர் கட்சியில் இருந்து ஓட்டம் பிடிக்கும் நிர்வாகிகள்!
PUBLISHED ON : ஏப் 30, 2026 12:00 AM

ஏ லக்காய் டீயை பருகியபடியே, ‘‘அ.தி.மு.க.,வினர் எல்லாம் வெறுத்து போயிருக்காங்க பா...’’ என, அரட்டையை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
‘‘எதுக்கு வே...’’ என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
‘‘தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், விருதுநகர் மாவட்டம், சாத்துார்ல போட்டியிட்டாரே... தொகுதியில் இருக்கிற முக்கிய புள்ளிகளை சந்திச்சு ஆதரவு திரட்டியவர், அ.தி.மு.க.,வினரை கண்டுக்கவே இல்ல பா...
‘‘அதேபோல, வாக்காளர்களுக்கான பண பட்டுவாடாவிலும், அ.தி.மு.க., ஒன்றிய, நகர, வார்டு செயலர் களை நம்பாம, தன் உறவினர்களை விட்டே வினியோகம் பண்ணி முடிச்சுட்டாரு... இதனால, நயினார் மீது அ.தி.மு.க., நிர்வாகிகள் கடுப்புல இருக்காங்க பா...’’ என்றார், அன்வர்பாய்.
‘‘கோவையில நடந்த ஒரு காமெடியை கேளுங்கோ ஓய்...’’ என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
‘‘கோவையில், எல்லா தொகுதிகள்லயும் தி.மு.க., சார்பில் ஓட்டுக்கு தலா, 2,000 ரூபாய் குடுத்தா... முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போட்டியிட்ட தெற்கு தொகுதியில மட்டும், 5,000 ரூபாயை அள்ளி விட்டா ஓய்...
‘‘ஆனாலும், நிறைய இடங்கள்ல கட்சியினர் பணத்தை பதுக்கிட்டதா புகார்கள் வந்திருக்கு... இந்த சூழல்ல, உக்கடம் பக்கத்துல இருக்கற போலீஸ் ஸ்டேஷனுக்கு தி.மு.க., கவுன்சிலர் ஒருத்தர், சமீபத்துல வந்திருக்கார் ஓய்...
‘‘போலீசாரிடம், ‘ஓட்டுக்கு பட்டுவாடா பண்ண வச்சிருந்த பணம், 63 லட்சம் ரூபாயை காணல... புகார் தர்றேன்... வழக்கு பதிவு பண்ணுங்க’ன்னு சொல்லியிருக்கார் ஓய்.. .
‘‘அதிர்ச்சியான போலீசார், ‘அப்படி எல்லாம் வழக்கு போட முடியாது’ன்னு மறுத்திருக்கா... கவுன்சிலரோ, ‘சார், பணத்தை நான் அமுக்கிட்டதா பழி போட்டுருவாங்க... கட்சி நிர்வாகிகளுக்கு நான் கணக்கு காட்டணும்’னு புலம்பியிருக்கார் ஓய்...
‘‘போலீசாரும் வழக்கு பதிவு பண்ணாம விசாரணை நடத்தி, பணப்பையை கண்டுபிடிச்சுட்டா... அதுல, 57 லட்சம் ரூபாய் தான் இருந்திருக்கு... கவுன்சிலரும், ‘இதாவது தேறுச்சே’ன்னு பேக்கை வாங்கிண்டு கிளம்பிட்டார் ஓய்...’’ என்றார், குப்பண்ணா.
பெஞ்சில் அமர்ந்த நண்பரிடம், ‘‘என்ன மனோகரன்... மார்க்கெட் போயிட்டு வர்றீங்களா...’’ என, விசாரித்த அந்தோணிசாமியே, ‘‘கட்சியை விட்டே போறேன்னு கடிதம் அனுப்பிட்டாருங்க...’’ என்றார்.
‘‘எந்த கட்சியை விட்டு, யாருவே போக போறா...’’ என கேட்டார், அண்ணாச்சி.
‘‘நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பிலும், சட்டசபை தேர்தலுக்கு விருப்ப மனுக்கள் வாங்கினாங்கல்ல... அந்த கட்சிக்கு தி.மு.க., சீட்களே ஒதுக்காததால, விருப்ப மனு கட்டணத்தை நிர்வாகிகள் திரும்ப வாங்கிக்கலாம்னு அறிவிச்சிருந்தாங்க...
‘‘ஆனா, அறிவிப்போட சரி... யாருக்கும் பணத்தை திருப்பி குடுத்த மாதிரி தெரியல... இந்த சூழல்ல, அந்த கட்சியின் கோவை மண்டல நிர்வாகி ஒருத்தர், ‘வேலைப்பளு காரணமா, கட்சி பணியை தொடர முடியாத சூழல்ல இருக்கேன்... என்னை கட்சியில் இருந்து விடுவிச்சிடுங்க’ன்னு தலைமைக்கு கடிதம் அனுப்பியிருக்காருங்க...
‘‘அதே மாதிரி, தி.மு.க.,விடம் கட்சியை அடகு வச்சுட்டதா சொல்லி, அந்த கட்சியினர் நிறைய பேர், கட்சியில் இருந்து சத்தம் காட்டாம விலகிட்டு இருக்காங்க...’’ என முடித்தார், அந்தோணிசாமி.
‘‘ரங்கநாதன், இங்கன உட்காரும்...’’ என்றபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
